தமிழ்த் திரையிசை என்பது ஒரு காலத்தின் வாழ்வியலையும், மனிதர்களின் உணர்வுகளையும், சமூகத்தின் சிந்தனைப் போக்குகளையும் தன்னுள் பதிவு செய்திருக்கும் பண்பாட்டு வெளி.
இந்த வெளியில் கவிஞர் கண்ணதாசனின் பங்களிப்பு தனித்துவமானது. அவர் எழுதிய பாடல்கள் திரைப்படக் காட்சிகளுக்குத் தேவையான உணர்வுகளோடு, மனித வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களையும் எளிய சொற்களில் கவித்துவமாகப் பதிவு செய்தன.
காதல், பிரிவு, தாய்மை, குடும்பம், நட்பு, வீரம், பக்தி, அரசியல், சமூகம், தத்துவம் என மனித வாழ்வின் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் அங்கே கண்ணதாசனின் பாடல் ஒன்றை நினைவுகூர முடியும்.
திரைப்பட உலகில் பாடலாசிரியராக ஏறத்தாழ 33 ஆண்டுகள் இயங்கியதாகவும் சுமார் 5 தொகுதிகளில் வெளிவந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 2,500 க்கும் மேலானதென ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதில் மனித வாழ்வின் எல்லா உணர்வுகளுக்கும் அவர் எழுத்துருவம் தந்திருக்கிறார்.
அதை அவரே “மனித வாழ்விலும் உலகத்து நடப்பியலிலும் எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அங்கே எனது பாடலொன்று எதிரொலிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
இது கவிஞரின் தற்பெருமையாகக் கருதப்பட வேண்டிய கூற்று அல்ல. மனித வாழ்க்கையை அதன் முழுமையான அனுபவங்களோடு அணுகிய ஒரு படைப்பாளியின் தன்னம்பிக்கையாகவே இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில், வாழ்வில் நிகழும் மகிழ்ச்சி, துயரம், ஏமாற்றம், காதல், பிரிவு, நம்பிக்கை, விரக்தி எனப் பல்வேறு உணர்வுகளுக்கும் அவர் பாடல்களில் வெளிப்பாட்டுக்கான மொழி கிடைத்திருக்கிறது.
000
கண்ணதாசனின் திரையுலகப் பயணம் தொடக்கத்தில் எளிதானதாக அமையவில்லை.
மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 1944ஆம் ஆண்டில் ‘இல்லற ஜோதி’ திரைப்படத்திற்கான வசனப் பணியில் ஈடுபடத் தொடங்கிய அவர், தொடர்ந்து எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காத சூழலில் கோவைக்குச் செல்கிறார்.
அங்கு ஜூபிடர் பிக்சர்ஸ் மேலாளர் டி.எஸ். வெங்கடசாமியின் அறிமுகம் வழியாக இயக்குநர் ராம்நாத்தைச் சந்திக்கிறார்.
அப்போது உருவாகிக் கொண்டிருந்த ’கன்னியின் காதலி’ திரைப்படத்திற்குப் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது.
ஒரு பெண் ஆண் வேடத்தில் தோன்றி இன்னொரு பெண்ணுக்கு ஆறுதல் கூறும் காட்சியை ராம்நாத் விளக்குகிறார்.
அந்தச் சூழலுக்குப் பாடல் எழுதும் ஆர்வத்துடன் கண்ணதாசன் உடனடியாகச் செயல்பட்ட விதத்தைத் தேடல் எஸ். முருகன் தன் நூலில்,
“கண்ணதாசன் ஓட்டமாக ஓடினார். ஒரு கோப்பைத் தேநீரைக் குடித்துவிட்டு, ஒரு பாக்கெட் சிகரெட்டும், கொஞ்சம் பேப்பரும் வாங்கிக்கொண்டார்.
கோவை ஜெயில் ரோடு வீட்டில் அமர்ந்து மனதில் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளைக் கொட்டினார்.” – என்று குறிப்பிடுகிறார்.
அந்தத் தேடலின் வெளிப்பாடாகப் பிறந்ததே அவரது முதல் திரைப்பாடலான,
“கலங்காதிரு மனமே – நீ
கலங்காதிரு மனமே – உன்
கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!”
-என்ற பாடல். 1949ஆம் ஆண்டில் வெளியான இந்தப் பாடல் திரைப்படக் காட்சிக்கான ஆறுதலாக மட்டுமல்லாமல், வாய்ப்புகளுக்காகக் காத்திருந்த இளம் கவிஞர் தனக்குத்தானே சொல்லிக்கொண்ட நம்பிக்கை மொழியாகவும் அமைந்திருக்கிறது.
000
கண்ணதாசனுக்கு முன்பே தமிழ்த் திரையுலகில் பாபநாசம் சிவன், ராஜகோபாலய்யர், உடுமலை நாராயணகவி, சுந்தரவாத்தியார், வேலுச்சாமிக் கவி, பூமிபாலக தாஸ், கே.பி.காமாட்சி, கே.டி.சந்தானம் உள்ளிட்ட பலர் பாடல்களை எழுதியுள்ளனர்.
அவர்களுடைய பங்களிப்புகள் தமிழ்த் திரையிசையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன.

