நனவாகாத பாலிவுட் கனவு: சீனாவில் நடிகரான இந்தியர்!

கனவுகளைத் தேடி ஓடுபவன் மனிதன். அதற்காக பல தியாகங்களையும் செய்யக் கூடியவன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ஆசை, கனவு. அப்படித்தான் இவரும்.
பாலிவுட் கனவில் மும்பைக்கு படையெடுத்த டேவ் ரதுரி (Dev Raturi), இப்போது சீனாவில் பிரபல நடிகராகி இருக்கிறார்.

டேராடூனில் இருந்து சுமார் 120 கி.மீ தூரத்தில் இருக்கிறது கேம்ஸியா-சவுர் என்ற கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த டேவ் ரதுரிக்கு சினிமா கனவு சின்ன வயதிலேயே பிடித்து ஆட்டிவிட்டது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்ததும் டெல்லிக்குச் சென்றார் வேலைக்காக.

ஏதாவது வேலை பார்த்து குடும்பத்துக்கு உதவலாம் என்று நினைத்த டேவ் ரதுரி, சின்னச் சின்ன வேலைகளைச் செய்து வந்தார். ஆனாலும் சினிமா ஆசை விடவில்லை. பாலிவுட் கனவில் மும்பைக்குச் சென்றார். பல இடங்களில் கதவைத் தட்டினார். அது அவ்வளவு எளிதல்ல என்பது புரிந்தது டேவுக்கு. இதனால் டெல்லிக்குத் திரும்பி வேலையைத் தொடர்ந்தார்.

புரூஸ் லீயின் தீவிர ரசிகரான டேவ், அங்கு தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டார். கடந்த 2005 ஆம் ஆண்டு அவருக்கு சீனத் தலைநகர் பெய்ஜிங் போகும் வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள இந்திய ரெஸ்டாரன்டில் வெயிட்டராக வேலைக்குச் சேர்ந்தார். இரண்டு வருடம்தான். பிறகு ஜெர்மன் டெஸ்டாரன்டில் அவருக்கு மானேஜர் வேலை கிடைத்தது.

இதனிடையே 2011 -ல் இந்தியா திரும்பிய டேவ் திருமணம் செய்துகொண்டார். மீண்டும் சீனா சென்றவர், ஷான்ங்ஸி (Shaanxi) மாகாணத்தில் உள்ள ஜியான் நகரத்தில் ரெட் போர்ட் என்ற இந்திய ரெஸ்டாரன்டை ஆரம்பித்தார். 2015 ஆம் ஆண்டு அடுத்த ரெஸ்டாரன்டையும் தொடங்கினார். இப்போது அவருக்கு அங்கு 8 ரெஸ்டாரன்ட்கள் இருக்கின்றன.
ஒரு பக்கம் பிசினஸ் வளர, சினிமா ஆசை மட்டும் மாறவே இல்லை அவருக்கு. அதற்கான வாய்ப்பை அங்கும் தேடத் தொடங்கினார். முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஸ்பெஷல் ஸ்வாட் (Special SWAT) என்ற சீனப் படத்தில் இந்தியராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அவருக்கு முதல் படம். நெகட்டிவ் கேரக்டர்தான். இதற்குப் பிறகு பிசியாவிட்டார் டேவ்.

“அந்தப் படம்தான் எனக்கு பல வாய்ப்புகளைக் கொடுத்தது. அதில் என் நடிப்பு பேசப்பட்டதும் சீனத் திரைப்படம், டி.வி. தொடர், வெப் சீரிஸ்களில் நடிக்க ஏராளமான அழைப்புகள் வந்தன. இப்போது 20 படங்களில் நடித்து வருகிறேன்.

போலீஸ் அதிகாரி, டாக்டர், சிறப்புப் படை அதிகாரி எனப் பல கேரக்டர்களில் டிவி மற்றும் வெப் சிரீஸ்களிலும் நடித்து வருகிறேன். நான் நடித்த மெர்சினரிஸ் என்ற படம் அங்கு சூப்பர் ஹிட். ரூம் மேட் என்ற டிவி சீரிஸுக்கும் பெரும் வரவேற்பு. பாலிவுட்டில் நிறைவேறாத கனவு இங்கு நிறைவேறி இருக்கிறது” என்று புன்னகைக்கிறார் டேவ் ரதுரி.

எங்கோ ஆரம்பித்த கனவு, எங்கோ நிறைவேறியிருக்கிறது. எனவே நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு காணலாம் நம் கனவை!

-அழகு

07.02.2021 09 : 50 A.M

You might also like