அன்புக்கு அர்த்தம் இவர்தான்!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர். தொடர்-23

ஏ.வி.எம்.சரவணன் அவர்களை எல்லோருக்கும் தெரியும். இவரை அநேக நேரங்களில் எனது அன்பு நாயகர் அழைக்கிற விதம் கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும். அவரை அவரது வீட்டில் உள்ள மூத்தவர்கள் “சரவணீ” என்று தான் கூப்பிடுவார்களாம்.

அது எப்படி இவருக்கு தெரிந்ததோ, என்றைக்குத் தெரிந்ததோ, தெரியவில்லை. ஒரு நாள் திடீரென்று அவரை “சரவணீ” என்று அழைத்தார். அவரும் ஆச்சரியப்பட்டார். கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ள அவர் என்னவரிடம் நெருங்கி, “சும்மா நீங்க என்னை சரவணன்னே கூப்பிடுங்க சார்” என்று சொல்லியிருக்கிறார்.

“உங்கள் சகோதரர்கள் உங்களை எப்படிக் கூப்பிடுகிறார்கள்? அப்படித்தானே நான் உங்களை அழைக்க முடியும்” என்று இவர் சொல்லி முடித்த பிறகு, சரவணன் அவர்கள் எந்தப் பதிலும் சொல்ல முடியாமல் அந்த அன்பில் கட்டுண்டு போனார்.

‘அன்பே வா’ படப்பிடிப்பின் போது என்று நினைக்கிறேன். எல்லோரும் சிம்லாவுக்குச் சென்றிருந்தோம். சரவணன் அவர்களுக்கு நல்ல தொண்டைக்கட்டு. உமிழ்நீரை விழுங்குவதற்குக்கூட அவ்வளவு பாடுபட்டார். “தொண்டையிலும் காதிலும் வலி” என்றார்.

படப்பிடிப்பு முடிந்து திரும்பும்போது சோலன் என்ற இடத்தில் ஒரு உணவு விடுதி அருகே காரை நிறுத்திவிட்டு எல்லோரும் சாப்பிடப் போனார்கள் சரவணனைத் தவிர.

சரவணனோ வந்த காரிலேயே கதவின் கண்ணாடிகளை எல்லாம் ஏற்றிவிட்டு பின்சீட்டில் கால் நீட்டிப் படுத்து விட்டார். படுத்தவரை நித்திரை அன்னை கொஞ்சம் தொட்டுப் பார்த்தாள்.

அந்த நேரத்தில்தான் கண்ணாடிக் கதவை யாரோ தட்டுகிற சத்தம் கேட்டது. எதிரே பார்த்தால் இவர்தான். மப்ளர் சுற்றிய டம்ளரில் ஆவி பறக்கும் பாலை எடுத்துக்கொண்டு அங்கே நின்றிருந்தார்.

சும்மா நின்றிருந்தாலும் பரவாயில்லை. “நீங்கள் ஏன் சாப்பிட வரவில்லை என்று கேட்டேன். என்னுடன் சாப்பிட வந்தவர்களோ, உங்களுக்குத் தொண்டைப் புண் என்றும் ஜலதோஷம் என்றும் ஆளுக்கு ஆள் சொன்னார்கள். இந்தப் பாலைக் குடியுங்கள். இதமாக இருக்கும். ஒன்றும் சாப்பிடாமல் படுத்துக் கொள்ளக் கூடாது” என்று சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாலை எடுத்துவர பல பேர் இருக்கும்போது நீங்கள் ஏன் எடுத்து வந்தீர்கள் என்று சரவணன் பதறிப் போய் கேட்க, “மற்றவர்கள் கொடுத்தால் நீங்கள் குடிக்க மாட்டீர்கள் என்பதால்தான் நானே கொண்டு வந்தேன்” என்றார். இது இந்தத் தோட்டத்துத் தூயவரின் அன்புக்கு ஒரு மிகச்சிறிய உதாரணம்.

அந்த நல்லவரிடம் நன்றியும், அன்பும் என்றும் நிலைத்திருந்தது என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்…

(தொடரும்…)

18.09.1988

You might also like