தமிழ் படங்களின் ரீமேக்கிற்கு இந்தியில் கடும் போட்டி!
ஒரு மொழியில் ஹிட்டான படத்தை, மற்ற மொழியில் ரீமேக் செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது.
சமீபத்தில், தமிழில் வெளியான ‘மாறா’ கூட மலையாள ‘சார்லி’யின் ரீமேக்தான். இருந்தாலும் சமீபகாலமாக தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் ஆகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.
ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து சூப்பர் ஹிட்டான ‘காஞ்சனா’வை இந்தியில் ‘லட்சுமி’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். லாரன்ஸே அதை இயக்கி இருந்தார். பாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமார் நடித்திருந்த இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து, நயன்தாரா நடித்து தமிழில் வரவேற்பை பெற்ற ‘கோலமாவு கோகிலா’ இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். இது இந்தியில், ‘குட்லக் ஜெர்ரி’ என்ற பெயரில் உருவாகிறது.
நயன்தாரா வேடத்தில் நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். சித்தார்த் சென்குப்தா இயக்குகிறார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ படத்தை, சந்தோஷ் சிவன் ‘மும்பைகர்’ என்ற பெயரில் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
லோகேஷ் இயக்கிய ‘கைதி’ படமும் இந்திக்கு போகிறது. அதில் நடிப்பது, அஜய் தேவ்கன். அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தின் இந்தி ரீமேக்கில், ஜான் ஆபிரகாம் நடிக்க இருக்கிறார்.
மாதவன், விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’, சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ படங்களும் ரீமேக் செய்யப்படுகின்றன. அதோடு மேலும் சில தமிழ்ப் படங்களும் இந்தி ரீமேக் லிஸ்டில் இருக்கின்றன.
– அலாவுதீன்
20.01.2021 02 : 12 P.M