காவி மயமாகும் எல்லைப்புற மாகாணம்!

தேர்தல் களம்: அசாம் 1

அசாம் மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் நடக்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. அதாவது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மறுபடியும் நிச்சயமாக ஆட்சியைப் பிடித்துவிட முடியும் என்று திடமாக நம்புகிறது. இதற்குக் காரணங்கள் இருக்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 7, 9, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மிக முக்கியமான உள்ளூர்த் தேர்தல்களில், பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் போடோலாண்ட் பகுதிகளுக்கான ஆட்சிமன்றத் தேர்தல். இதில், பாஜக 9 இடங்களை வென்றது. அதன் முன்னாள் கூட்டணிக் கட்சியான போடோ மக்கள் முன்னணி 17 இடங்களையும், இப்போதைய கூட்டணிக் கட்சியான ஒன்றுபட்ட மக்கள் கட்சி – லிபரல், 12 இடங்களையும் வென்றது. மொத்தமுள்ள 40 இடங்களில் மீதியுள்ள ஓரிரண்டு இடங்களை காங்கிரசும் கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றன.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 2015-ல் நடந்த இதே உள்ளூர்த் தேர்தலில், பாஜகவிற்கு ஒரே ஒரு இடம்தான் கிடைத்தது. இத்தனைக்கும் அதற்கு முந்தைய வருடம்தான் மோடி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றிருந்தார். ஆனாலும் பாஜகவால் ஒரு இடத்தை மட்டும்தான் வெல்ல முடிந்தது.

இன்னொரு முக்கியமான விஷயம், அந்நிய நாட்டிலிருந்து வந்து இங்கேயே தங்கிவிட்ட மக்களுக்கான குடியுரிமை தொடர்பான சிஏஏ சட்டத்திற்கான பெரும் எதிர்ப்பு அலைகள் உருவான இடங்களில் அசாம் மாநிலத்துக்கு முக முக்கியமான இடம் உண்டு. ஆனாலும், இத்தனை எதிர்ப்பு அலைகளையும் மீறி இப்படிப்பட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.

இது மட்டுமின்றி, டிசம்பரில் 17ஆம் தேதியன்று இன்னொரு உள்ளூர் தன்னாட்சி கவுன்சில் அமைப்பான டிவா சுயாட்சி கவுன்சிலுக்குத் தேர்தல் நடந்தது. கடந்த மூறை பாஜக மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸ் 15 இடங்களில் வென்றது. இந்த முறை காங்கிரசுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. ஆனால் பாஜக பம்பர் பரிசு போல 33 இடங்களில் வெற்றி பெற்றது. இதெல்லாம் திடீரென்று அதிர்ஷ்டத்திலோ, மக்களின் திடீர் மன மாற்றத்தாலோ ஏற்பட்டது அல்ல. பாஜக மிகப் பல தடைகளைக் கடக்க வேண்டியிருந்தது.

முஸ்லிம் வாக்குகள்

இன்னொரு முக்கியமான விஷயம், பாஜக, கணிசமான முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. போடோலாண்ட் பகுதியில் பாஜகவிற்கு வாக்களித்த முஸ்லிம்களின் எண்ணிக்கை சதவிகிதம் 19.25 சதவிகிதம். முஸ்லிம்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட ஏஐடியுஎஃப்  கட்சிக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை.

இத்தனைக்கும், சென்ற மாதம் இறுதியில் பாஜக அரசு, மாநில அரசின் கட்டுப்பாட்டில், நிதியில் நடக்கும் ஆயிரக்கணக்கான மதராஸா பள்ளிகளைச் சாதாரணப் பள்ளிகளாக மாற்றியது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அசாம் சுதந்திரம் அடைந்ததிலிருந்தே காங்கிரஸ் கோட்டைதான். முதல் தேர்தல் நடந்த 1952-லிருந்தே காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்து வந்தது. இது 1977 வரை நீடித்தது.

இந்திரா காந்தி 1975-ல் அவசர நிலை பிரகடனம் செய்தார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1978-ல் ஜனதா கட்சி தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. அதே நேரத்தில் அசாமிலும் ஆட்சியைக் கைப்பற்றியது.

