பலவீனத்தைக் காட்டிக் கொள்ளாதே!
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் – 3
எம்.ஜி.ஆர். இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு இணையாக மக்களின் அன்பைப் பெற்ற சொல் அல்லது எழுத்து வேறு எதுவுமே இல்லை என்று சொல்லலாம்.
அதற்குக் காரணம், அவரது திறமை, வள்ளல் குணம், மனிதாபிமானம், சிறந்த நடிப்புத் திறன், மக்கள் நலத் திட்டங்கள் என்பதையெல்லாம் தாண்டி, அவரை அவருக்காகவே மக்கள் நேசித்தார்கள். இன்னும் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை இந்தப் பெயர் இன்னும் ஆண்டுகொண்டிருக்கிறது. அவரது பெயரும் படமும் எனக்குத்தான், எங்களுக்குத்தான் என்று உரிமை கொண்டாடாத கட்சியோ, தலைவரோ இருந்தால் அது ஆச்சரியம்தான்.
மக்கள் தன்னைத் தங்களில் ஒருவராக, நேசிப்பதும் வாழ்வியல் தொடர்பான பல விஷயங்களில் தனது செய்கைகளை அப்படியே பின்பற்றுவார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்தே இருந்தது.
அதனால்தான் அவர் எந்த மேடையிலும் தவறான அர்த்தம் வரும்படியாக மறைமுகமாகக் கூட பேசியதில்லை. தான் யார் என்பது மக்களுக்குத் தெரிந்தால் அது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பொறுப்புணர்வைத் தன் வாழ்நாள் முழுதும் விரும்பி ஏற்றுக்கொண்ட சுமையாகச் சுமந்தார்.
எந்தச் சூழ்நிலையிலும் தன்னை பலவீனராகக் காட்டிக் கொண்டதேயில்லை. மக்களுக்கும் அதைப் பழக்கினார். அவர்களைப் பின்பற்றுபவர்களும் அப்படித்தான் இருந்தார்கள்.
இதற்கு ஒரு சம்பவம் சொல்ல முடியும். அவர் அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பி வர ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அமெரிக்காவில் மருத்துவமனையில் படுத்தபடியே தேர்தலில் அவர் மட்டுமின்றி, தன்னுடைய பெயரை மட்டுமே முன்னிறுத்திய தன் கட்சியை மாபெரும் வெற்றி பெறச் செய்தார்.
அத்தகைய அதிசயத் தலைவர் வருகிறார் என்பதால், அவரைப் பார்க்க லட்சோப லட்சம் மக்கள் கூடுவார்கள் என்று அவரது கட்சிக்கும் ஆட்சிக்கும் மத்திய அரசுக்கும் தெரியும். அதனால் கிண்டியில் உள்ள ராணுவப் பயிற்சி மைதானம் அவர் வந்து இறங்கும் இடமாகத் தேர்வு செய்யப்பட்டது.
அவர் அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்து, அங்கிருந்து சென்னை வருவது என்ற ஏற்பாடு இருந்தது. அதற்கு முந்தின நாளில் இருந்தே மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது. அவரது வருகையைப் பற்றி, திருவிழாவை வர்ணனை செய்கிறாற்போல ரேடியோ வர்ணனையை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.
எதிர்பார்த்ததற்கும் மேலாகக் கூட்டம் உண்மையிலேயே அலைமோதியது. குறிப்பிட்ட நேரத்தில் அவர் ஹெலிகாப்டரில் அந்த மைதானத்துக்கு வந்திறங்கினார். ஒரே ஒரு மனிதரைக் காண அவ்வளவு கூட்டம் அதற்கு முன்போ அதற்குப் பின்போ எங்குமே திரண்டதில்லை.
அவரது ரசிகர்களும், கட்சிக்காரர்களும், பேரன்பு வைத்திருந்த சாதாரண மக்களும் இந்தச் சமயத்தில் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இது அவருக்கு மூன்றாவது பிறவி. முதலில் 1967-ல் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுப் போராடி மீண்டார்.
