வழிநடத்திய ஸ்வாதிக்கு வாழ்த்துகள்!

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் வானத்தில்  வர்ண ஜாலங்களை நிகழ்த்திய விமானப் படைக்குத் தலைமையேற்றவர் விமானப் படை லெப்டினன்ட் ஸ்வாதி ரத்தோர்.

ராஜஸ்தான் மாநில விவசாயத் துறை துணை இயக்குநர் ரத்தோரின் மகளான ஸ்வாதிக்கு விமானி ஆவதுதான் கனவாக இருந்தது. தன் மகளின் கனவை நிறைவேற்றி வைத்தார் தந்தை.

அதுபோலவே 2014 ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் இணைந்தார். “என் மகள் என் தலையை உயர்த்திப் பிடித்திருக்கிறாள். அவள் தன் கனவை அடைந்திருக்கிறாள் என்பது பெரும் மகிழ்ச்சியை உணர்கிறேன்” என்கிறார் ஸ்வாதியின் தந்தை டாக்டர் பவானி ரத்தோர்.

ராஜஸ்தான் மாநிலம், நாகவர் மாவட்டத்தின் சிறு கிராமத்தில் பிறந்த ஸ்வாதி, அஜ்மீரில்தான் அவர் பள்ளிப்படிப்பை முடித்தார். சிறுபிராயத்திலேயே பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் தேசியக் கொடியை வரைந்து பரிசு வென்ற சிறுமிதான் ஸ்வாதி.

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் என்.சி.சி.யில் விமானப் பிரிவில் சேர்ந்து கொண்டார். பின்னர் 2014 ஆம் ஆண்டில் தன் பறக்கும் கனவை அடைந்தார். அவரது சகோதரர் மர்ச்சன்ட் நேவியில் இருந்தார். மகளையும் மகனையும் வேறு வேறாக நடத்தியதில்லை என்கிறார் ஸ்வாதியின் தாய்.

விமானப் படைக்குத் தேர்வாகும் நேரத்தில் 200 பெண்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்தார்கள். அதில் 98 பேர் தேர்வானார்கள். கடைசியில் 5 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஆனால் ஸ்வாதி ஒருவர் மட்டுமே பறக்கும் பிரிவுக்காகத் தேர்வு செய்யப்பட்டார்.

குடியரசு தின விமானப்படை அணிவகுப்புக்குத் தலைமையேற்ற ஸ்வாதியைப் பாராட்டி ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ரஜே ட்வீட் செய்துள்ளார். ஸ்வாதி, எங்கள் மண்ணின் மகள் என்பது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள் ஸ்வாதி!

 – தான்யா

27.01.2021 12 : 45 P.M

You might also like