இந்த ஜனதா பரிசோதனை மத்தியிலும் வெற்றி பெறவில்லை. எந்த ஆட்சியை மக்கள் சர்வாதிகார ஆட்சி என நினைத்து தோற்கடித்தார்களோ, அடுத்த ஒன்றரை வருடங்களில் அதே கட்சி ஆட்சியை, அதே பிரதமரைப் பெருவெற்றி பெறச் செய்து ஆட்சியில் அமர்த்தினார்கள். அதற்கான காரணங்கள் தனி நூலுக்குரியவை. இங்கே அசாமைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

இப்படியாக ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ் அடுத்த ஐந்து வருடங்களுக்கு அசாமை ஆட்சி செய்தது. அந்தச் சமயத்தில் கொழுந்து விட்டு எரிந்த அந்நியர் ஊடுருவல் பிரச்சினையை முன்னெடுத்து பல வருடங்களாகப் போராடி வந்த மாணவர் அமைப்பான அசாம் கண பரிஷத், 1991-ல் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வென்று ஆட்சியை அமைத்தது.

ஆனால் அடுத்து ஒரு வருடத்துக்கு மட்டுமே ஆட்சியில் இருந்தது. 1992-லிருந்து 1996 வரை மீண்டும் காங்கிரஸ். அதன்பிறகு அசாம் கண பரிஷத் மீண்டும் தேர்தல்களில் வெற்றி பெற்றது. இந்த முறை ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்து ஆட்சி நடத்தியது.

அதன் பிறகு மீண்டும் காங்கிரஸ் 2001-ல் ஆட்சியைப் பிடித்தது. அடுத்த பதினைந்து வருடங்கள், அதாவது 2016 வரை காங்கிரஸ்தான். அதன்பிறகு 2016-ல் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு இரண்டு வருடங்கள் முன்பு, அதாவது 2014-ல் பாஜக மத்தியில் பெருவெற்றி பெற்றி ஆட்சியைப் பிடித்தது.

இரண்டு வருடங்களில், காங்கிரசின் பலவீனமான தலைமை, எதிர்க் கட்சிகளிடையே ஒற்றுமை என்பது பெயருக்குக்கூட இல்லாமை, மோடியின் தனிப்பட்ட ஆளுமை மக்களை மிகவும் கவர்ந்தது ஆகிய காரணங்களால், பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. இதுவேதான் அசாமிலும் நடந்தது.

காங்கிரஸின் ஆட்சியில்

அசாமைப் பொறுத்தவரை நடுவில் மிகச் சில வருடங்களைத் தவிர்த்து காங்கிரஸ்தான் ஆட்சி செய்து வந்திருக்கிறது. அதாவது 52 ஆண்டுகள் அசாமைத் தனது பிடியில் வைத்திருந்தது. இந்த நிலைதான் நாட்டில் உள்ள ஏறக்குறைய எல்லா மாநிலங்களிலும் என்பது உண்மைதான்.

சுதந்திரம் வாங்கித் தந்த கட்சி என்ற அடையாளம், நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற மிக வலுவான, மக்கள் செல்வாக்கு பெற்ற ஆளுமை பெற்ற தலைவர்கள் என்று ஆரம்பித்து மிகப்பல காரணங்கள் இதற்கு இருக்கின்றன.

ஆனால், அந்தக் கட்சி ஆட்சி செய்த எல்லைப்புற மாநிலங்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் ஊடுருவல், உள்ளூர் இனங்களிடையே பிரச்சினை, அகதிகள் பிரச்சினை, தீவிரவாதப் பிரச்சினை என்று பல பிரச்சினைகள் தோன்றி வளரும்போது அது குறித்து, இறுதி முடிவான நடவடிக்கைகளோ அல்லது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒப்பந்தங்களை உருவாக்குவதிலோ ஈடுபடவில்லை. அதிலும் குறிப்பாக பஞ்சாப், மிசோராம், நாகாலாந்து, மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இதன் விளைவுகள் மோசமாக இருந்தன.

இடியாப்பச் சிக்கல் போல குழப்பமான நிலை இங்கே நிலவுவதற்கு காங்கிரஸ் முக்கியமான காரணம் என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக அசாமில் இந்தக் குழப்பம் இயல்பாகவே இருந்த ஒன்று. அதை காங்கிரஸ் சரியாகக் கையாளவில்லை.

அது போதாதென்று அந்நிய அகதிகள் ஊடுருவல் என்ற பிரச்சினை துவங்கியபோது, கண்டுகொள்ளாமல், அதைத் தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முயற்சியும் செய்து அதில் தாற்காலிக  வெற்றிகளையும் பெற்றது.

இங்கேதான் பாஜக மிக சாமர்த்தியமாக பிரச்சினைகளின் போக்கை திசை திருப்பி, தனக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. அதன் பலன்களையும் அனுபவித்து வருகிறது. அது எப்படி என்று பார்க்கலாம்.

(தொடரும்…)

23.01.2021    12 : 10 P.M

You might also like