தாம்பத்தியத்தில் மறைந்திருக்கும் குரூரம்!
சமூகத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதைவிட, ஒரு பெண் கணவனால் எப்படி எதிர்கொள்ளப்படுகிறார் என்பது இந்தியா அடைந்த முன்னேற்றங்களை கோடிட்டுக் காட்டிவிடும்.
அந்த வகையில், மிகப்பிரபலமான ஒரு வழக்கறிஞர் தன் மனைவியுடன் எவ்வாறு குடும்பம் நடத்துகிறார் என்ற உண்மையை மிக நுணுக்கமாகக் கடத்துகிறது ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள ‘கிரிமினல் ஜஸ்டிஸ்: பிஹைண்ட் தி டோர்ஸ்’. இது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது.
கிரிமினல் ஜஸ்டிஸ் முதல் பாகம் ஹாட் ஸ்டாரில் 2019-ல் வெளியானது. செய்யாத குற்றத்துக்குச் சிறையில் அடைக்கப்படும் ஒரு அப்பாவி எதிர்கொள்ளும் துன்பங்கள் அக்கதையில் சொல்லப்பட்டது.
முன்னதில் ஆண்கள் சிறையில் நடக்கும் கொடுமைகள் என்றால், இதில் பெண்கள் சிறையின் வரைபடம் மிக மேலோட்டமாக வரையப்பட்டிருக்கிறது.
அதே நேரத்தில், தனது குடும்பம் மற்றும் கணவனின் மாண்பைக் காக்க நினைக்கும் ஒரு பெண்ணின் உள்ளக் குமுறல் முடிந்தவரை முழுமையாக வெளிப்படுகிறது.
படுக்கையில் நிகழும் கொலை!
முதல் பாகத்தைப் போலவே, இதிலும் படுக்கையில் ரத்தம் நிறைந்திருப்பதில் இருந்து கதை தொடங்குகிறது.
மும்பை உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருப்பவர் பிக்ரம் சந்திரா (ஜிஷு சென்குப்தா). மனைவி அனு (கீர்த்தி குல்ஹரி) மற்றும் மகள் ரியாவுடன் வசதியான வாழ்க்கையை வாழ்கிறார்.
ஒரு வழக்கில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் பிக்ரம், அனுவின் செயல்பாட்டில் ஏதோவொரு வித்தியாசத்தை உணர்கிறார். அந்த நேரத்தில் ரியாவும் அவரது தோழி ரித்தியும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வருகின்றனர்.
ரியாவின் தோழியை வீட்டில் விடச் செல்லும் பிக்ரம், ரித்தியின் தந்தை மோக்ஷ் சின்ஹாவை அன்றைய தினம் அனு சந்தித்ததை மிகச்சரியாக யூகிக்கிறார். அனுவுக்கு மனநல ஆலோசகராகவும் மோக்ஷ் இருக்கிறார்.
வீடு திரும்பும் பிக்ரம் கோபமாக இருப்பதைக் காணும் அனு, அவரை சமாதானப்படுத்த முயல்கிறார். படுக்கையறையில் கணவனும் மனைவியும் உறவில் ஈடுபடும்போது, பிக்ரம் வலியால் துடிக்கும் சத்தம் கேட்கிறது.
அறையைவிட்டு அனு வெளியேற, தந்தையின் வயிற்றில் கத்தி குத்தியிருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறாள் ரியா. போலீஸ் ஸ்டேஷனில் பிக்ரமை அனு கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதாக வழக்குப் பதிவாகிறது.
சிறையில் அடைக்கப்படும் அனு, எதற்காக கணவரைக் கத்தியால் குத்தினார் என்ற காரணத்தை விசாரணையில் சொல்ல மறுக்கிறார். அதனை நோக்கிச் செல்கிறது இத்தொடரின் முடிவு.
நிறைய வித்தியாசங்கள்!
கிரிமினல் ஜஸ்டிஸ் முதல் பாகத்தில் சிறை நடைமுறைகளும், அங்கு நிலவும் சட்டத்தை மீறிய விதிகளும் நம் மனதில் ரத்தத்தை வரவழைக்கும் ரகமாக இருக்கும். ஆனால், இந்த பாகத்தில் பெண்கள் சிறையின் இருப்பு மனதில் பெரிதாகப் பதியவில்லை.
முந்தைய பாகத்தைப் பார்க்கும்போது, நீதிமன்றக் காட்சிகள் வந்தாலும் சிறைக்குள் இருப்பது போன்ற உணர்வே உருவாகும். இதில், அந்த அளவுக்குச் சிறை காட்சிகள் அழுத்தமாக இல்லை.
அதனால், அனு எனும் பாத்திரம் சிறைக்குள் அனுபவிக்கும் துன்பங்கள் நம்மில் பெரிதாகத் தாக்கம் ஏற்படுத்துவதில்லை.
முந்தைய பாகத்தில் வழக்கறிஞர் நிகத் ஹுசைன் (அனுப்ரியா கோயங்கா) மற்றும் மாதவ் மிஸ்ரா (பங்கஜ் திரிபாதி) இடையே வர்க்க வேறுபாட்டை மீறி முகிழ்க்கும் நட்பு விரிவாகக் காட்டப்படும்.
இதில், அதற்குப் பதிலாக மனைவி ரத்னாவுக்கும் (குஷ்பு ஆத்ரே) மாதவுக்கும் இடையிலான முரண் அதே பாணியில் காட்டப்படுகின்றன.
மென்சோகத்தை எப்போதும் தாங்கியபடி வருகிறார் அனுவாக நடித்துள்ள கீர்த்தி குல்ஹரி. அவரது மகளாக வரும் அட்ரிஜா சின்ஹாவும் அதைப் பிரதிபலித்திருப்பது அருமை.
