பாதாள் லோக் – புவிப்பரப்பின் கீழிருக்கும் மக்களின் வாழ்க்கை!

கடந்த ஆண்டு ஓடிடி, யூடியூப் மற்றும் குறிப்பிட்ட செயலிகள் மூலமாகப் பல்வேறு விதமான படைப்புகள் மக்களைச் சென்றடைந்துள்ளன. அவற்றில் முதன்மையானதாகச் சொல்லப்படுவது அமேசான் பிரைமில் வெளியான ‘பாதாள் லோக்’.

பாதாள மக்கள் என்பது டைட்டிலுக்கான அர்த்தம். அதற்கேற்ப, இந்திய சமூகத்தின் அடித்தட்டு மக்கள் படும் அல்லல்கள் கதைநகர்வினிடையே பிரசாரத் தொனியின்றி சொல்லப்படுகிறது உக்கிரமாக.

உள்ளடக்கம், திரைக்கதை வடிவம், காட்சியாக்கம் என்று வெப் சீரிஸ்களுக்கான ‘டெம்ப்ளேட்’ அமைக்கும் அளவுக்குத் திறன்வாய்ந்ததாக இருக்கிறது ‘பாதாள் லோக்’.

ஓராயிரம் அவலங்கள்!

பத்திரிகையாளர் ஒருவரைக் கொல்ல முயன்றதாகச் சொல்லி மூன்று ஆண்கள், ஒரு பெண் உட்பட 4 பேரைக் கைது செய்கிறது டெல்லி காவல் துறை. புறநகர் காவல் நிலையமொன்றைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் வரிசையாகத் தெரிய ஆரம்பிக்க, ஒவ்வொருவரது பின்னணி பற்றியும் விசாரணை தொடங்குகிறது. இந்த சூழலில் அவசர அவசரமாக அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

பாகிஸ்தானின் சதிச்செயல் இதன் பின்னிருப்பதாகவும், தொடர்ச்சியாக மூத்த பத்திரிகையாளர்களைக் கொல்ல இக்கும்பல் திட்டம் தீட்டியதாகவும் செய்திகள் வெளியாகின்றன.

இதற்குப் பின்னரும், சம்பந்தப்பட்ட அதிகாரியும் அவரது உதவியாளரும் அந்த வழக்கைப் பின்தொடர்கின்றனர். அவர்கள் கண்டறியும் உண்மை என்னவென்பதோடு கதை முடிவடைகிறது.

சாதி, மதம், பொருளாதாரம் உட்பட எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் மனிதர்களை சமதளத்தில் இருக்கவிடாமல் செய்கின்றன. நேர்கோடாகப் படரும் போலீஸ் அதிகாரிகளின் விசாரணையின் இடையே ஆங்காங்கே பிரியும் சிறு கிளைகள் மூலமாக அவை சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.

வெவ்வேறு தளங்களில் வாழ்க்கை!

பாதாள் லோக் சீரிஸ் தனித்துவத்துடன் அணுகப்படுவதற்குக் காரணம், வெவ்வேறு தளங்களில் வாழ்பவர்களை அவற்றுக்குரிய இயல்புடன் சித்தரிப்பதுதான்.

இதில் இன்ஸ்பெக்டர் ஹதிராம் சவுத்ரியாக நடித்திருக்கும் ஜெய்தீப் அலாவத், உண்மையிலேயே மொத்தக் கதையையும் தன் தோள் மீது சுமக்கிறார். நடக்கும்போது நம்மூர் மாதவனை நினைவுபடுத்தும் இவர், காட்சியின் தன்மைக்கேற்ற நடிப்பை அபாரமாக வெளிப்படுத்துகிறார்.

கமலின் ‘விஸ்வரூபம்’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கிறார் என்பதால் இவரது முகம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானது.

ஹதிராம் மனைவி ரேணுவாக வரும் குல் பனாக், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அப்பாவி குடும்பப் பெண்ணாக வருகிறார்.

இதேபோல, இதில் வரும் இன்னொரு ஜோடி சஞ்சீவ் மெஹ்ரா – டோலி. நடுத்தர, மேல்தட்டு வாழ்க்கை முறை இவ்விரண்டு ஜோடிகளுக்கிடையே கோடு கிழிக்கிறது.

