ஆலயப் பிரவேசச் சட்டத்தை அமல்படுத்திய ஓமந்தூர் ராமசாமி
நேர்மையின் நிழலாகவும், உண்மையின் தத்துவமாகவும், சாதாரண மனிதர்களின் மக்கள் தலைவராகவும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராகவும் திகழ்ந்த ஓமந்தூர் ராமசாமியின் பிறந்தநாள் இன்று.
தமிழக மக்களால் ஓமந்தூரார் என்று அழைக்கப்பட்ட ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார், காந்தியச் சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்.
சுதந்திர இந்தியாவில் காமராஜர் ஆதரவுடன் தமிழகத்தை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராக பதவியேற்ற ஓமந்தூர் ராமசாமி, 1947-ம் ஆண்டு மார்ச் 23 முதல் 1949-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி வரை சென்னை மாகாண முதல்வராக பதவி வகித்தார். இரண்டாண்டுகள் முதல்வர் பதவியில் இருந்த அவர், மிகவும் நேர்மையான ஆட்சியை வழங்கினார்.
இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று பட்டேலுக்கு எச்சரிக்கை செய்தார். அதன்பின்னர் அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்திய தேசத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது.
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்ட அவர், விவசாயிகள் மற்றும் ஏழை, எளியவர்களின் முன்னேற்றத்துக்காக சிந்தித்து பல முனைப்புகளைத் தொடங்கியவர்.
பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட அவர் பயணித்த அரசியல் பாதையைத்தான், பின்னாட்களில் குமாரசாமி ராஜாவும் காமராஜரும் பின்பற்றினர்.
ஆதிதிராவிடர்கள், ஹரிஜனர்கள் என அழைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கென்று அப்போது தனித்துறை இல்லை. தொழிலாளர் நலத்துறையின் ஒரு பகுதியாகவே ஹரிஜன நலத்துறை இருந்தது. ஓமந்தூரார் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அந்தத் துறையை ஆதிதிராவிடர் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து, தனித் துறையாகப் பிரித்து, அந்தத் துறைக்கென தனியே ஒரு ஆணையரை நியமித்தார்.
அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதி திராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தவர் ஓமந்தூரார்தான்.
ஆதிதிராவிடர்கள் ஆலயத்தில் நுழைவதற்கான தடையை முழுவதுமாக நீக்கி, தமிழ்நாட்டின் பல முக்கியக் கோயில்களில் ஆதிதிராவிடர்களைப் பிரவேசிக்க வைத்த பெருமைக்குரியவர்.
ஓமந்தூரார் பதவியேற்றிருந்த காலத்தில் ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும் தோற்றுவித்தார்.
சென்னை மாகாணத்தில் இருந்த, திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆலயப் பிரவேசச் சட்டத்தின் மூலம் அவர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க வைத்ததோடு நிற்கவில்லை, திண்டிவனம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராகவும் நியமித்தார். ஆலயப் பிரவேச வரலாற்றில், இது தனித்துவமிக்க ஒரு சாதனையாகும்.
பாராட்டுக் கூட்டங்கள், வெற்றி விழாக்கள் ஆகிய அரசியல் ஆரவாரங்களுக்குத் தடை போட்டது, வேறெந்த இந்திய மாகாண முதல்வர்களும் செய்யாத நடவடிக்கைகள்.
முதலமைச்சரைச் சந்திப்பதற்கென வழங்கப்படும் அனுமதிச் சீட்டில், என்ன காரணத்துக்காகச் சந்திக்க வேண்டும் என ஒரு கேள்வியை இணைக்கும்படி முதன்முதலில் உத்தரவிட்டவர் ஓமந்தூரார். நியாயமான காரணத்துக்காக வருவோரை மட்டுமே சந்திப்பது என்பதை தான் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நாள் முதலே வழக்கமாக்கிக் கொண்டார் அவர்.
ஐ.சி.எஸ். அந்தஸ்து இல்லாத ஏ.அழகிரிசாமி என்பவரைத் தனது அந்தரங்கச் செயலாளராக நியமித்தார். இதன்மூலம் சென்னை மாகாண முதலமைச்சர்களின் அந்தரங்கச் செயலாளர்களில் முதல் தமிழர் என்ற பெருமை பெற்ற ஏ.அழகிரிசாமி, பின்னாட்களில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.
ஆலயப் பிரவேசச் சட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் போன்றவையாகும்.
சென்னை மாகாணத்தில் எட்டு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் இருந்த நிலையில், முதல்வரானதும் எஞ்சிய 17 மாவட்டங்களிலும் மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார். இதனால் 25 மாவட்டங்களைக் கொண்ட சென்னை மாகாணம் முழுவதும், ஒரே நாளில் கள்ளுக்கடைகள் இழுத்து மூடப்பட்டன.
முதல்வராக இருந்தபோது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஓமந்தூரார். மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்தவர்.
கட்சியின் நிர்ப்பந்தத்தால் பதவி விலக நேரிட்டபோது அவர் சிறிதும் கவலை கொள்ளாமல் பதவியைத் தூக்கியெறிந்தார். பதவி விலகிய அன்று பிற்பகலிலேயே அரசுக் குடியிருப்பான கூவம் மாளிகையில் இருந்து வெளியேறி, தனது சொந்த ஊரான ஓமந்தூருக்கு சென்றுவிட்டார்.
அரசியல் வாழ்வை துறந்த அவர், ஆன்மிக ஈடுபட்டால் வள்ளலார் வாழ்ந்திருந்த வடலூரிலேயே வசிக்கத் தொடங்கியதுடன், விவசாய வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்பட்டு, அங்குள்ள தரிசு நிலங்களை எல்லாம் விளைநிலங்களாக மாற்றினார்.
வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவ இவர்தான் முன்னின்றார். வடலூரில் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அனாதைகள் இல்லம், ஏழை மாணவர்களுக்கான குடில், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் ஆகிய நிறுவனங்களையும் ஓமந்துரார் ஏற்படுத்தினார்.
25-08-1970 அன்று தனது 75 -வது வயதில் உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் காலமானார்.
01.02.2021 02 : 50 P.M.