வாரணாசி தெருக்கடையில் ருசி பார்த்த நடிகர் அஜித்!
‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்குமார். போலீஸ் அதிகாரி கேரக்டர். ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். இசை யுவன்சங்கர் ராஜா.
அஜித் ஜோடியாக நடிப்பது பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினியின் காலாவில் ஏற்கனவே நடித்திருந்தார்.
இதில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பவர், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில், சேசிங் காட்சி ஷூட்டிங்கின் போது, பைக்கில் இருந்து விழுந்து அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.
இதற்கிடையே நடிகர் அஜித், நண்பர்களுடன் வாரணாசிக்குத் திடீர் விசிட் அடித்திருக்கிறார். ஏன் இந்த பயணம்? ஒரு வேளை, வலிமை ஷூட்டிங் அங்கு நடக்கிறதா? என்பது பற்றியெல்லாம் அவர் தரப்பில் தெரிவிக்க மறுக்கிறார்கள்.
தலையில் தொப்பி, முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் யாராலும் அவரை அடையாளம் காண முடியவில்லை. நண்பர்களுடன் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்ட அஜித், அங்குள்ள தெருக் கடைகளில் ஜாலியாக நின்றபடி சாட் ஐட்டங்களை ருசித்து சாப்பிட்டிருக்கிறார்.
அதற்காக அவர் மாஸ்க்கை கழற்றியபோதுதான், அவர் யார் என்று தெரிய வந்திருக்கிறது அங்கிருந்தவர்களுக்கு. இதையடுத்து பனாரசி சாட் என்ற கடையின் உரிமையாளர் சுபர் கேசரி என்பவர் ஓடிப் போய் அஜீத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டு, தமிழ் தெரியாதுன்னாலும் உங்களைத் தெரியும் என்றிருக்கிறார் ஆசையாக.
அவர் கடையில் உள்ள அனைத்து ஐட்டங்களையும் சாப்பிட்டுப் பார்த்த அஜித், சில ஐட்டங்களை எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டு வீடியோவும் எடுத்துக்கொண்டாராம். பூரிக்கிறார் சுபம் கேசரி. அங்கிருந்து அப்படியே வரலாற்றுப் புகழ்பெற்ற நகரமான சாரநாத்துக்கும் நண்பர்களுடன் விசிட் அடித்திருக்கிறார் அஜித்!