குழந்தைகள் விரும்பும் ஸ்பெஷல் முட்டை சீஸ் ரோல்!

புரதமும் கொழுப்பும் நிறைந்த முட்டையை வேகவைத்து சாப்பிடும்போது அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

குழந்தைகள் உட்பட அனைவரும் உணவில் அன்றாடம் முட்டையை எடுத்துக் கொண்டால், உடல் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.

முட்டையை வெறுமனே வேக வைத்துக் கொடுப்பதைவிட, குழந்தைகள் விரும்பும் வகையில் முட்டை சீஸ் ரோல் செய்து கொடுத்தால் அவர்கள் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள். அதன் செய்முறை இதோ:

தேவையான பொருட்கள்:

முட்டை – 2
சீஸ், பிரட் – 8 துண்டுகள்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1

சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை:

ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனுடன் மிளகாய் தூள், சாட் மசாலா சேர்த்து, கலவை நன்கு கெட்டியாகும் வரை கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு சோளமாவில் தண்ணீர் ஊற்றி ஓரளவு நீர்ம நிலையில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன்மேல் ஒரு சீஸ் துண்டை வைத்து, அதனுடன் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவை சிறிதை சீஸ் மேல் வைத்து, நீர்ம நிலையில் கலந்து வைத்துள்ள சோள மாவு கொண்டு ரோல் போன்று சுருட்டிக் கொள்ள வேண்டும்.

இதே போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும்.

இறுதியில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சுருட்டி வைத்துள்ள ரோல்களை வைத்து, நன்கு பொன்னிறமாகும் வரை பிரட்டி எடுத்தால், சுவையான முட்டை சீஸ் ரோல் தயார்.

06.01.2021 04 : 15 P.M

You might also like