இணையவழிக் கல்வியில் ஆசிரியர்கள் சந்திக்கும் சிக்கல்கள்!

நலம் வாழ: தொடர் 2

இணையவழிப் பாடங்கள் தொடர்பாக மாணவர்களின் பிரச்சினைகளை அலசுவதற்கு முன் ஆசிரியர்களின் பிரச்சினைகளை ஓரளவாவது புரிந்துகொள்வது நல்லது.

பொதுவாக இணைய வழிக் கல்வி என்பது இரண்டு தரப்பைச் சார்ந்தது. முதலாமவர் மிக முக்கியமானவர். அவர்தான் ஆசிரியர். அவருக்கும் சங்கடங்கள் ஏராளமாக இருப்பதை யாரும் அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. மனநல மருத்துவரிடம் போகுமளவிற்கு ஆசிரியர்களுக்கு பிரச்சினை இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றிப் பார்ப்போம்.

அவர் பெயர் கதிரேசன் என்று வைத்துக் கொள்ளலாம். பிரபலமான கல்லூரியில் அவர் இணைப் பேராசிரியர். ஆசிரியர் தொழிலை அவர் விரும்பி ஏற்றுக்கொண்டார். கொரோனாவை அடுத்து வந்த ஏற்பாட்டின்படி, இணைய வழிக் கல்வி அவரது கல்லூரியிலும் துவங்கியது. கூடவே இவரது பிரச்சினைகளும்.

“ஆரம்பத்தில் மற்றவர்களைப் போல நானும் வீட்டிலிருந்தே கற்றுத் தரப்போகிறேன், மிகவும் சுலபமாக இருக்கப்போகிறது, காலையில் அவசரத்துடன் கிளம்ப வேண்டாம் என்பதிலிருந்து பல சாதகங்கள் இருப்பதாக நினைத்தேன்.

ஆனால் ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே சுழலும் இயந்திரத்தில் தலை கொடுத்தாற்போல ஆனது. முதலில் இணைப்புப் பிரச்சினைகள். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் தாமதமாக இணைப்பில் வந்தவர்கள், அக்கறையில்லாதமல் தாமதமாய் சேர்ந்த மாணவர்களும் இதை சாதகமாக்கிக் கொண்டார்கள். ‘சார் புரியல’ என்று ஆரம்பிப்பார்கள். அதை மறுமுறை விளக்க ஆரம்பித்தால், ஏற்கெனெவே கேட்ட மாணவர்கள், ஆர்வம் குறைந்து பேசவும் பிற விஷயங்களில் ஈடுபடவும் ஆரம்பிப்பார்கள்.

நேரடியான வகுப்பென்றால் இந்தச் சூழ்லை எளிதில் கட்டுப்படுத்தலாம். இணையவழிப் பாடத்தின்போது இது சாத்தியம் இல்லை. இதனால் இன்னொரு பிரச்சினை தாமதமாய் வந்தவர்களுக்கும் நான் சொல்வது புரிவதில்லை. ஒட்டுமொத்தமாக இரு தரப்பினருமே என் மேல் அதிருப்தியாய் இருப்பார்கள்” என்றார்.

பிற பிரச்சினைகள்

இணையவழிப் பாடத்தின்போது மாணவர்களுடன், அவரது மெத்தப் படித்த உறவினர்கள், அல்லது படிக்காத ஆனால் அக்கறை உள்ள பெற்றோர்கள் உடன் இருப்பார்கள். நேரடியாக எதுவும் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் ‘என்ன இங்கிலீஷ்லியே பேச மாட்றாரே’ என்பதிலிருந்து, ‘அவருக்கே திணறுது’ என்பதுவரை பல கமெண்டுகளைக் கேட்க வேண்டிவரும். ஆங்கிலத்தில் முழுவதும் நடத்தினால் மாணவனுக்கு புரியுமா என்பது பற்றி எனக்குதான் தெரியும் என்கிறார் கதிரேசன்.

தொடர்ந்து பல பிரச்சினைகளையும் அவர் விவரிக்கிறார்.

