பொள்ளாச்சி வழக்கும், கைதுகளும் உணர்த்துவது என்ன?
தமிழகத்தையே தலைகுனியவும், அதிரவும் வைத்தது பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு.
அதையொட்டி வெளியான காணொளிக் காட்சிகளை சுலபத்தில் நாம் மறந்துவிடமுடியாது.
“அண்ணா.. விட்டுருங்கண்ணா’’ என்கிற பெண்ணின் கதறல்கள் இன்னும் காதுகளில் எதிரொலிக்கின்றன.
தங்களுடைய பாலியல் வக்கிரத்திற்கு நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து கொடூரங்களை நிகழ்த்தி வந்திருக்கிற கும்பல் பிடிபடும்போதே அதிகாரத்தில் இருப்பவர்களின் பக்கம் கைகள் சுட்டிக்காட்டி நீண்டன. சிலர் கைது செய்யப்பட்டார்கள்.
பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட இளம் பெண்களின் பெயர்கள் பொதுவெளியில் பகிரப்படக் கூடாது என்கிற சட்டவிதியை மீறி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் பரப்பப்பட்டது. காவல்துறை அதிகாரி ஒருவர் விசாரணை துவங்குவதற்கு முன்பே இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பில்லை என்று அறிக்கை வாசித்தார்.
இத்தனைக்கும் பல மகளிர் அமைப்புகள் அப்போதே நடந்த கொடுமையைக் கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரியும் குரல் கொடுத்தனர். பிறகு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
தற்போது அ.தி.மு.க மாணவர் அணிப் பொறுப்பில் இருந்த ஒருவரையும் சேர்த்து மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க உடனே அறிக்கை வெளியிட்டு சம்பந்தப்பட்ட நபரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே கோவையில் மூன்று மாணவிகள் பேருந்தில் தீ வைக்கப்பட்டு உயிரிழந்த வழக்கு கொங்கு மண்டலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தற்போது பொள்ளாச்சி வழக்கில் இரண்டு ஆண்டுகள் தாமதமாகத் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மறுபடியும் ஊடக வெளியில் இந்த வழக்கு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தக் கைதுகள் நடந்திருப்பது, எதிர்மறையான பிரச்சாரத்திற்கு வழிவகுத்திருக்கிறது.
07.01.2021 11 : 43 A.M