ஹாலிவுட்டில் ஒரு தமிழ் நடிகை!

மிண்டி காலிங் என்ற நடிகைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று நினைக்கத் தோன்றுவது இயல்புதான். ஆனால், அந்த ‘காலிங்’ தமிழ்ப் பெயர் ஒன்றின் சுருக்கம்!

ஏராளமான திறமைசாலிகளைத் தனக்குள் அடைத்து வைத்திருக்கும் ஹாலிவுட், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பலரையும் சேர்த்து வைத்திருக்கிறது. அதில் ஒருவர், மிண்டி காலிங். ஹாலிவுட்டில் ஒரு தமிழ்ப்பெண்! இவரை, த 40 இயர் ஓட் விர்ஜின், லைசென்ஸ் டு வெட், த நைட் பிஃபோர், ஓசியன்ஸ் 8 உட்பட பல ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்க முடியும்.

பெரும்பாலும் காமெடி கேரக்டர்களில், சிரிக்க வைத்தே மிரட்டுவார். இவர் எழுதி, தயாரித்து நடித்த லேட் நைட், கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அமெரிக்காவில் பிரபலமான ‘த ஆபிஸ்’ என்ற டிவி தொடரை எழுதி, இயக்கி கெல்லி கபூர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் மிண்டி காலிங். இந்த தொடர் அவருக்கு பெரும் புகழைப் பெற்று தர, அடுத்தடுத்த தொடர்கள் மூலம், தனக்கான இடத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அடுத்தது என்ன, ஹாலிவுட்தான்!

சரி, இவருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

மிண்டியின் அப்பா, சொக்கலிங்கம் தமிழர். அம்மா ஸ்வாதி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மருத்துவர். மிண்டியின் முழுப் பெயர், வேரா மிண்டி சொக்கலிங்கம் (Vera Mindy Chokalingam). இந்தச் சொக்கலிங்கத்தில் இருக்கும் காலிங்கை (kaling) மட்டும் எடுத்து மிண்டியுடன் சேர்த்துக் கொண்டார். வேற லெவலாகிவிட்டது பெயர்!

இவருக்கு மிண்டி என்ற பெயர் வந்ததும் சுவாரஸ்யமான ஸ்டோரிதான். மிண்டி பிறந்தபோது, மோர்க் அண்ட் மிண்டி என்ற நிகழ்ச்சி அமெரிக்காவில் செம ஹிட். அந்த ஷோவின் தாக்கத்தில்தான் மிண்டி என்ற பெயரை அவருக்கு அவர் பெற்றோர்கள் வைத்தனர் என்பது முன் கதை.

மிண்டிக்கு, கேத்தரின் ஸ்வாதி, ஸ்பென்சர் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவர்களின் அப்பா யார் என்பதை தனக்கு வேண்டிய தோழிகளிடம் கூட மூச்சு விடவில்லை அவர். ஆனால், அவருடைய முன்னாள் காதலரான நோவோக்கை, இந்தக் குழந்தைகளின் காட்ஃபாதர் என்கிறார், இந்த தமிழச்சி!

-கார்க்கி

18.01.2021 11 : 50 A.M

You might also like