அடுத்ததாக, தோற்றம். ஜூமில் பார்க்கும்போது சிலரது உடையைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். அதைப் பற்றிக் கேட்டால், மற்றவர்களும் சேர்ந்துகொண்டு அவர்களது பங்கிற்கு ஏதாவது சொல்வார்கள். அதைக் கேட்கும் மாணவர், அவர்களுக்கு பதில் சொல்லும் அதே பாணியில் எனக்கும் சேர்த்து பதில் சொல்லுவார். டென்ஷன் ஏறும். ஆனால் காட்டிக்கொள்ள முடியாது. இதுவே வகுப்பில் நடந்தால், வேறு விதமாய் கையாள முடியும்.

எப்படி நடத்தினாலும் ‘புரியல’ என்று சொல்வதற்கு இணையவழி மிக எளிதானது. அவர்களை எழுப்பிக் கேள்வி கேட்க முடியாது. அவர்களது முட்டாள் தனத்தை சுட்டிக் காட்ட முடியாது. அவர்களது தயாரிப்பின்மையைப் பற்றி எதுவும் செய்ய முடியாது. முகம் மட்டும் தெரியும். ஆடியோவைத் துண்டித்து விடுவார்கள்.

ஒரே மாதிரியான முக பாவனையுடன் இருப்பார்கள். அதைப் பற்றிக் கேள்வி கேட்க முடியாது. நாங்கள் கொடுக்கும் வீட்டு வேலைகளை ஏறக்குறைய யாரும் செய்ய மாட்டார்கள். அப்படியே செய்தாலும் சொந்தமாகச் செய்யாமல், காப்பி அடித்தோ, ஒருவர் எழுதியதையே நகல் எடுத்துப் பலரும் சில மற்றங்களுடன் தந்துவிடுவார்கள். நம்மால் எதுவும் சொல்ல முடியாது என்று வருத்தப்பட்டுக் கொள்கிறார் கதிரேசன்.

“இதெல்லாம் நினைத்து, எனக்கு ஒவ்வொரு நாளும் தலைவலி, தூக்கமின்மை, பசி மந்தித்தல் ஆகியன இருக்கின்றன” என்றார்.

என்ன செய்யலாம்?

முதலில் வகுப்பு வேறு, இணைய வழி வேறு என்ற எண்ணத்தை ஒதுக்க வேண்டும். வகுப்பிற்கான தயாரிப்பு எப்படி இருக்குமோ அதேபோல இணைய வழிக்கும் செய்ய வேண்டும். இதில் புது அம்சம், நிறையப் பேச வேண்டியிருப்பதுதான். அதற்கு நம்மைப் பழக்கிக்கொள்ள வேண்டும். இதைச் சரியாகச் செய்யக் கண்ணாடி முன் நின்று ஓரிரண்டு தடவை பேசிப் பார்க்கலாம்.

அப்போது நமது முக பாவனைகள், உடை, உடல் மொழி, குரலின் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றைச் சரி செய்துகொள்ளலாம். ஆரம்பத்திலேயே ஒவ்வொரு முறையும், மாணவர்களுக்கு அவர்கள் கற்பது இணைய வழி மூலமாக, அதில் அவர்களுக்கு பொறுப்பு மிக அதிகம் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்வது நல்லது.

நிறையப் பேச வேண்டும் என்பதால், எந்தப் பாடமாக இருந்தாலும் நகைச்சுவை கலப்பது நல்லது. கேள்விகள் கேட்பது, அதற்கான பதிலுக்காகச் சில வினாடிகள்தான் பொறுத்திருக்க முடியும் எனச் சொல்வது, சரியான விடை சொல்பவரின் பேரைச் சொல்லிப் பாராட்டுவது போன்றவற்றைச் செய்யலாம். கடினமான பாடங்களையும் பகுதிகளாகப் பிரித்து எளிமையாக்குங்கள்.

வீட்டு வேலைகள் கொடுக்கும்போது, அதற்கு உதவி செய்யும் புத்தகங்கள், பக்கங்கள் மற்றும் பாராக்கள் போன்றவற்றையும் சேர்த்தே சொல்வது நல்லது. அப்படிச் சொல்லும்போது, இவ்வளவையும் சொல்லியிருக்கிறேன், ஆகவே செய்யாவிட்டால் மன்னிப்பு கிடைக்காது என்பதையும் சொல்லிவிடலாம்.