அந்த மரபின் தொடர்ச்சியில் வந்த கண்ணதாசன், பாடல்களின் பாடுபொருள்களையும் வெளிப்பாட்டு முறைகளையும் மேலும் விரிவுபடுத்தினார்.
குறிப்பாக, இலக்கியத்தின் ஆழத்தையும் சாதாரண மக்களின் பேச்சு மொழிக்கு நெருக்கமான எளிமையையும் இணைத்துப் பாடல்களை உருவாக்கியதில் அவருக்குத் தனித்த இடமுண்டு.
கவிதை என்பது கடினமான சொற்களாலும் அரிய கற்பனைகளாலும் மட்டுமே உருவாக வேண்டியதில்லை என்பதை அவரது பாடல்கள் தொடர்ந்து உணர்த்துகின்றன.
எளிய சொற்களைக் கொண்டு ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துவதும், அன்றாட வாழ்வில் நாம் காணும் காட்சிகளைப் புதிய கவித்துவத்துடன் சொல்லுவதும் அவரது தனித்துவமான ஆற்றலாக இருந்தது.
இதற்கு ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ என்ற பாடலில் இடம்பெறும் வரிகளைக் கவனிக்கலாம்.
“உண்டென்று சொல்வதுன்றன் கண்ணல்லவா
– வண்ணக் கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்றன் இடையல்லவா
– மின்னல் இடையல்லவா.”
காதலியின் கண்களையும் இடையையும் வருணிக்கும் இவ்வரிகளில் முதலில் தோன்றுவது எளிமை.
ஆனால், அந்த எளிமைக்குள் ஒளிந்திருக்கும் கற்பனை நுட்பமானது.
காதலியைக் காணும் காதலனின் பார்வையில் அவளது கண்கள் திறந்து மூடுகின்ற அசைவு ‘உண்டு’ என்று சொல்லும் மொழியாகிறது. அவள் நடக்கும்போது இடை அசைவது ‘இல்லை’ என்று மறுக்கும் மொழியாகிறது.
மனித உடலின் இயல்பான அசைவுகளைச் சொற்களின் விளையாட்டாகவும் காதலின் குறும்பான வெளிப்பாடாகவும் மாற்றியிருக்கிறார் கவிஞர்.
ஒரு நீண்ட வருணனையால் சொல்ல வேண்டியதை இரண்டு எளிய தொடர்களில் காட்சிப்படுத்திவிடுகிறார்.
அதேபோல், ‘நான் என்ன சொல்லிவிட்டேன், நீ ஏன் மயங்குகிறாய்?’ என்ற பாடலில்,
“செம்மாம்பழம் போலே – கண்ணம் சிவந்து விட்டதடி!
கொண்ட மௌனத்தினாலே – இதழ் கனிந்து விட்டதடி!”
என்ற வரிகள் காதலின் நாணத்தை அழகான காட்சியாக்குகின்றன. காதலனைக் கண்டதும் காதலியின் கன்னங்கள் சிவக்கின்றன.
பேசுவதற்குத் துடிக்கும் இதழ்கள் மௌனத்தில் உறைகின்றன. அந்த மௌனமே அவளுடைய உணர்வுகளை வெளிப்படுத்திவிடுகிறது. இதனைத் தொடர்ந்து,
“நின்று தூங்குகிறாயோ இல்லை ஏங்குகிறாயோ”
என்று கேட்கும் இடத்தில் காதலியின் மனநிலையை மட்டுமல்ல, அவளது உடல்மொழியையும் வாசகர் கண்முன் நிறுத்துகிறார்.
காதல் என்பது சொல்லப்படுவதில் மட்டுமல்ல, சொல்ல முடியாமல் தவிப்பதிலும் இருக்கிறது என்பதை இத்தகைய வரிகள் உணர்த்துகின்றன.
கவிதை என்பது வாசிப்பவரின் மனதில் ஒரு காட்சியை உருவாக்க வேண்டும். கண்ணதாசனின் பல பாடல்கள் அந்தத் தன்மையை இயல்பாகப் பெற்றிருக்கின்றன.
திரைப்படத்திற்காகப் பாடல் எழுதுகிறோம்; அது சில மணித்துளிகள் மட்டுமே ஒலித்துவிட்டு மறைந்துவிடும் என்ற எண்ணம் கண்ணதாசனிடம் இருந்ததில்லை.
தான் எழுதும் பாடல் எத்தகைய சூழலுக்காக அமைந்தாலும் அதில் கவித்துவமும் பொருள் செறிவும் இருக்க வேண்டும் என்பதில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.
அதனால்தான் சங்க இலக்கியம், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சிந்தனைகளையும் கற்பனை வளத்தையும் தனது வாழ்க்கை அனுபவங்களோடு இணைத்துப் புதிய பாடல்களாகப் படைத்தார்.
இலக்கியங்களைப் படித்தவர் என்ற அடையாளத்தை மட்டும் அவர் தக்கவைத்துக் கொள்ளவில்லை; அவற்றிலிருந்து பெற்ற உணர்வுகளையும் கருத்துகளையும் மக்கள் எளிதில் அணுகக்கூடிய மொழியில் வெளிப்படுத்தினார்.
(தொடர்வோம் கவிமொழி இலக்கியத்தை…)
- மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்.
