அன்று கேட்ட கு.முத்துக்குமாரின் குரல்!
ஈழத்தமிழர்கள் மீது கொண்ட பேரன்பினால் தன்னைக் கொளுத்திக் கொண்டு உயரிழந்த இளைஞனாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும்.
பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்து கொண்டிருந்த ‘பெண்ணே நீ’ என்கிற மாத இதழின் வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார் கடைசியாகப் பணிபுரிந்திருப்பது ‘பெண்ணே நீ’ பொங்கல் மலருக்காக.
அதில் நண்பர் ஜி.கௌதம் பணிபுரிந்த நேரம்.
தயாராகிக் கொண்டிருந்த பொங்கல் மலருக்காக அவர் என்னிடம் ஒரு கட்டுரை கேட்டு நான் மெயிலில் அனுப்பியதும், தொடர்பு கொண்டு பேசியவர் வடிவமைப்பாளராகப் பணியாற்றியவரான முத்துக்குமார்.
சில வார்த்தைகள்தான். மெயில் கிடைத்தது என்றும், மலர் தயாரானதும் அனுப்பி வைக்கிறோம் என்று பேசியபோது தன்னுடைய பெயரைச் சொல்லி, அனுப்பிய கட்டுரையைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் அவர்.
பிறகு சாஸ்திரி பவன் வாசலில் எரிந்தும் எரியாத கரிக்கட்டையைப் போலக் கிடந்த காட்சி நெஞ்சை உலுக்கியது.
சில நாட்களுக்கு முன் மென்மையான குரலில் பேசிய அந்த முகத்தை நெருப்பு உருக்குலைத்திருந்தது.
கொரட்டூரில் அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த பகுதியில் திரண்டிருந்த கூட்டமும், எழுப்பிய முழக்கங்களும் மலைக்க வைத்தன. சிதறுண்டு இயங்கிய பல்வேறு அமைப்புகளை மையப் புள்ளியாய் ஒன்று சேர்த்திருந்தது முத்துக்குமாரின் மரணம்.
மூலக்கொத்தளம் மயானம் வரைக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளோடு சென்று அதிகாலை நேரத்தில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, திரும்பிய அந்த நாள் இப்போதும் நினைவில் இருக்கிறது கரும்புள்ளியாக.
— மணா
29.01.2021 11 : 44 A.M