ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பிரிவைத் தொடங்க உத்தரவிடக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் வித்யாரெட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியிருந்தால் தமிழ்நாடு ஆணவக் கொலைகள் இல்லா மாநிலமாக மாறியிருக்கும்.

கடந்த ஆண்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி, கோவை செல்லும் வழியில் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதன்பின் அந்தப் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்தார். இது ஆணவக் கொலையாக இருக்கலாம். எனவே உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனவும் அந்த மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறையின் கீழ் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவு அமைப்பது என்பது சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தனர்.

ஆணவக் கொலைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு துண்டுப் பிரசுரம் கூட வெளியிடப்படவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு உள்துறைச் செயலாளர், காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை எட்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.

03.12.2021 11 : 10 P.M

You might also like