குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து!
கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததால், கடந்த 19-ம் தேதி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், “இந்தியக் குடியரசு திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஜனவரி திங்கள் 26-ம் நாள் காலை 8.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.
கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும், கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக மாவட்டந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி/ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், இந்தாண்டு பொது மக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், ஆகியோர் விழாவைக் காண நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
22.01.2021 1 : 20 P.M