இரண்டாவதாக, 1976-ல் குறிப்பிட்ட இடத்திலிருந்து சென்னை வருவதற்காக விமானம் ஒன்றில் முன்பதிவு செய்திருந்தார். கடைசி நேரத்தில் திடீரென்று மனம் மாறி அதை விட்டுவிட்டு வேறொரு விமானத்தில் பயணம் செய்தார். இவர் வேண்டாம் என்று விட்ட அந்த விமானம், அந்தப் பயணத்தின்போது விபத்துக்குள்ளானது.
இப்போது மூன்றாம் முறையாகப் பல்வேறு விதமான உடல் பாதிப்புகளுடன் அமெரிக்கா சென்றார். அதாவது எடுத்துச் செல்லப்பட்டார். யாருமே எதிர்பாராத வகையில் இப்போது மீண்டு வந்திருக்கிறார். இது போதாதா அவரைக் கொண்டாட!
அங்கு வந்திறங்கிய எம்.ஜி.ஆரை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் விமானத்துக்கு அருகே வந்தது. அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் தனது காரில் ஏறி விழா மேடைக்கு வந்தார். மக்கள் வெள்ளத்தைப் பார்த்து, கையைத் தூக்கிக் கூட்டத்தினரைப் பார்த்து கையசைத்தார்.
ஆர்ப்பரிக்கும் கடலுக்குச் சவால் விடுகிறாற்போல மக்கள் வெள்ளம் பரந்து பொங்கியிருப்பதைக் கண்டார். அங்கே இருந்த ராணுவப் படை வீரர் காளிமுத்து ஆறுமுகம், அங்கு வந்திருந்த கூட்டம் ஐந்திலிருந்து பத்து லட்சம் வரை இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அங்கே இருந்த இளம் வயதினர், பெருத்த ஆரவாரம் செய்தனர். கோயம்புத்தூர், மதுரை என்று பல பகுதிகளிலும் இருந்து வந்த ஏழை விவசாயிகள், கைக்குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்கள், சுற்றுப் புறங்களைக் கண்டுகொள்ளாமல் தேம்பி அழுதபடி இருந்தனர்.
அவரால் சரியாகப் பேச முடியாது. கைகளில் பலமில்லை. ஒரு கையைத் தூக்கவும் முடியாத நிலை. ஒரு கை மட்டுமே மெதுவாக இயங்கும். அந்த நிலையில் மக்களைப் பார்த்து என்ன செய்ய முடியும்? அதே சமயத்தில் வணக்கமாவது சொல்ல வேண்டுமல்லவா? அதாவது கைகளைக் கூப்ப வேண்டுமல்லவா?
அவருக்குப் பக்கத்தில் இருக்கும் மருத்துவருக்கு அவரது நிலை தெரியும். அவருக்குப் பெரும் டென்ஷன் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று. மக்களின் கரகோஷம் அடங்க வெகு நேரமானது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத, குறிப்பாக அவரது மிக பலவீனமான நிலையை மிக நன்கு உணர்ந்த மருத்துவக் குழுவினர் எதிர்பார்க்காத வகையில் ஒரு காரியம் செய்தார். நன்றாக, அதாவது ஓரளவிற்கு நன்றாக இயங்கும் கையைச் செயலற்ற இன்னொரு கையருகே கொண்டுசென்று, அதைத் தட்டி மேலே தூக்கி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கைகளை மேலே கூப்பியபடி நின்றார். இதை ஆச்சரியத்துடன் மருத்துவர்கள் பார்த்து அசந்துபோனார்கள்.
அது மட்டுமின்றி மிகவும் சிரமத்துடன் சில வார்த்தைகளையும் பேசினார். அப்படிப் பேசும்போது திணறல் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.
இதுதான் மலை அசைந்தாலும் நிலை அசையாத நிலை என்று சொல்வார்கள். எந்தச் சமயத்திலும் எதுவும் முடியாத நிலை என்று ஒன்றுமே இல்லை என்பதை வாழ்ந்து காட்டியவர் மக்கள் திலகம்..
எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்கக்கூடிய வாழ்வியல் தொடர்பான இது போன்ற பல சம்பவங்களைத் தொடர்ந்து பார்க்கலாம்.
– தனஞ்செயன்
04.02.2021 12 : 02 P.M