திராவிடர் கழகக் கொடி தயாரிக்க ரத்தம் கொடுத்த கலைஞர்!

நூல் வாசிப்பு:

தி.க. கொடி உருவானபோது உடனிருந்தவரான தவமணி ராசன், 11.01.1995-ல் மூத்த எழுத்தாளர் க.திருநாவுக்கரசுக்கு எழுதிய கடிதம்.

பேரன்புடையீர்,

வணக்கம், தங்களின் 09.01.1995 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். மகிழ்ச்சி.

கடலூர், தென்னாற்காடு மாவட்ட நீதிக்கட்சி மாநாட்டில் நான் தராசுக் கொடியை ஏற்றினேன். அப்போது “இன்றும் தராசுக் கொடி நமக்குத் தேவையா? தேவைக்கேற்ப கொடியை மாற்றக்கூடாதா?” எனக்கேட்டு கொடி ஏற்றி வைத்தேன். அவ்விதத்திலேயே ஐயா அதனை ஏற்றுக் கொண்டார்கள். கரூர் பொதுக்கூட்டத்தில் ஐயா அவர்கள் “கொடியை எப்படி மாற்றலாம், அக்கொடி நம் இழிவை போக்கும் கருத்தைக் காட்டுவதாய் அமையலாமே” என பேசிய செய்தி வந்தது.

அந்தப் பேச்சை செய்தித்தாளில் படித்த நண்பர் ஈரோடு சண்முக வேலாயுதம் அவர்கள், ஐயா கருத்துப்படி கருப்புக் கலரும், அதனை நீக்க இரத்தம் சிந்துவோம் என சிகப்புக் கலரும் இருக்கலாமென எண்ணி எவரிடமும் கலவாது தானே ஒரு கருப்புக் கலர் ‘பிளாக்’ மட்டும் செய்து கொண்டு ‘குடி அரசு’ அலுவலகத்தில் என்னிடம் கொடுத்தார்.

உடனே நான் ‘குடிஅரசு’ அச்சகத்திலேயே அதனை அச்சிடச் செய்தேன். நண்பர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தம் பெருவிரலில் ஒரு குண்டூசியால் குத்தி ஒரு சொட்டு இரத்தம் எடுத்து அந்த வட்டத்தில் வைத்தார்.

அதனை நான் ஐயாவிற்கு விவரமாக எழுதி, மாதிரி அச்சிட்ட கொடியை இணைத்து அனுப்பினேன். அந்தக் கொடியை ஐயா ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே கொடி உருவான கருத்து நண்பர் திரு.ஈரோடு சண்முக வேலாயுதம் அவர்களுடையது. மாதிரி கொடி தயாரிக்க இரத்தம் கொடுத்தது கலைஞர் என்பதும் உண்மை.

ஆகவே கொடியை ஐயாவின் எண்ணப்படி உருவாக்கிய பெருமை நண்பர் திரு.ஈரோடு சண்முக வேலாயுதம் அவர்களையே சார்ந்தது.

கரூர் பேச்சில் கொடி மாற்ற கருத்து கூறும்படி பொதுமக்களைக் கேட்டிருந்தார்கள்.

தங்களுக்கும், தங்களைச் சார்ந்தவர்களுக்கும் வணக்கம்.

தங்கள் அன்புள்ள
S.தவமணி இராசன்

நன்றி:க.திருநாவுக்கரசு எழுதிய ‘தி.மு.க. பிரச்சனைகளும் பிளவுகளும்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

13.02.2021 03 : 35 P.M

You might also like