சோஷியல் வொர்க் படிக்க விருப்பமா?
சமூகப் பணி என்பது மென்பொருள் நிறுவனங்கள் தொடங்கி பன்னாட்டு நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு துறையாக வளர்ந்து வருகிறது. சோஷியல் வொர்க் என்பது கல்வியாகவும் வளர்ந்திருக்கிறது. இக்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள்…
கடந்த நூறு ஆண்டுகளில் தொழில்முறை சமூகப் பணியும் அதற்கான கல்வியும் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. சமூகப் பணி என்பது சமுதாய மாற்றம் மற்றும் வளர்ச்சி, சமுதாய நல்லிணக்கம், சமூக பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டுள்ள பணி.
ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவோ, ஒரு கிராமமோ தனது வாழ்க்கைப் பயணத்தைத் தானே நிர்ணயித்து அதற்கான வளங்களை பெற வைப்பதே சமூகப் பணியின் முக்கிய குறிக்கோள்.
சமூகப் பணிக்குப் படிப்பு வேண்டுமா என்ன? என ஒரு கேள்வி எழலாம். சமூக சேவைக்கும் சமூகப் பணிக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு மனிதனுக்கு உணவு இல்லை. அவனுக்குத் தினமும் ஒருவர் உணவு வழங்கலாம். இது சமூக சேவை.
அதே மனிதனுக்குத் தனது உணவை தானே சம்பாதித்துப் பெற்றுக்கொள்ள உதவுவது சமூகப் பணி. இதைச் செய்யவேண்டும் என்றால், அந்த மனிதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரது குடும்பப் பின்னணி, அவருக்கு இருக்கும் திறமைகள், அவரது மனப்பாங்கு ஆகியவற்றை ஆய்ந்து அதன் அடிப்படையில், அவர் தன் சொந்தக் காலில் நிற்க உதவுவதுதான் சமூகப் பணி. இதற்கு சமூகப் பணி கல்வி அவசியம்.
இந்தியாவில் 1936 ஆம் ஆண்டு டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் சோஷியல் சயின்சஸ் என்ற கல்வி நிறுவனத்தில் சமூகப் பணிக் கல்வி முதன்முதலில் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமூகப் பணி கல்வி நிறுவனங்கள் உள்ளன.
தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமான கல்லூரிகளில் சமூகப் பணி கற்பிக்கப்பட்டு வருகிறது. பிஎஸ்டபிள்யூ என்ற இளங்கலைப் பட்டம், எம்எஸ்டபிள்யூ என்ற முதுநிலைப்பட்டம், எம்.ஃபில் ஆய்வுப்பட்டம் மற்றும் பி.எச்.டி ஆய்வுப் பட்டங்கள் வரை சமூகப் பணி கல்வியில் உண்டு.
பிஎஸ்டபிள்யூ படிப்புக்கு பிளஸ் டூவில் எந்தப் பிரிவை படித்தவரும் சேரலாம். எம்எஸ்டபிள்யூ முதுநிலைப் படிப்புக்கு ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அதாவது அந்தந்தக் கல்லூரி நடத்தும் நுழைவுத் தேர்வில் முதுநிலை படிப்பதற்கான தகுதியும் சமூகப் பணியில் உள்ள ஆர்வமும் பொது அறிவும் சோதிக்கப்படும்.
சமூகப் பணிக் கல்வியில், உளவியல், சமூகவியல், மனநலம், சமூக ஆய்வு வழிமுறைகள், தொண்டு நிறுவனங்களின் மேலாண்மை, மனித உரிமைகள், சமூகத் தேவைகளைக் கண்டறிதல், தேவைகளையும் உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்கான உத்திகள், சமூகப் பிரச்சினைகள், அவற்றுக்குத் தீர்வு காண்பது எப்படி போன்ற விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
சமூகப் பணிக் கல்வியின் சிறப்பம்சம், அதிலுள்ள களப் பயிற்சியே. மாணவர்கள் 40 சதவீதம் வகுப்பு நேரத்தை தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் களப்பயிற்சிக்காக செலவிடவேண்டும்.
எம்எஸ்டபிள்யூ படிப்பில் ஒவ்வொரு செமஸ்டரும் குறைந்தது 30 நாட்கள் களப்பயிற்சியில் ஈடுபடவேண்டும். அதற்கான ஏற்பாடுகளைக் கல்லூரி அமைத்துக் கொடுக்கும்.
