‘க்ராக்’: மற்றுமொரு போலீஸ் ‘சிங்கம்’!
ஒரு நடிகருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளிப்பதற்கும், சரிந்த சந்தை மதிப்பை தூக்கி நிறுத்துவதற்கும் உறுதுணையாக இருப்பது போலீஸ் கதைகள்தான். ஆக்ஷனை நிரப்புவதற்கும், பக்கம் பக்கமாக ‘பஞ்ச் டயலாக்’ பேசுவதற்கும் அதுவே பக்கபலம்.
அந்த வரிசையில், ஒரு போலீஸ் அதிகாரியின் முரட்டுத்தனம் நிறைந்த ஆக்ஷன் பக்கங்களை காட்டுகிறது ரவி தேஜா, ஸ்ருதி ஹாசன், சமுத்திரக்கனி, வரலட்சுமி, ரவிஷங்கர் உள்ளிட்டோர் நடித்த ‘க்ராக்’. பொங்கல் வெளியீடாக வந்து தெலுங்கில் வாகை சூடிய இப்படம், சுடச்சுட ‘டப்’ செய்யப்பட்டு தற்போது தமிழில் வெளியாகியிருக்கிறது.
அதே பழைய கதை!
கறாரும் கண்டிப்பும் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி வீரசங்கர் (ரவி தேஜா) மனைவி கல்யாணி (ஸ்ருதி ஹாசன்) மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
எந்த நேரத்திலும் நிதானம் தவறாத வீரசங்கருக்கு ‘பேக்ரவுண்ட்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் கோபம் பொங்கும். உடனே, சம்பந்தப்பட்ட நபரை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவது அவரது ஸ்டைல்.
இதனால் போலீஸுக்கு கட்டுப்படாமல் வாழ்ந்து வரும் சர்வதேச தீவிரவாதி சலீம், ரவுடி கிடாரி கிருஷ்ணா (சமுத்திரக்கனி) ஆகியோர் சிறை தண்டனை பெறுகின்றனர்.
ஊரையே மிரட்டி தன் சட்டைப்பைக்குள் திணிக்கும் குணசேகரன் (ரவிஷங்கர்), தன் வீட்டு தோட்டத்தில் மாங்காய் பறித்த சிறுமி மீது வேட்டை நாய்களை ஏவுகிறார். இதனால், அவர் மீது வழக்கு பதிவாகிறது.
பத்தோடு ஒன்று என்று அது பற்றிக் கவலைப்படாமல் குணசேகரன் அசட்டையாக இருக்க, அந்த ஊருக்கு வீரசங்கர் மாற்றலாகி வரும் தகவலைக் கூறுகிறார் ஒரு போலீஸ் அதிகாரி. அதோடு, உடனடியாக கிருஷ்ணாவை சிறைக்குச் சென்று சந்திக்குமாறு ஆலோசனை அளிக்கிறார்.
வீரசங்கர் எப்படிப்பட்டவர் என்பதை கிருஷ்ணாவின் வாயால் கேட்டு கேட்டு, குணசேகரன் தனது ரவுடித்தனத்தை கைவிடுவது மீதிக்கதை.
எதிர்பார்ப்புக்கேற்ற திரைக்கதை!
ஒரு 50 ரூபாய் நோட்டின் மீது மாங்காய் வைக்கப்பட்டு, அதில் ஒரு ஆணியடிக்கப்பட்டிருப்பதை காட்டுவதில் இருந்து திரைக்கதை நகரத் தொடங்குகிறது. சில காட்சிகளின் பின்னணியில் இந்த மூன்று பொருட்களை வைத்து, மொத்த கதையையும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் கோபிசந்த் மலினேனி.
அதாகப்பட்டது, மூன்று குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தொடர்ந்து தப்பிய நிலையில் இந்தப் பொருட்களால் வீரசங்கரிடம் சிக்குகின்றனர். அது எப்படி என்பதை விளக்குகிறது திரைக்கதை.
வழக்கமான கமர்ஷியல் சினிமா கதை, காட்சிகள், திருப்பங்கள், கதாபாத்திர அமைப்பு என்றிருந்தாலும், அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கிய வகையில் வெற்றி பெறுகிறார் இயக்குனர். அதற்கேற்ப, முழுக்கதையும் வில்லன்கள் பார்வையிலேயே சொல்லப்படுகிறது.
