மலபார் மட்டன் பிரியாணி ரெடி…!
நான்வெஜ் பிாியா்களுக்கு பிாியாணி என்றாலே அலாதிப் பிாியம். ரமலான் பண்டிகையின்போது இஸ்லாமிய நண்பா்களின் இல்லங்களில் செய்யக்கூடிய இந்த பிாியாணியை எளிதாக சமைக்க கற்றுக் கொள்ள வழிமுறை கீழே….
தேவையான பொருட்கள்
மட்டன் – 1 கி.கி
பச்சை மிளகாய் – 5
சீரகம் – தேவையான அளவு
பூண்டு – 2 ஸ்பூன்
இஞ்சி – 2 ஸ்பூன்
கொத்தமல்லி – தேவையான அளவு
புதினா இலை – 25 கிராம்
மஞ்சள் பொடி – ஒரு ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
தயிர் – 1 கப்
மல்லித் தூள் – சிறிதளவு
பெருஞ்சீரகத்தூள் – 1 ஸ்பூன்
நெய் – 100 கி
இலவங்கப்பட்டை – சிறிதளவு
பிரியாணி இலை – 2
ஏலம் – 5
பொிய வெங்காயம் – 3 துண்டுகள்
பிரியாணி அரிசி – 500 கி
ஜாதிக்காய் – 100 கிராம்
தக்காளி – 4
முந்திரி, திராட்சை – சிறிதளவு
செய்முறை
மட்டனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இஞ்சி, கிராம்பு, ஏலம், பெருஞ்சீரகம், கசகசா விழுது, நறுக்கிய இஞ்சி, ஜாதிக்காய், பிரியாணி இலை, புதினா இலை, சீரகம், இலவங்கப்பட்டை, கொத்தமல்லித்தூள், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, தயிர் மற்றும் உப்பு இவற்றை ஒன்றாக கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னா் ஒரு பாத்திரத்தில் சிறிது நெய் ஊற்றி காயவைத்து, அதில் முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சையை போட்டு வறுத்து எடுக்கவும். அதன் பின்னர் வெங்காயம், உப்பு போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதேபோல் மற்றொரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி நெய் ஊற்றி காயவைத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கி, அதனுடன் தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும்.
பிாியாணி அாிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்து சாதமாக தயாா் செய்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஊற வைத்த மட்டனை சேர்த்து, போதுமான அளவு நீர் ஊற்றி நன்கு கிளறி, பாத்திரத்தை மூடி வைத்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
இதன்பிறகு பிாியாணி பாத்திரத்தில் மேலே சொன்ன கலவைகளை ஒன்றாக போட்டு, அதனுடன் சிறிது சாதம் மற்றும் மட்டனையும் சோ்த்து, மூழ்கும் அளவிற்கு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி அடுப்பில் வைத்து வேக விடவும்.
மட்டன் வெந்ததும் பாத்திரத்தின் மூடியை திறந்து மறுபடியுமாக சிறிது கிளற வேண்டும். சில துண்டு மட்டனை எடுத்து மீதம் இருக்கும் சாதத்தின் மீது வைக்கவும் இப்போது தனியாக எடுத்து வைத்த சாதத்தை மட்டன் மீது பரப்பவும். திரும்பவும் மட்டன் துண்டுகள் பரப்பி அதன் மீது சாதத்தை பரப்பவும்.
இப்படியாக மொத்த சாதமும் மட்டனும் சம அடுக்குகளாக பரப்பப்பட்ட பின்னர், இறுதியாக வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை வெங்காயத்தைச் சேர்க்கவும். சிறிது கொத்தமல்லி இலை தூவி சிறிது அடுப்பில் வைத்து வேக விடவும்.
சிறிது நேரத்திற்கு பிறகு இதை சுடச்சுட பாிமாறலாம்.