உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம்!

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டங்களை நடைமுறைப்படுத்த கடந்த 12-ம் தேதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும் வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்சனைகள் தொடர்பாக தெரிவிக்கவும், சிக்கல்களை களையவும் நான்கு பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

இந்தக் குழுவில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா (மஹாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள இந்தக் குழு முன்பு நம்பிக்கை இல்லை என்றும், எனவே இந்தக் குழு முன்பு நாங்கள் ஆஜராக மாட்டோம் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய விவசாயிகள் சங்கத்தினர், “உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கக் கோரி விவசாயிகள் கேட்கவே இல்லை. இந்தத் திட்டத்துக்கு பின்னால் மத்திய அரசு இருக்கிறது.

உச்சநீதிமன்றம் அமைத்தக் குழுவில் வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள்தான் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே எங்கள் போராட்டம் தொடரும். எங்கள் போராட்டத்தைத் திசைதிருப்ப மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சி இது.

வரும் 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடக்கும். உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இந்தச் சட்டங்களை ரத்து செய்யட்டும். நாங்கள் எந்தக் குழுவின் முன்பும் ஆஜராகமாட்டோம்.

இந்தக் குழுவின் நோக்கமே போராட்டத்தைத் தணிக்கத்தான். அதனால் எந்தக் குழுவும் எங்களுக்குத் தேவையில்லை. விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்துத் தீர்வு காண வேண்டும்” எனக் கூறினர்.

13.01.2021 02 : 22 P.M

You might also like