மீண்டும் தள்ளிப் போனது ‘நோ டைம் டு டை’!

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் அடுத்து வர இருக்கும் படம், நோ டைம் டு டை. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போயிருக்கிறது.

‘நோ டைம் டு டை’ என என்ன நேரத்தில் டைட்டில் வைத்தார்களோ, படத்தின் ரிலீஸுக்கு சரியான நேரம் கிடைக்கவில்லை. படத்தின் தொடக்கத்தில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள் இதற்கு.

முதலில் ஜேம்ஸ்பாண்ட் நடிகரான டேனியல் கிரேக், “ம்ஹூம் நான் நடிக்கலைப்பா, என்னை விட்டிருங்க” என்று மறுத்துவிட்டார். பிறகு “இது உங்களுக்கு கடைசி பாண்ட் படமா இருக்கட்டும், வந்து நடிச்சுட்டு போங்க” என்று தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த, ஓகே என்று வந்தார் டேனியல் கிரேக்.

அடுத்து, படத்தை இயக்க இருந்தவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இயக்குனர் டேனி பாய்ல். ஸ்கிரிப்ட் பக்காவாக ரெடியான பிறகு, தயாரிப்பு தரப்புக்கும் பாய்லுக்கும் கருத்து மோதல்.

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட ஜேம்ஸ் பாண்டை சாகடிக்க வேண்டாம் என்றார் பாய்ல். அதை ஏற்றுக் கொள்ளவில்லை தயாரிப்பு. “அப்படின்னா நான் விலகிக்கிறேன்” என்று வெளியே வந்துவிட்டார்.

இதனால், டைரக்டர் கேரி ஜோஜி புகுனகாவை கொண்டு வந்தார்கள். இவர், சின் நோம்ப்ரே, ஜேன் ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய ஹாலிவுட் படங்களை இயக்கியவர். ஷூட்டிங் தொடங்கி நடந்து வந்த நிலையில், இடையில் சின்ன சின்ன விபத்துகளால் ஷூட்டிங் தாமதமானது.

பிறகு ஒரு வழியாக முடிந்து 2019 ஆம் ஆண்டு நவம்பரில் இதன் ரிலீஸ் தேதியை அறிவித்தார்கள். அப்போது வெளியிட முடியவில்லை. பிறகு கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றார்கள். அப்போதுதான் கொரோனா, தன் கொடூர கால்களை உலகம் முழுவதும் பரப்பி இருந்தது. இதனால் ரிலீஸ் தேதி சொல்லாமல் தள்ளிப் போனது. பிறகு வருடக் கடைசியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதற்கும் வாய்ப்பில்லை.

அமெரிக்காவின் பல பகுதிகளில் கொரோனா இன்னும் அடங்காமல் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால், வரும் ஏப்ரல் வெளியீடு என்று அறிவித்திருந்தார்கள். ம்ஹூம் அதற்கும் வாய்ப்பில்லை. இப்போது, அக்டோபர் 8 என்று அறிவித்திருக்கிறார்கள். அப்போதாவது ரிலீஸ் ஆக வேண்டுமே என்று எதிர்பார்க்கிறார்கள், ரசிகர்கள்.

ஆயிரும்ல…!

– அலாவுதீன்

23.01.2021   11 : 52 P.M

You might also like