சஞ்சீவாக நடித்துள்ள நீரஜ் கபி, தொலைக்காட்சிகளில் கோட் அணிந்துகொண்டு விவாதங்களை நடத்தும் ஒரு நூறு தொகுப்பாளர்களைக் கண் முன் கொண்டு வருகிறார். அவரது மனைவியாக வரும் ஸ்வஸ்திகா மிகக்குறைவான காட்சிகளில் வந்தாலும், பாத்திரத்தின் அடிப்படைத் தன்மையைக் கொஞ்சமும் குலைத்து விடாமல் நடித்திருக்கிறார்.

விபின் சர்மா, மனீஷ் சவுத்ரி, ராஜேஷ் சர்மா மற்றும் ஆகாஷ் குரானா என்று நாடக, தொலைக்காட்சி உலகில் கோலோச்சிய மிகச்சிறப்பான நடிகர்களும் இதில் முகம் காட்டியிருக்கின்றனர்.

ஜெய்தீப்பின் உதவியாளராக வரும் இஸ்வக் சிங் மூலமாக முஸ்லிம் சமூகத்தவருக்கு அரசு அலுவலகங்களில் கிடைக்கும் மரியாதை காட்டப்படுகிறது. கபீர் (ஆசிஃப் கான்) மூலமாக முஸ்லிமாக வாழ்வதில் இருக்கும் சிக்கல் பேசப்படுகிறது.

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் நிலவும் சாதிக் கொடுமைகளைச் சொல்கிறது டோப்சிங் (ஜஹ்ஜீத் சந்து) வாழ்க்கை. இந்தியாவின் மத்திய மாநிலங்களில் தலித் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் விஷால் தியாகி (அபிஷேக் பானர்ஜி) கதை மூலமாகச் சொல்லப்படுகிறது.

மேரி லிங்டோ (மெய்ரம்பம் ரொனால்டோ) கதையில், தெருவோரச் சிறுவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் பொட்டிலறைந்தாற்போலச் சொல்லப்படுகிறது.

இவையனைத்துக்கும் மேலே ‘பேக் நியூஸ்’ எனப்படும் பொய்ச்செய்திகள் உருவாகும் விதத்தையும் அதில் கொட்டப்படும் உழைப்பையும் பேசுமிடத்தில் செய்தித் தொலைக்காட்சி விவாதங்களின் ஆழம் கேலிக்குள்ளாக்கப்படுகிறது.

தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் காட்டுக்குள் திரிவதையும், அவர்களைச் சார்ந்தவர்கள் சமூகத்தில் அதிகார பீடத்தைத் தேடுவதையும் கூட இக்கதை பேசுகிறது.

ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமுண்டு என்ற வகையில், இதில் இடம்பெற்ற ஒவ்வொரு பாத்திரமும் தனக்கான வாழ்வை முன்வைக்கிறது. இதுவே பாதாள் லோக்கின் பலம். அதனாலேயே, இதில் நடித்தவர்கள் ஒவ்வொருவரையும் உற்றுக் கவனிக்கத் தோன்றுகிறது.

உண்மைக்கு நெருக்கமான கதை!

மிகச்சிறிய பிளாஷ்பேக்குகள். அதன் பின்னணியில், நெஞ்சை உறைய வைக்கும் ஒரு உண்மை.

பாதாள் லோக் சீரிஸில் அடங்கியுள்ள 9 எபிசோடுகளிலும் இந்த பொதுத்தன்மை தொடர்கிறது.

காட்சிக் கோணத்தில் அழகு ஜொலிக்க வேண்டுமென்பதற்காக எந்தவொரு விஷயமும் வலிந்து திணிக்கப்படவில்லை. அதே நேரத்தில், கதை சொல்லலில் சுவாரஸ்யம் சேர்ப்பதற்கான இடங்களையும் புறக்கணிக்கவில்லை.

முக்கியமாக, எத்தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழலாம் என்ற வகையிலேயே காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் அரசியல் கட்சிகள், தலைவர்கள் குறித்த சித்தரிப்புகள் அன்றாடச் செய்திகளை மிஞ்சும் வகையில் இருக்கின்றன.

தெஹல்கா இணையதள நிறுவனர் தருண் தேஜ்பால் எழுதிய ‘தி ஸ்டோரி ஆஃப் மை அசாஸின்’ என்ற நூலைத் தழுவி ‘பாதாள் லோக்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே, இத்தொடரில் வரும் அரசியல் கட்சிகள், தலைவர்கள், நிகழ்வுகள் குறித்த உருவகங்களை பார்வையாளர்களுக்குள் ஏற்படுத்துகிறது.