மாணவர்களோடு மற்றவர்கள் இருக்கக் கூடாது என்று ஆரம்பத்திலேயே வெளிப்படையாகச் சொல்லி அப்புறப்படுத்துங்கள். வகுப்பில் மற்றவர்களைச் சேர்க்க மாட்டோம் அல்லவா? அதை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள். அதை மீறி இருந்தால், நிர்வாகத்திடம் முறையிடப்படும் என்று எச்சரிக்கை செய்யுங்கள்.

நடந்தது நடந்ததுதான்

அப்படி நடத்தியிருக்கக் கூடாதோ, இப்படிச் சொல்லியிருக்கக் கூடாதோ, அவன்/அவள் என்ன பேச்சு பேசிவிட்டார் என்றெல்லாம் நினைத்துப் புழுங்குவதில் பலனே இல்லை. பிரச்சினை, நாம் அப்படிப் பேசியது அல்ல.

அது நிரந்தரமாகத் தங்குமே, அதை வைத்து பின்னால் என்ன நடக்குமோ என்பதுதான். இதை எப்படித் தவிர்ப்பது? வரும் முன்னர் காப்பதுதான் இருப்பதிலேயே சிறந்த வழி. ஆனாலும் தவறுகள் நடக்கத்தான் செய்யும். அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால், அடுத்த தவறுக்குத் தயாராகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இணையவழிக் கல்வி ஆசிரியருக்குத்தான் அதிகத் தலைவலி. ஏனென்றால் ஆசிரியர் இளைஞர்களைப் போல இணையதளத்தில் சலிக்காமல் உலா வருகிறவர் அல்ல. குடும்பம், பொறுப்புகள், பாடம், கற்பித்தலுக்கு தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும்.

தனிப்பட்ட வளர்ச்சிக்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பணிகளைச் செய்ய வேண்டும். அன்றாடக் குடும்ப வேலைகளையும் செய்ய வேண்டும். அதனால் இணைய வழிக் கற்பித்தல் கடினமானது. அதனாலேயே முன் தயாரிப்புகளில் கவனம் அதிகம் இருக்க வேண்டும்.

கத்தியை எந்த அளவுக்குக் கூர் தீட்டுகிறோமோ, அந்த அளவுக்கு மரங்களை எளிதாக, விரைவாக வெட்டக்லாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தயாரிப்புகள்

முதலில் என்ன நடத்த வேண்டும் என்பதைத் தீர்மானம் செய்வது. அடுத்து அதை எளிமையாக்குவது. அப்போதுதான் குறுக்கீடுகள் அதிகம் இருக்காது. மூன்றாவது அதை ‘மாதிரி வகுப்பு’ போலப் பதிவு செய்து பார்ப்பது. (இதை ஒரு முறை செய்தால் போதுமானது – அப்போதே நமது குறைகள் புரிபடும். திருத்திக்கொள்ளலாம்.) வீட்டுப் பாடத்திற்கான குறிப்புகளையும் முன்கூட்டியே தயார் செய்து கொள்ளலாம்.

டி.ஐ.ரவீந்திரன்

கடைசியாக பாடம் முடித்த பின் மாணவர்களுடன் கலந்துரையாடலாம். முதல் ஐந்து பேருக்கு வாய்ப்பு கொடுத்து கருத்து கேட்கலாம். மாணவர்களிடமிருந்து உருப்படியாக ஏதாவது யோசனைகள் வந்தால் அதைச் செயல்படுத்த வேண்டும்.

அதன்பின் அதைச் சொன்ன மாணவரை பாராட்ட வேண்டும். நன்றி சொல்லாதீர்கள். இது முக்கியம். நீங்கள் ஆசிரியர், குரு. மாணவன் நன்றியை எதிர்பார்க்க மாட்டார். பாராட்டை எதிர்பார்ப்பார். அதுவே முழு திருப்தியைத் தரும்.

மேலும் பார்க்கலாம்…

****

கட்டுரையாசிரியர் டி.ஐ.ரவீந்திரன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர் மனவள ஆலோசகராகப் பணிபுரிகிறார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு மின்னஞ்சல்: rawindran@gmail.com செல்: 98404 14389

09.01.2021     2 : 30 P.M

You might also like