பங்கஜ் திரிபாதியும் அனுப்ரியாவும் வழக்கம்போல தங்கள் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். பங்கஜின் மனைவியாக வரும் குஷ்பு அவ்வப்போது நம்மை கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
மீடா வசிஷ்ட், தீப்தி நாவல், ஆசிஷ் வித்யார்த்தி, போலீஸ் அதிகாரியாக வரும் பங்கஜ் சரஸ்வத் அனைவரும் ரொம்பவும் சீரியசாக வந்து போகின்றனர்.
ஆனாலும், இக்கதையின் மெயின் தீம் சார்ந்து நடித்திருப்பது கவுரி-ஹர்ஷ் பிரதான் ஜோடியாக நடித்திருக்கும் கல்யாணி முலாய் மற்றும் அஜித்சிங் பலாவத்.
கதைப்படி ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றுபவர்களாக வரும் இவர்கள்தான், வீட்டிலும் அலுவலகத்திலும் ஒரு பெண்ணை சமூகம் எப்படி அணுகுகிறது என்பதை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக, அஜித்சிங்கின் நடிப்பு அரை டஜன் தமிழ், மலையாள குணசித்திர நடிகர்களை நினைவூட்டுகிறது.
அனுவுக்கு தண்டனை வாங்கித் தர, அவர் ஏன் துடிக்கிறார் என்ற கேள்விக்குள் இந்திய ஆண்களின் ஆதிக்க மனநிலையை அடக்கியிருப்பது அருமையான உத்தி. இந்தத் தொடரைப் பார்க்க, இவரது நடிப்பே போதுமானது.
சிறையில் அனுவுடன் இருக்கும் சக கைதிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தெரிந்தாலும், வில்லியாக வரும் இஷானி (ஷில்பா சுக்லா) மட்டும் ‘டெம்ப்ளேட்’டாக தென்படுகிறார்.
முந்தைய பாகத்தின் திரைக்கதையை ஸ்ரீதர் ராகவன் வலுவாக அமைத்ததுபோல, இரண்டாம் பாகத்தை எழுதிய அபூர்வா அஸ்ரானி காட்சிகளுக்கிடையே இறுக்கத்தை அதிகப்படுத்தவில்லை.
அதேநேரத்தில், கணவரால் ஆயுள் முழுக்கத் துன்பப்படும் மனைவி அது பற்றி பொதுவெளியில் சிறு துளி கூட வெளிப்படுத்த மாட்டார் என்பதை அடிப்படையாக வைத்து ஒட்டுமொத்த திரைக்கதை வசனத்தை வடிவமைத்திருக்கிறார்.
ரோஹன் சிப்பி மற்றும் அர்ஜுன் முகர்ஜியின் இயக்கத்தில் சரிபாதி எபிசோடுகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், முடிவில் பார்வையாளர்களுக்கு அதிருப்தி ஏதும் மீதமிருப்பதில்லை.
ஒளிப்பதிவு செய்த திரிபுவன் பாபு, தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்ட சுனில் நிக்வேகர், பின்னணி இசை நல்கிய சமீர் படேர்பேகர், படத்தொகுப்பை கையாண்ட அபிஜித் தேஷ்பாண்டே மற்றும் சவுரப் பிரபுதேசாய் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்.
பீட்டர் மொப்பத் எழுதிய கதையை ஆதாரமாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பிபிசி ஸ்டூடியோஸ் இந்தியாவுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் இதனைத் தயாரித்துள்ளது.
வெப் சீரிஸ்களை உற்று நோக்குகையில் தயாரிப்பு தரப்பையும் கணக்கில் கொள்ளும் வகையில் இந்நிறுவனங்களின் கதைத் தேர்வு அமைந்திருக்கிறது.
அதிருப்தியும் உண்டு!
முந்தைய பாகத்தில் சிறையே அதிகம் காட்டப்பட்டாலும், பங்கஜ் மற்றும் அனுப்ரியா பாத்திரங்களின் செயல்பாடு திரைக்கதையின் திருப்புமுனைகளைத் தீர்மானிக்கும். இதில், அப்படியொரு திருப்தி பார்வையாளர்களுக்குக் கிடைப்பதில்லை.
முதல் பாகத்தில் இருந்த பத்து எபிசோடுகளும் ரத்தினச் சுருக்கமான தோற்றத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தும். இத்தொடரில் 8 எபிசோடுகள் இருந்தாலும், கதை நீட்டி முழக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது.
கணவன் மனைவியை படுக்கையறையில் அணுகுவதும், அது பற்றி பொதுவெளியில் இருவரும் பேசாமல் மறைப்பதும்தான் இக்கதையின் மையம்.
போலீஸ் விசாரணையின் அடுத்தடுத்த கட்டங்களில் அனு உண்மையைச் சொல்லியிருந்தால், இரண்டு மூன்று எபிசோடுகளில் முடிய வேண்டிய கதை. ஆனால், அதனைச் சொல்லாமல் தடுப்பது ஒரு பெண்ணை நம் சமூகம் அணுகும் விதம் மட்டுமே என்பதை திரைக்கதை தெளிவாக உணர்த்துகிறது.
அதைத் தவிர்த்து, மற்ற விஷயங்களனைத்தும் குறிப்பிட்ட அளவில் நீர்த்திருப்பதால் ஒருவித அயர்ச்சி ஏற்படுகிறது. அதனைக் கணக்கில் கொள்ளாவிட்டால் அல்லது முந்தைய பாகத்தை பார்க்காமலிருந்தால், ‘கிரிமினல் ஜஸ்டிஸ்-பிஹைண்ட் தி டோர்ஸ்’ ஓரளவு திருப்தியைத் தரும்!
– உதய் பாடகலிங்கம்
07.01.2021 12 : 29 P.M