பேரன்பில் துளிர்த்த உணர்வின் வெளிப்பாடு!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிண சித்ரா கலைக்கூடத்தில் பணிபுரியும் சிற்பக்கலைஞர் போற்றரசனின் தந்தையும் மகளும் என்ற தலைப்பில் சிற்பக்காட்சி பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
பதினைந்து ஆண்டுகளாக மழை தொட்டுச் சுவைக்கும் குழந்தையைப்போல ஆர்வத்துடன் சிற்பக்கலையில் ஈடுபட்டுவரும் அவர், சென்னை கவின்கலைக் கல்லூரியில் சுடுமண் சிற்பக் கலையை விருப்பப் பாடமாகப் படித்தவர்.
தமிழக – ஆந்திர மாநிலங்களைப் பிரிக்கும் நிலப்பரப்பின் எல்லையான அரக்கோணத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த போற்றரசன், சிறுவயதிலிருந்தே இயற்கையின் தாக்கத்தில் வளர்ந்தவர்.
அதனால் இளமையிலேயே கவின்கலை இயல்பாகவே கை வந்தது. ஒருகட்டத்தில் தட்சிண சித்ரா அருங்காட்சியகத்தில் தன்னையும் ஒரு கலைஞராக இணைத்துக் கொண்டார்.
கடந்த பல ஆண்டுகளாக சுடுமண் சிற்பப் பயிலரங்குகள், கருத்தரங்க அமர்வுகள், பகுதி நேரப் பயிற்சி வகுப்புகள், கண்காட்சிகள் எனப் பல தளங்களில் இயங்குகிறார் போற்றரசன்.
தனிநபர் மற்றும் கூட்டுக் கண்காட்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் போற்றரசன், சென்னை, டெல்லி ஆகிய நகரங்களில் நடந்த பல்வேறு கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார்.
சமீபத்தில் கொரியாவில் நடந்த சுடுமண் சிற்பக்கலை பயிலரங்கில் கலந்து கொண்டு திரும்பியிருக்கிறார். இவரது ‘தந்தையும் மகளும்’ என்ற செராமிக் சிற்பம் தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் நுண்கலை விருது பெற்றுள்ளது.
உயிர்களின் ஆதாரமே அன்புதான். அதிலும் தாய்மை என்பது அதி உன்னதமானது. தாய்மைக்கு நிகராக வேறெதுவும் இருக்கமுடியாது. மேலும், தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமானதல்ல என்பதைத் தனது மகளின் பேரன்பில் துளிர்த்த உணர்வின் தாக்கத்தால், இந்தச் சிலையைச் செய்திருக்கிறார் போற்றரசன்.
அன்றாட வாழ்வின் நிகழ்வுகளில் ஒன்றாகியும் விலகியும் ஆடும் ஆத்மாவின் கண்ணாமூச்சி விளையாட்டின் வெகு இயல்பான தருணத்தை அழகிய கலை வெளிப்பாடாக மாற்றியுள்ளார் இந்த செராமிக் சிற்பக்கலைஞர்.
புகைப்படங்கள்: ரேகா விஜயசங்கர்
– தான்யா
30.01.2021 11 : 20 A.M