தி.மு.க சென்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுவிலக்கு உயிர் பெறுமா?
கொரோனா எத்தனையோ பாதிப்புகளைக் கொண்டு வந்தாலும், அதன் நல்ல விளைவுகளில் ஒன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அப்போது மூடப்பட்டது தான்.
ஆனால் பொது முடக்கம் விலக்கப்பட்டதுமே டாஸ்மாக் கடைகளை அவசரமாகத் திறந்தார்கள். மறுபடியும் மது விற்பனை கூடிக் கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 172 கோடி விற்பனை ஆகும் அளவுக்கு விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுக்க இருக்கிற ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் முப்பதாயிரத்துக்கும் அதிகமாக ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டுக்கு இருபதாயிரம் கோடியைத் தாண்டி அதன் விற்பனை பெருகிக் கொண்டே இருக்கிறது. அண்மையில் நியாய விலைக் கடைகளில் 2500 ரூபாயை மாநில அரசு கொடுத்தால் கூட, அது சரியாக டாஸ்மாக் கடைக்கு வந்து சேர்ந்துவிடும் என்று வெகு துல்லியமான மோப்ப உணர்வுடன் சொல்கிறார் தமிழக அமைச்சர் ஒருவர்.
அந்த அளவுக்குத் தமிழகத்தின் நிதி நிலையைத் தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிறது டாஸ்மாக். இதை எதிர்த்து சிலர் நீதிமன்றங்களில் வழக்குப் போட்டார்கள். தள்ளுபடி ஆயிற்று. மின் கோபுரங்களில் ஏறிப் போராடினார்கள். உயிர் போயிற்று. அரசுக்கு வருவாயைக் கொடுத்து விற்பனையை அதிகப்படுத்திய குடிமகன்களின் வாழ்வு பாழாயிற்று.
இந்தச் சமயத்தில் சென்ற தேர்தலின்போது அ.தி.மு.க, தி.மு.க இரண்டுமே தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கைப் பற்றிப் பேசியிருந்ததைச் சற்றே நினைவு கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று சொன்னாலும், அ.தி.மு.க ஆட்சி சில கடைகளைப் பெயருக்கு மூடினாலும், மதுவிலக்கு என்ற இலக்கை நோக்கி அரசு நகரவில்லை.
அதே சமயம் தி.மு.க.வோ, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்துவோம். மாற்று நிதியமைப்பை உருவாக்குவோம் என்று உறுதிமொழி கொடுத்தது.
தேர்தல் பிரச்சாரம் துவங்கிவிட்ட நிலையில், இன்னும் எந்தக் கட்சியும் மதுவிலக்கு பற்றி வாய் திறக்கவில்லை. இனி தேர்தல் அறிக்கைகள் வெளியாகும்போது, மதுவிலக்கு பற்றிய இங்குள்ள கட்சிகளின் குறைந்தபட்சப் பார்வை என்ன என்பது தெளிவாகிவிடும்.
கொரோனாவால் தமிழகத்தில் தற்காலிகமாக அமலான மதுவிலக்கை – மக்கள் பிரதிநிதிகளால் – தேர்தலுக்குப் பிறகு மக்கள் நலனுக்காக அமல்படுத்த முடியாதா?
மதுவிலக்கு விஷயத்தில் இனியாவது முடிவுகள் உறுதியாக இருக்கட்டும் – தள்ளாட்டங்கள் இல்லாமல்!
- அகில் அரவிந்தன்
22.01.2021 11 : 38 A.M