யாகாவாராயினும் நா காக்க!
தேர்தல் நெருங்கியதும் கடுமையான ‘சூடு’ தெரிய ஆரம்பித்து விட்டது தமிழக அரசியல் பிரச்சாரங்களில். இதை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் ஆளுங்கட்சியினர்தான். வழக்கம்போல பின்னர் வழிமொழிந்தவர்கள் எதிர்க்கட்சியினர்.
ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தமிழக பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்களில் நாளாம், ஐந்தாம் ரக பேச்சுக்கள் வெளிப்படுவது சர்வ சாதாரணமாகி, அவை ஊடகங்களிலும் அதே பரபரப்புடன் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
பலரையும் ஒருமையில் பேசும் அவர், பொதுக்கூட்டங்களிலும், செய்தியாளர்கள் சந்திப்பில் மட்டுமல்ல சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூட அவருடைய வழக்கமான பாணியில் தான் பேசியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளை ஒருபிடி பிடிக்க வேண்டுமென்றால் அவரைத்தான் உரிய ஆயுதமாக அழைத்து வருகிறார்கள் ஆளுங்கட்சிக்காரர்கள். அவரை இதுவரை கட்டுப்படுத்தாததன் மூலம் கட்சித் தலைமையின் முழுமையான ஆசீர்வாதம் அவருக்கு கிடைத்திருக்கிறது என்றே கருத வேண்டும்.
அவருடைய பேச்சில் வெளிப்படும் அநாகரீகத்திற்கு சற்றும் குறையாமல் தற்போது தேர்தல் பிரச்சார மேடைகளில் முழங்கி வருகிறார் திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின்.
தான் நடித்திருக்கிற சினிமா பட வசனங்களைப் போலவே தன்னுடைய பிரச்சாரத்தையும் வடிவமைத்திருக்கிற உதயநிதி, தன்னுடைய பேச்சிலும் காமெடி கலந்த பாணியை கடைப்பிடிக்கிறார்.
அந்தக் காமெடியும் அவரது திரை உலக சகாவான சந்தானம் அடிக்கும் காமெடியை விட கீழான ரகத்தில் இருக்கிறது என்பதுதான் சோகம்.
அண்மையில் சில நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தில் பேசிய அவர், தமிழக முதல்வரைப் பற்றியும், திருமதி சசிகலா அவர்களைப் பற்றியும் பொதுவெளியில் தெரிவித்திருக்கிற கருத்துக்களை திமுகவில் உள்ள நான்காம் தர பேச்சாளர்கள் கூட பேச தயங்கி இருப்பார்கள்.
அந்தளவுக்குப் பேசி, பலத்த வாதத்தையும் அந்தப் பேச்சுக்கள் உருவாக்கியிருக்கிற நேரத்தில் அதற்கு மன்னிப்புக் கோர மாட்டேன் என்றும் தேவைப்பட்டால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் பேசி அதே சர்ச்சையை தொடர்ந்து உயிரோடு தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி.
இதற்கெல்லாம் மேலாக தன்னுடைய கூட்டணிக் கட்சியினரின் வயிற்றையும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார். அதாவது “தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். எனவே திமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்குத் தரக்கூடாது என்று தளபதியிடம் தெரிவித்திருக்கிறேன்” என வெளிப்படைத் தன்மையுடன் அவர் பேசியதும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் நிலவி வரும் ஒரு சில பூசல்களை இம்மாதிரியான பேச்சுக்கள் மேலும் அதிகப்படுத்தியிருக்கின்றன.
சுதந்திரத்திற்கு பிறகு இதுவரை நடந்திருக்கின்ற பல்வேறு தேர்தல்களில் தேர்தல் பிரச்சாரத்தில் காரம் படிப்படியாக கூடி வருவது உண்மைதான் என்றாலும், தற்போது அதில் ஆபாசக் கலப்புகள் அதிகப்பட்டு வருகின்றன என்பதையும் அம்மாதிரியான பேச்சுக்களை கட்சித் தலைமை ஏதோ ஒருவித ரசனையுடன் அனுமதிக்கிறது என்பதையும் பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
13.01.2021 12 : 50 P.M