இந்தக் களப்பயிற்சியில் மாணவர்களுக்கு பலதரப்பட்ட மக்களோடு நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்படுகிறது. அதன் வழியாக மக்களுடைய பிரச்சினைகள் என்ன என்பதை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ளவும், அதற்கேற்ப விடை காணவும் கற்றுக் கொள்கின்றனர்.
எம்எஸ்டபிள்யூ படிப்பில் இரண்டாவது ஆண்டில் நகர்ப்புற மற்றும் ஊரக வளர்ச்சி, உடல் / மனநல சமூகப் பணி, மனித வள மேலாண்மை, குடும்ப நலன் மற்றும் சிறுவர் மேம்பாடு, தலித் மற்றும் பழங்குடியினர் உரிமைகள், இளைஞர் முன்னேற்றம் ஆகிய சிறப்புப் பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கலாம்.
சமூகப் பணிக் கல்வியில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்குத் தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மனநல ஆலோசனை மையங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, இயற்கை வளப் பாதுகாப்பு, பலதரப்பட்ட தொழில் நிறுவனங்களில் ஹியூமன் ரிசோர்ஸ் மேலாளர் பணிகள், ஆய்வு நிறுவனங்கள், காப்பகங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
அரசுத் துறையில் சமூக பணித்துறை, குடிசைப்பகுதி மாற்று வாரியம், அரசு மருத்துவமனைகள், தொழிலாளர் நலவாரியம், சிறைத்துறை சீர்திருத்தப் பள்ளிகள், ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றில் பணிகளில் சேரலாம். தொண்டு நிறுவனங்களில் மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும். தொழில் நிறுவனங்களில் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும். மேலும் அவரவர் அனுபவத்திற்கேற்ப சம்பள உயர்வு உண்டு.
சமூகப் பணிக் கல்வி பயின்றவர்கள், நல்ல சுய ஆளுமையோடு செயல்படுவார்கள். சமூகப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, அதற்குத் தீர்வு காணும் வழிமுறைகளையும் அறிந்திருப்பார்கள்.
ஒரு வளர்ச்சித் திட்டத்தையோ அல்லது விழிப்புணர்வு பிரச்சாரத்தையோ உருவாக்கி செயல்படுத்துவதில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்போனால் மனிதவளத்தை மேம்படுத்துவதில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள்:
டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் சோஷியல் சயின்சஸ், மும்பை
தில்லி ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க், நியூதில்லி
பரோடா ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க், வதோதரா
கார்வே இன்ஸ்டிட்யூட், புனே
ராஜகிரி காலேஜ் ஆப் சோஷியல் சயின்சஸ், கொச்சின்
ரோஷ்னி நிலையா, மங்களூர்
விஸ்வபாரதி, கொல்கத்தா
ரோதா மிஸ்ட்ரி காலேஜ் ஆப் சோஷியல் வொர்க், ஹைதராபாத்
நிர்மலா நிகேதன், மும்பை
காசி வித்யாபீத், வாரணாசி
மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க்
சென்னையில் 1952 ஆம் ஆண்டு மெட்ராஸ் ஸ்கூல் ஆப் வொர்க் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தன்னாட்சி நிறுவனமாக உள்ளது. அமெரிக்கா முழுவதும் பயணம் செய்து சமூகப் பணி சார்ந்த கல்வி நிலையங்களைப் பார்வையிட்டு, தன் கனவுத்திட்டமான மெட்ராஸ் ஸ்கூல் சோஷியல் வொர்க்கை கல்வி நிலையத்தை உருவாக்கியவர் மேரி கிளப்வாலா ஜாதவ்.
சமூகப் பணி சார்ந்த கல்வி நிலையங்களில் இந்தியாவில் மூன்றாவது இடத்தையும் தென்னிந்தியாவில் முதலிடத்தையும் மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் வொர்க் பெறுகிறது.
இங்கு எம்.ஏ., ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மெண்ட், டெவலப்மெண்ட் மேனேஜ்மெண்ட், மாஸ்டர் ஆப் சோஷியல் வொர்க், எம்.எஸ்.சி. கவுன்சலிங் சைக்காலஜி, பி.ஏ., சோஷியல் வொர்க், பி.எஸ்.சி. சைக்காலஜி, ஹியூமன் ரிசோர்ஸ் முதுநிலை டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
விவரங்களுக்கு: www.mssw.in
– தான்யா
23.01.2021 12 : 50 P.M