என் திருமணத்தைத் தந்தை எதிர்த்தார்!
தனது திருமணத்தை, தந்தை எதிர்த்ததாக இப்போது கூறியிருக்கிறார், பிரபல நடிகை கஜோல்.
இந்தி நடிகை கஜோலை மறந்திருக்க முடியாது. தமிழில் அவர் நடித்த ‘மின்சாரக் கனவு’ படத்தில் அவர் நடிப்பையும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியுமா என்ன?
அந்த, “வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா..” பாடலும் அதில் பிரபுதேவாவுடன் கஜோல் ஆடும் அந்த நடனமும் இன்றும் பலரின் பிரியமான லிஸ்ட்டில், பிரபலமாக இருக்கிறது.
பிறகு பல வருட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2 ஆம் பாகத்தில், நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள கஜோல், பிரபல பாலிவுட் ஹீரோ அஜய் தேவ்கனை காதலித்து கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு நைஸா என்ற மகளும் யுக் என்ற மகனும் இருக்கின்றனர்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு, தனது திருமணத்துக்கு தந்தை சோமு முகர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார் என்று கூறியிருக்கிறார் கஜோல். சோமு முகர்ஜி, பிரபல இந்திப் பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். அவர் எதிர்த்தது காதலை அல்ல. இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்றுதான்.
இதுபற்றி நடிகை கஜோல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு அப்போது 24 வயது. இந்த வயதிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டாம். இன்னும் நடிப்பில் கவனம் செலுத்து என்றார், அப்பா.
ஆனால், அம்மா (கஜோலின் அம்மா தனுஜாவும் பிரபல இந்தி நடிகை எனக்கு முழு ஆதரவு தெரிவித்தார். உன் விருப்பம் போல் நடந்துகொள் என்றார். என் திருமணத்துக்கும் உறுதுணையாக இருந்தார். என் முடிவால் என் தந்தை நான்கு நாட்கள் பேசவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார் கஜோல்.
சிங்கப்பூரில் படித்துவரும் மகளுடன் தற்போது இருக்கும் கஜோல், வரும் பிப்ரவரி மாதம் தனது 22 வது திருமண நாளை கொண்டாட இருக்கிறார், உற்சாகமாக!
16.01.2021 11 : 11 A.M