அவர்களது பார்வையில் ஹீரோவும் ஹீரோயினும் எப்படி டூயட் பாடுவார்கள், ரொமான்ஸ் செய்வார்கள், தங்களது தனித்துவத்தை தேவைப்படும் இடங்களில் புட்டு புட்டு வைப்பார்கள் என்பது போன்ற லாஜிக் மீறல்கள் குறித்த கேள்விகளை எழுப்பாமல் இருந்தால், ‘க்ராக்’ போலீஸ் பவர் காட்டும் ஒரு கோங்குரா மசாலா என்பது பிடிபடும்.
திரைக்கதையில் வில்லன்கள் பேசுவதையும், ஹீரோ சாகசங்களில் சளைக்காமல் ஈடுபடுவதையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்வது, இப்படத்தைப் பார்க்க சரியான வழி.
கூட்டுழைப்பை காட்டும் பிரேம்கள்!
ஒரு ஆக்ஷன் படம் வழக்கமான கதையைக் கொண்டிருந்தாலும், தியேட்டரில் பார்க்கும்போது அந்த எண்ணத்தை மறக்கடிக்கும் அளவுக்கு காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை மனதில் கொண்டு, ஒவ்வொரு பிரேமின் பேக்ரவுண்டிலும் பல விஷயங்களை நிரப்பியிருக்கிறார் கோபிசந்த்.
இப்படத்தின் பெரும்பலம் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு இரவு நேர ஆக்ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறது அவரது கேமிரா. டிஐ, விஎஃப்எக்ஸ் என்று தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைந்து, ஒவ்வொரு பிரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.
ஓநாய் பாணி தாக்குதலை காட்டும் ராம்-லக்ஷ்மணின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன. அடியாட்களில் ஒருவராக ஸ்டண்ட் கொரியோகிராபர் ‘ஸ்டன்’ சிவா நடித்திருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
ரசிகர்கள் கொண்டாடும் ஒரு ஸ்டார் படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டுமென்பதில் ‘பக்கா’வாக இருக்கிறார் இசையமைப்பாளர் தமன்.எஸ். இப்படத்தில் பாடல்கள் துள்ளல் ரகம் என்றால், அதனை மிஞ்சும் வகையில் காட்சியோடு நம்மை ஒன்றச் செய்கிறது பின்னணி இசை.
நவீன் நூலியின் படத்தொகுப்பு இயக்குனரின் பார்வையைத் தாங்கிப் பிடிக்கிறது. ஏ.எஸ்.பிரகாஷின் கலையமைப்பு காட்சிகளை ‘ரிச்’சாக காட்ட உதவியிருக்கிறது.
முதல் வில்லனின் கதை சட்டென்று முடிந்துவிட, இரண்டாவது வில்லனின் கதை தொடங்கிய இடத்திலேயே நிற்க, மூன்றாவது வில்லனின் கதை விலாவாரியாகச் சொல்லப்படுகிறது. திரைக்கதையில் இயக்குனருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது நிம்மகடா ஸ்ரீகாந்த், மயூக் ஆதித்யா, பானினேனி ரவியின் உழைப்பு.
ஸ்ருதி ஹாசன், சமுத்திரக்கனி, வரலட்சுமி மற்றும் ரவிஷங்கர் ஆகியோர் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்தவர்கள் என்பதால் காட்சிகளோடு சட்டென்று ஒன்றிவிட முடிகிறது. தனக்கான முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்றிருக்கிற ஸ்ருதியின் முடிவுக்கு நியாயம் சேர்க்கிறது இத்திரைக்கதை. வரலட்சுமிக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்றபோது, படம் பார்க்கையில் அது ஒரு குறையாகத் தெரிவதில்லை.
திறமையான கலைஞர்கள், சிறப்பான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, ரசிகர்களைக் கவரும் மாஸ் காட்சிகளை மூன்று பொருட்களுக்குள் அடக்கிய திரைக்கதை லாவகம் என்று அனைத்தையும் ‘மசாலா சினிமா’ எனும் ஒற்றை நூலில் கட்டியிழுத்திருக்கிறார் இயக்குனர் கோபிசந்த் மலினேனி.
‘இப்படியெல்லாம் நடக்குமா, இதெல்லாம் சாத்தியமா, என்ன கொடுமை சார் இது’ என்பது போன்ற கமெண்ட்களை எல்லாம் அறவே அண்டவிடாமல் பார்த்துக்கொண்டால், ‘க்ராக்’ நல்ல பொழுதுபோக்கை அளிக்கும். அதாகப்பட்டது, இப்படத்தைப் பார்ப்பதற்கேற்ற மனம் கொண்டவர்களுக்கு இது மற்றுமொரு போலீஸ் ‘சிங்கம்’.
-உதய் பாடகலிங்கம்
08.02.2021 09 : 50 A.M