மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தருவதாக இருந்தால் வா!

மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் போக்கு அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி துவங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரை பலரிடமும் தொடர்ந்திருக்கிறது. என்னதான் கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தங்களுடைய மாநிலம் சார்ந்த அடிப்படைத் தேவைகளுக்கு இவர்கள் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை. அதன் விளைவுகளுக்கும் அச்சப்பட்டதில்லை.

உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தபோது தமிழகம் சார்பாக ஒலித்த அவருடைய உரிமைக்குரல் கீழே.

****

சென்னையில் 09.01.1984 அன்று நடந்த மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் பற்றிய கருத்தரங்கில் எம்.ஜி.ஆர் பேசியதன் ஒரு பகுதி இங்கே:

“இங்கே ஒவ்வொன்றுக்கும் இரு இலாக்காக்கள் இருக்கின்றன. இங்கே ஒரு கல்வி இலாகா, மத்தியில் ஒரு கல்வி இலாகா.

இங்கே ஒரு போலீஸ், மத்தியில் ஒரு போலீஸ்.

இதைவிட இன்னொன்று, நாம் கொண்டு போய் பணத்தைக் கொடுக்கிறோம். பின்பு அவர்களிடம் கை நீட்டி வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.

அதுவும் அங்கு ஒரு திட்டக்குழு, இங்கு ஒரு திட்டக்குழு.

தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பதை இங்குள்ள திட்டக் குழுவிடம் சொல்ல முடியுமா; மத்தியக்குழு தீர்மானிப்பதா? அந்தத் திட்டக்குழு ஏதாவது தீர்மானித்தால் கூட நிதியமைச்சரிடம் போக வேண்டும். “இவ்வளவு தான் பணம்” என்று அவர்கள் சொன்னால்,  “நாம் சரி” என்று வாங்கிக் கொண்டு வர வேண்டும்

இரட்டை ஆட்சி இப்போது இந்தியாவில் நடக்கிறதென்பதை நான் மனம்விட்டுச் சொல்வேன்.

ஒரு ஆட்சி ஆதிக்கம் செலுத்த விரும்பும் ஆட்சி; ஒரு ஆட்சி தொண்டு செய்ய விரும்பும் ஆட்சி.

மாநிலம் தனக்கு வாக்களித்த மக்களுக்குத் தொண்டு செய்ய விரும்புகிறது. ஆனால் அதற்கு அப்பால் ஒரு ஆட்சி இருந்து கொண்டு, “நீ இதைச் செய்தால் போதும்” என்று சொல்கிறது.

“வருமான வரியை நாங்கள் ஏன் எடுத்துக் கொள்கிறோம், என்றால் எல்லா மாநிலங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்; அதற்காகத்தான்!” என்கிறார்கள்.

அங்கே 10 பேர் பட்டினி கிடந்தால் இங்கு 10 பேர் பட்டினி கிடக்க வேண்டும். இங்கே பட்டினியைப் போக்க நாம் எதுவும் செய்யக்கூடாது, இது என்ன நியாயம்?

இந்த நிலைமையை அவர்கள் மாற்றியாக வேண்டும். ஒரே கட்சி ஆட்சிதான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, அது இந்த நாட்டுக்கு நல்லதல்ல.

அது இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாகக் கூற விரும்புகிறேன்.

பண்டிதர் நேரு காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் போல, பிரதமர் நிச்சயமாக ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற மாநிலங்களுக்கு நியாயமான அதிகாரங்களை வழங்க முன்வருவார்கள் என்று நான் மிகவும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கிறேன்.

சுயநலமில்லா நம்பிக்கை வெற்றி பெறும். “வன்முறையின் மூலமாகத்தான் இதைப் பெற முடியும்” என்ற நம்பிக்கையை அறிஞர் அண்ணா நமக்குச் சொல்லித்தரவில்லை.

“அறிவை வைத்துப் பிரச்சாரம் செய்து, மக்களிடம் உண்மையைச் சொல்லி, மக்கள் அதைத் தெரிந்துகொள்ளச் செய்துவிட்டோமேயானால் அது தானாக வரும்” என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

மக்கள் இனி கேட்க வேண்டும், “இனி தேர்தலுக்கு வருவதாக இருந்தால் இந்த உறுதியை – மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தருவதாக இருந்தால் வா, இல்லை என்றால் போ” என்று அரசியல் கட்சிகளை மக்கள் கேட்கக்கூடிய நிலைக்கு மக்களைத் தயார் செய்ய வேண்டும்.

எல்லோரும் ஒத்துழைத்தால் மக்களைத் தயார்படுத்த முடியும். முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை.!”

  • தமிழ் திசை வெளியீடான ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து…

10.02.2021    02 : 25 P.M

You might also like