கொரோனாவால் சிகாகோ ஏர்போர்ட்டில் ரகசியமாக வசித்த இந்தியர்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயம். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான ஆதித்யா சிங்கிற்கு கொடூர கொரோனா மீது அவ்வளவு பயம்.
இந்த கோவிட்-19 காரணமாக, பல நாடுகள் வெளிநாட்டு விமான போக்குவரத்தை முழுமையாகத் தொடங்கவில்லை. பல சர்வதேச விமான நிலையங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. சில விமான நிலையங்கள் பிசியாகவே இருக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில், சத்தம் போடாமல் மூன்று மாதம் வசித்திருக்கிறார், அமெரிக்க இந்தியர் ஆதித்யா சிங். கலிபோர்னியாவைச் சேர்ந்த இந்த 36 வயது சிங், ஏர்போர்ட் பேக்கரி கடைகளின் ஓரத்திலும், ஷூ பாலிஷ் பண்ணும் ஸ்டாண்ட்களின் அருகிலும் மறைந்து வசித்திருக்கிறார்.
தற்செயலாக, யுனைட்டட் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், இவரைக் கண்டு ஆச்சரியமடைந்து, அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லி இருக்கிறார்கள். காண்பித்தார் சிங். ஆனால், அது ஊழியர் ஒருவருடைய, காணாமல் போன அடையாள அட்டை என்பது தெரியவந்தது! பிறகு போலீசுக்கு தகவல் செல்ல, அவரை கைது செய்திருக்கிறார்கள்.
“ஏன் இப்படி ஏர்போட்ல வசிக்கிறீங்க?” என்று சிங்கிடம் விசாரித்தால், அவர் சொன்ன காரணம் கொரோனா!. “எனக்கு கொரோனா பயம். வீட்டுக்கு போனா கொரோனா இருக்கும். அதனால இங்கேயே தங்கிட்டேன்” என்று சாதாரணமாகச் சொல்லி இருக்கிறார். பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி, அக்டோபர் 19-ம் தேதி முதல் இந்த ஏர்போட்டில் தங்கி இருந்திருக்கிறார் சிங்.
விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் தரும் பாதி உணவுகளைக் கொண்டு சமாளித்திருக்கிற சிங், பயணிகளிடம் இந்துமதம் பற்றியும் புத்தமதம் பற்றியும் லெக்சர் அடித்திருக்கிறார், நேரம் போவதற்காக.
வழக்கு கோர்ட்டுக்குச் செல்ல, சிங்கிற்கு கிரிமினல் பின்னணி எதுவும் இல்லை என்பதை கோர்ட் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது.
வழக்கு விசாரணை 27-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
இது பாதுகாப்பான பகுதி. இங்கு அவர் மூன்று மாதமாக வசித்தது, விமான நிலைய பாதுகாப்பு பற்றி கேள்வியையும் பரபரப்பாக எழுப்பி இருக்கிறது.
– அழகு
21.01.2021 01 : 44 P.M