பழையன கழித்து புதியன ஏற்போம்!
தமிழர் திருநாளான பொங்கலின் முன்னோட்ட விழாவாய் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
‘பழையன கழிதல் புதியன புகுதல்’ எனும் அர்த்தமுள்ள நல்ல விஷயத்தை போகி பண்டிகையில் உள்ளடக்கியிருந்தனர் நம் முன்னோர்கள்.
அவர்கள் அர்த்தமாய் கூறியதை ஏற்றுக்கொள்ளாது, போகியன்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது மூடத்தனம் என்று சாதாரணமாய் புறந்தள்ளிவிட முடியாது.
காற்று மாசுபடும் என்பது இன்றைய காலகட்டத்தில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், பிளாஸ்டிக் பைகள் எதுவும் இல்லாத அன்றைய காலகட்டத்தில், வீட்டின் பழைய ஓலைகள் போன்ற உலர் தாவர பொருட்களை மட்டும்தான் தீயிட்டு கொளுத்தினர்.
பணப்புழக்கம் அதிகமில்லா அன்றைய காலத்தில், விவசாயம் முடிந்து அறுவடை காலத்தில்தான் அனைவரிடமும் நல்ல பணப்புழக்கம் இருக்கும்.
இதனைத்தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என குறிப்பிட்டு சொல்வார்கள்.
சிறப்பு வாய்ந்த இந்நன்னாளை, பொங்கல் திருநாளை வரவெற்கும்பொருட்டு வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பதும், அதனை போக்குவதும்தான் போகி பண்டிகையாய் மாறிற்று.
தை முதல் நாளை கோலாகலமாக வரவேற்க, அன்றைய தினத்தில் கிருமிகளை கொல்லும் வேப்பிலை, சுறுசுறுப்பு தரும் மாவிலை, கபம் போக்கும் துளசி, ஆவாரம்பூ, ஆகிய தாவரங்களை ஒன்றாக கட்டி வீட்டு வாசலில் காப்பு கட்டி வைக்க வேண்டும்.
மாவிலையும் வேப்பிலையும் நம் வீட்டிற்குள் கெட்ட சக்தியை அண்டவிடாது என்ற ஆன்மீக நம்பிக்கையின் காரணமாகவே பொங்கலுக்கு முதல் நாளான தை முதல் நாளில், இந்தக் காப்பு கட்டுவதை ஒரு சம்பிரதாயமாக உருவாக்கி வைத்திருந்தனர் நம் முன்னோர்கள்.
முத்தாய் பிறக்கவிருக்கும் தை திருநாளில், நம் முன்னோர்களை பின்பற்றி…. அடியெடுத்து வைப்போம் ஆரோக்கிய வாழ்வு நோக்கி….
– ஜஸ்டின்
13.01.2021 12 : 12 P.M.