தேர்தலுக்கு முந்தைய சர்வே: பலன் யாருக்கு?

வழக்கம்போல தேர்தலுக்கு முன்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் இப்போது வெளிவர ஆரம்பித்து விட்டன.

ஆனால் இன்னும் தமிழகத்தில் சில கூட்டணிகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே கருத்துக் கணிப்புகள் வெளி வந்திருக்கின்றன. இன்னும் அ.தி.மு.க. கூட்டணி சரிவர இறுதி செய்யப்படாத நிலை நீடிக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் ஐந்து மாநிலங்களில் ‘ஏ.பி.பி – சி வோட்டர்’ நடத்திய கருத்துக் கணிப்பில் கேரளாவில் பிணராயி விஜயனும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என தெரிவித்துள்ளது.

தமிழகத்தில்,

தி.மு.க.வுக்கு 158 லிருந்து 166 தொகுதிகளும்,

அ.தி.மு.க.வுக்கு 60 – 68 தொகுதிகளும்,

மக்கள் நீதி மய்யத்திற்கு 4 தொகுதிகளும்,

அ.ம.மு.க.வுக்கு 2-5 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கிறது வெளிவந்திருக்கிற கருத்துக் கணிப்பு முடிவு.

பொதுவாக கருத்துக் கணிப்பு தேர்தலுக்கு முன்னரே வெளியாகும் போது இரண்டு விதமான விளைவுகள் ஏற்படலாம்.

  1. தேர்தலுக்கு முன்பு குறிப்பிட்ட அணி தான் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியானால், அந்த அணி தான் வெற்றி பெறும் கூட்டணியாக வாக்காளர்கள் மத்தியில் ஒரு மதிப்பைப் பெறும்.

    வெற்றி பெறவிருக்கும் கூட்டணிக்கு வாக்களிக்கும் மனநிலை குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்களுக்கு இருப்பதால், இது உளவியல் ரீதியான தாக்கத்தை உருவாக்கித் தரும்.

  2. கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிற நேரத்தில் தி.மு.க கூட்டணி ஓரளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சில தொகுதி, சின்னங்களில் பிரச்சினைகள் இருந்தாலும், அதைச் சமாளித்துவிட வாய்ப்பிருக்கிறது. தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் உளவியலையும் இந்தக் கருத்துக் கணிப்புகள் பாதித்துச் சமரசமாகப் போக வைக்கும்.

ஆனால் அ.தி.மு.க கூட்டணி தரப்பில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள்? இப்போது தான் அ.தி.மு.க – பா.ஜ.க.வுக்கிடையே தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தைகள் துவங்கியிருக்கின்றன.

கூட்டணி வலுப்படா விட்டால், வெற்றிவாய்ப்பில் பாதிப்பு வரும் என்பதை கருத்துக் கணிப்பு முடிவுகள் உணர்த்துவதால், அவர்கள் கூட்டணி விஷயத்தில் கொஞ்சம் நெளிவு சுளிவுகளோடு விட்டுக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

தாங்கள் ஆட்சிக்கு வருவது என்கிற தன்முனைப்பை விட, தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதைத் தடுக்க கூட்டணி, பிரச்சாரம், தேர்தல் வாக்குறுதி, இறுதி நேரக் கவனிப்பு என்று பலவற்றில் கூடுதல் கவனத்தைக் காட்ட தேர்தல் கணிப்புகள் உதவக்கூடும்.

தாங்கள் சார்ந்திருக்கிற இயக்கத்தின் எதிர்காலம், அந்த இயக்கத்தில் தங்களுடைய இருப்பு எந்த விதத்தில் இருக்கும்? ஆட்சி மாறும் பட்சத்தில் என்னென்ன வழக்குகளைச் சந்திக்க வேண்டிய அவசியம் இருக்குமோ என்கிற அச்சம் எல்லாம் சேர்ந்து பல தடுமாற்றமான முடிவுகளை எடுக்க வைக்கலாம்.

தங்களுக்கு இடையிலான பூசல்களைத் தற்காலிகமாகத் தேர்தலுக்காகப் பூசி மெழுகி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் தாங்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகக் காண்பிக்கலாம்.

மத்தியில் இருக்கிற ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய கருத்துக் கணிப்பில் 44 சதவிகிதம் பேர் திருப்தியில்லை என்று பதில் அளித்திருப்பதாகச் சொல்கிறது கருத்துக்கணிப்பு.

இனி அடுத்தடுத்து கருத்துக் கணிப்புகள் என்று அடுத்தடுத்து பல கணிப்புகள் தொடர்ந்து வெளிவரலாம். ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்றும் வரலாம். பல குழப்பங்களும் உருவாகலாம்.

அசலான தேர்தல் நடந்து, அசலான முடிவு வரும்வரை காத்திருக்க வேண்டியது தான்!

– அகில் அரவிந்தன்

18.01.2021 12 : 25 P.M

You might also like