எதிர்த்தவரையும் மதிக்கும் பண்பு எம்.ஜி.ஆருடையது!
வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் – 1
எம்.ஜி.ஆரின் புறத்தோற்றம் வசீகரமானது. அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடியது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது மனமும் வசீகரமானதுதான். அது மட்டுமின்றி யாரையும் புண்படுத்தாமல் அவர்களைத் தன்பால் இழுக்கும் ஆற்றலையும் பெற்றவர்.
இதில் அவரது அறிவுத் திறனும், எதிர்காலத்தில் என்ன நடக்கலாம் என்கிற சரியான மதிப்பீடும் கலந்திருந்தன. அதேபோல மற்றக் கட்சியில் இருப்பவர்களையும் தனது செயலால் ஈர்ப்பதை கலையாகவே பயின்றிருந்தார் என்று சொல்லலாம்.
அதே சமயத்தில் அதை திட்டமிட்டும் அவர் செய்ததில்லை. அதனது செய்கைகளால் அவர்களது மனம் மாறக் காரணமாக இருந்தார்.
தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட சமயம். அவருக்கு ஆதரவாக மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அடக்கு முறைகளை எதிர் கொண்டனர். இந்தப் போராட்டங்கள் கட்டுக்கடங்காமல் சென்றதாலும், அதிக அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மூடியது அரசு.
அதே காலகட்டத்தில்தான் மிகப் பெரிய அளவில் திட்டமிட்டு, மிகுந்த பொருட்செலவு பிடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமும் திரையிடத் தயாராக இருந்தது. அதற்கு முன்னர்தான் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வைத் துவக்கியிருந்தார். உடனடியாக தமிழகத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவானது.
அவர் தி.மு.க.வை விட்டு வெளியேற்றப்பட்டது அனைவரின் மனதிலும் கோபத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், எம்.ஜி.ஆர்., திட்டப்படியே ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிடுவதில் மும்முரமாக ஈடுபட்டார். அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும், அந்தப்படத்தை வெளிவராமல் செய்வதற்கு பலவற்றை செய்தது.
அப்போது, தி.மு.க.வில் இருந்தவர் மதுரை முத்து. அவர் கட்சியிலும், ஆட்சியிலும், அவர் இருக்கும் ஊரில் மட்டுமின்றி, தமிழகம் முழுதும் அறியப்பட்டவராக இருந்தார். செல்வாக்கு மிக்கவர். கட்சித் தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.
அவர் எம்.ஜி.ஆரைப் பற்றியும், அவரது படத்தைப் பற்றியும் மிகக் கடுமையாக மேடைகளில் விமர்சித்துப் பேசினார். அந்தப் படத்தை வெளியிட விட மாட்டேன் என்று அறிவித்தார். அப்போதுதான் அவரது மிகப் பிரபலமான சவாலான ‘அந்தப் படம் வெளிவராது. படம் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்’ என்ற அறிக்கை வெளிவந்தது.
அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் சென்னை சத்யா ஸ்டுடியோவில் தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த ரசிகர்களை தினமும் சந்தித்து, அவர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.
ஒருநாள், அப்படிப் பேசும்போது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை வெளியிடுவது சம்பந்தமாக பேசும்போது ‘‘மதுரை முத்தண்ணன் அவர்கள் கூட… என்று ஆரம்பித்து அவரது கருத்தைக் கூறினார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர், மதுரை முத்துவைப் பற்றி மிக மோசமாக விமர்சித்துக் குறை கூறியது மட்டுமின்றி, எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘‘அவரைப் பற்றிப் பேசாதீர்கள்’’ என்று கத்தினார்.
அதைக் கேட்ட எம்.ஜி.ஆருக்குக் கோபம் வந்தது. மதுரை முத்து யார், அவரது கடந்த காலம் என்ன, அவர் சார்ந்த கட்சிக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது நன்றாகத் தெரியும். அது மட்டுமில்லாமல், அரசியல் எதிரியாக இருந்தாலும், யாரைப் பற்றிப் பேசினாலும் மரியாதையுடன்தான் பேசுவார். அது மட்டுமின்றி தன்னைப் பின்பற்றுபவர்கள், தனது ரசிகர்கள் என்று யாராக இருந்தாலும் அவர்களது நடத்தை சரியான முறையில், நாகரீகமாக, நல்ல விதத்தில் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவார்.
வாத்தியாரின் கோபம்
அவரது படங்களில், பெரும்பாலான வசனங்கள் மக்களுக்கு அறிவுரை சொல்வது போலவே இருக்கும். அதனால்தான் அவருக்கு ‘வாத்தியார்’ என்ற பட்டப் பெயரே வந்தது. அப்படிப்பட்டவருக்கு ரசிகரின் இந்த அநாகரீகமான நடத்தை கோபத்தை வரவழைத்தது.
