போராட்டக் களத்திலேயே என்னைப் புதைத்து விடுங்கள்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, காஸிபூர், திக்ரி ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு 6 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. நாளை மறுநாள் மத்திய அரசுடன் ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்தப் போராட்டக் களத்தில் பங்குபெற்றவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகள். அவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தநிலையில் இதுவரை 40-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட 6 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் காசியாபாத்தில் உள்ள போராட்டக் களத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட அந்த விவசாயி, தன்னை எல்லையிலேயே புதைக்க வேண்டுமென உருக்கமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, அங்குள்ள நடமாடும் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
02.01.2021 04 : 55 P.M