ஊரடங்கு காலத்தில், இத்தொடரைப் புறக்கணிக்க வேண்டுமென்ற குரல் சமூக வலைதளங்களில் ஓங்கி ஒலித்ததையும் இதையும் கூட தொடர்புபடுத்திப் பார்க்க முடியும்.

இக்கதையை திரைக்கதைக்கு வடிவத்துக்கு மாற்றியவர்கள் சுதீப் சர்மா மற்றும் சாகர் ஹவேலி, ஹர்தீக் மேத்தா, குஞ்சித் சோப்ரா. இவர்களது சுவாரஸ்யமான கதை சொல்லலும் காட்சி உருவாக்கமும் வெற்றியின் வேராக விளங்குகின்றன.

இதனை இயக்கியவர்கள் பிரோசித் ராய் மற்றும் அவினாஷ் அருண் தாவரே.

அவினாஷ் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால், அவர் இயக்கிய பகுதிகள் அவரது கைவண்ணத்தில் படமாக்கப்பட்டுள்ளன. பிரோசித் இயக்கிய பகுதிகளுக்கு சௌரப் கோஸ்வாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பார்வையாளர்களை எந்த இடத்திலும் புலம்பித் தவிக்கவிடாமல், கதையை நேர்படப் புரியவைத்ததற்காக படத்தொகுப்பாளர் சன்யுக்தா ஹஸாவுக்கு பாராட்டுகளைச் சொல்லியே தீர வேண்டும்.

இதற்கு இசையமைத்த நரேன் சந்தவர்கர் மற்றும் பெனடிக்ட் டெய்லர் இருவருமே, தங்களது உழைப்பு தனித்து தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தயாரிப்பு வடிவமைப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, ஒப்பனை என்று ஒவ்வொரு துறையினரும் தங்களது பங்களிப்பை மிகச்சிறப்பாகத் தந்திருக்கின்றனர். பல நகரங்கள், இடங்கள் என்று ரியல் லொகேஷன்களில் படம்பிடித்திருப்பது தயாரிப்பு நிர்வாகிகளையும் பாராட்டத் தூண்டுகிறது.

எதிர்மறையான தாக்கம்!

செய்யாத குற்றத்துக்காக ஒரு கொலையாளி மற்றும் அவருடன் திரிந்த மூன்று நபர்கள் மரணத்தை நோக்கிச் செல்வதும், குற்றத்துக்குக் காரணமானவர்கள் வளமாக வாழ்வதும் கதை நகர்வில் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், இந்திய சமூகத்தில் சாதி, மதம் குறித்த கற்பிதங்கள் கொஞ்சமும் மங்காமல் ஒளிவீசுவதும் பேசப்படுகிறது.

இது பார்வையாளர்கள் மனதில் ஒருவித இருண்மையை ஏற்படுத்துவது மிகப்பெரிய குறை.

பொதுவாகவே வெப் சீரிஸ்கள் என்பது ஒரு நாவலைப் படிக்கும் அனுபவத்தைத் தர வேண்டுமென்பது எனது எதிர்பார்ப்பு. சினிமாவில் அல்லது குறும்படங்களில் சிறுகதைகளையும், தொலைக்காட்சிகளில் தொடர்கதைகளையும் சொல்ல முடியும் என்று கொண்டால் இது புரியவரும்.

அந்த வகையில், 9 எபிசோடுகளிலும் தொய்வு சிறிதும் ஏற்படாமல் மிகச்சீராகக் கதை சொல்கிறது ‘பாதாள் லோக்’.

நெட்பிளிக்ஸில் வெளியான ‘சேக்ரட் கேம்ஸ்’ இரு பாகங்களும் வெப் சீரிஸ்களில் மைல்கல்லாக கருதப்படுகின்றன. அவற்றில் கூட சினிமாத்தனமான கதை சொல்லல், காட்சி கோணங்கள், நடிப்பு இத்யாதி போன்றவற்றை நிரப்பியிருக்கும். ஆனால், வெவ்வேறு மனிதர்களின் வாழ்வு குறித்த பிரமிப்பையும் பயத்தையும் அருவெருப்பையும் வெட்கத்தையும் கோபதாபத்தையும் மனதுக்கு நெருக்கமாக்கிய வகையில் உயர்ந்து நிற்கிறது ‘பாதாள் லோக்’.

வருங்காலத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகும் படைப்புகள் தாண்ட வேண்டிய எல்லைக் கோட்டையும் வரைந்திருக்கிறது!

-உதய் பாடகலிங்கம்

You might also like