பழசுக்கு இப்போது இவ்வளவு மதிப்பா?

எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்ப்பார்க்காமல் கிடைத்த அதிர்ஷ்டம் என்கிறார்கள் இதை.

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிராட் ஹின்டன். இவருடைய ஏழு வயது மகன் ஸய்ன் ஹின்டன் (Zayne Hinton). அங்குள்ள சம்னர் கடற்கரையில் அடிக்கடி நீச்சலடிப்பது ஸய்னுக்கு வழக்கம்.

சில நாட்களுக்கு முன் அப்படித்தான் வழக்கம் போல நீந்திக் கொண்டிருந்தான். அப்போது கடலில் ஒரு காகிதம் மிதந்து வந்து கொண்டிருந்தது. என்னவென்று பார்த்த ஸய்னுக்கு அது வித்தியாசமாக இருப்பதாகத் தோன்ற, எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தான். பார்த்தால், அது பழக்கால நியூசிலாந்து நாட்டின் 5 டாலர் நோட்டு.

அதன் வண்ணமே வித்தியாசமாக இருக்க, அதை அப்பாவிடம் கொண்டு போய் கொடுத்திருக்கிறான். இதை அப்படியே ஏலத்தில் விடுவோம் என்று யோசனை கூறியிருக்கிறார் அப்பா. அதன்படி ஏலம் நடத்தும் இணையதளம் ஒன்றுக்கு சென்று பேசினார்.

அவர்கள் இந்த டாலரை பற்றி குறிப்பிட்டு இணையதளத்தில் வெளியிட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை வரை கடைசி நாள் என்று குறிப்பிட்டிருந்தனர். 10 டாலர், 20 டாலர் என்று இதன் ஏலத் தொகை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்ல, கடைசியாக ஆயிரம் டாலருக்கு ஏலம் போயிருக்கிறது எதிர்பார்க்காமல். இதனால் சிறுவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

இந்த டாலரை ஏலத்துக்கு எடுத்தவர் கார்டர்டானை சேர்ந்த மார்க் க்ளுயாஸ் (Mark Gluyas) என்பவர். ஏன் இதை ஏலத்தில் வாங்கினேன் என்பதற்கு சென்டிமென்டான காரணம் சொல்கிறார். தனது மனைவி கேன்சரால் கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்து விட்டார் என்றும் அவர் நினைவாக இதை வாங்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் மார்க்.

சிறுவனின் தந்தை பிராட், இந்த ஏலத் தொகையால், என் மகன் ஸய்ன் திக்குமுக்காடி விட்டான். நான் வெறும் 10 டாலருக்குத்தான் இது ஏலம் போகும் என நினைத்தேன். ஆயிரம் டாலர் கிடைக்கும் என்று நினைவில்லை, இது வியப்புதான் எனக் கூறியிருக்கிறார். இந்த தொகையைக் கேட்டு நெகிழ்ந்துள்ள ஸய்ன் ஹின்டன், சிறுவர்களுக்கான மோட்டார் பைக் வாங்கப் போகிறானாம்!

-அலாவுதீன்

29.01.2021  10 : 50 A.M

You might also like