தனது ரசிகராக இருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டார், அதுவும் தன்னைப் பார்த்து, “அவரைப் பற்றிப் பேசாதீர்கள்” என்று கத்தியிருக்க மாட்டார் என்று எம்.ஜி.ஆர் நினைத்திருப்பார்போலும். அதனால், முதலில், யார் அவர், எதிர்க் கட்சியைச் சேர்ந்தவரா, இங்கே வேண்டுமென்று குழப்பம் செய்ய வந்திருக்கிறாரா என்று பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்தார்.
அதற்கு அந்த ரசிகர், முன்னால் வந்து, தான் எம்.ஜி.ஆர். மன்றத்தைச் சேர்ந்தவர் என்று கூறி அதற்கான உறுப்பினர் அட்டையைக் காண்பித்தார். அதைப் பார்த்த பின்தான் எம்.ஜி.ஆர்., சற்று கோபம் தணிந்தார்.
சத்தமாகப் பேசி குரல் கொடுத்த அந்த ரசிகரிடம், ‘‘தம்பி, முத்தண்ணன் இன்று என்னைக் கடுமையாக விமர்சித்துப் பேசலாம். ஆனால், அவர் திராவிட இயக்க வளர்ச்சிக்காகச் செய்த தியாகங்களை மறக்கலாமா? என்று சொன்னவர், தொடர்ந்து “ஏன்? முத்தண்ணனே காலப்போக்கில் நம் பக்கம் வரலாம். யாரையும் கண்ணியக் குறைவாகப் பேசாதீங்க’’ என்றார்.
அந்த ரசிகருக்கு எப்படி இருந்திருக்கும்? எம்.ஜி.ஆர். உபதேசமாக செய்யாமல், எப்படி நடந்துகொள்ளக் கூடாது, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை காலத்துக்கும் மனதில் நிற்கும் வகையில் அறிவுரைக் கூறினார்.
இது மட்டுமல்ல, அவரது வாய் முகூர்த்தமோ அல்லது ‘நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்’ என்பதற்கான எடுத்துக்காட்டாகவோ, அதற்கடுத்த சில காலம் கழித்து மதுரை முத்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அப்போதும் கட்சியில் இருந்த சில முக்கியஸ்தர்கள் அவரது கடந்த காலம், அவர் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசிய பேச்சுகள், அவரது முரட்டுக் குணம் போன்றவற்றை எடுத்துச் சொல்லி, அப்படிப்பட்டவரைக் கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று கூறினர்.
ஆனால் எம்.ஜி.ஆருகு மனிதர்களைப் பற்றியும் அவர்களது மதிப்பு என்ன என்பதும் நன்றாகத் தெரியும். கட்சியில் எதிர்ப்பு வந்தபோதும், அதை ஏற்காமல் கட்சியில் சேர்த்துக் கொண்டது மட்டுமின்றி மதுரையின் மேயராகவும் ஆக்கினார்.
இதுதான் தலைமைப் பண்பு. காலத்தைக் கடந்து யோசிப்பதால்தான் எம்.ஜி.ஆர். காலத்தைக் கடந்து இன்றும் மக்களின் அன்பையும், மதிப்பையும் ஒருங்கே பெற்று அவர்களது இதயங்களில் வாழ்கிறார்.
இயல்பாக மாறிய பண்புகள்
இந்தப் பண்பை உயர் பதவிக்கு வந்தபோதும் விடவில்லை. எம்.ஜி.ஆர். முதல்வரான பின் நடந்த ஒரு சம்பவம் குறிப்பிடத்தக்கது. ஒரு சமயத்தில் அவர் தங்கியிருந்த அரசு விருந்தினர் மாளிகையை ஒட்டி கமலஹாசனின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது, அதைக் கேள்விப்பட்ட அவர் நேரில் சென்று சிறிது நேரம் படப்பிடிப்பைப் பார்த்தார்.
அன்று மதியம் அனைவருக்கும், விருந்தினர் மாளிகையில் உணவருந்த வேண்டும் என்று சொல்லிவிட்டதால், அனைவரும் அங்கே சென்று மதிய உணவருந்தினர். அந்தப் படத்தில் மிக முக்கியமான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அவர்களை எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு நடக்கும்போதே பார்த்து விட்டார். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர், அனைவரையும் விசாரித்தபடி வந்தார்.
குறிப்பிட்ட இருவரும் ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆ.ர் அவர்களிடம் சென்று சகஜமாகப் பேசி, அன்புடன் நலன் விசாரித்தார். இதன் விளைவாக, அவர்கள் இருவருமே அடுத்த சில நாட்களில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
கட்சிக்கு அவர்களை இழுக்க வேண்டும் என்பதற்காக அவர் இதைச் செய்யவில்லை. அவரைப் பொறுத்த வரை தன்னுடைய இயல்பு மாறாமல் நடந்துகொண்டார். நல்ல பண்புகள் பலவற்றைத் தன் இயல்பாகவே மாற்றிக்கொண்டவர் அவர். அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இது முக்கியமானது.
(மேலும் கற்போம்)
25.01.2021 11 : 09 A.M