‘திணை’ என்ற சொல்லைக் கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து நிலங்கள்தான்.
ஆனால், திணை என்பது வெறும் நிலப்பிரிவின் பெயரல்ல. தமிழர்களின் வாழ்க்கையை இயற்கையோடு இணைத்து, அறத்தோடு வழிநடத்திய ஒரு மிகப்பெரிய வாழ்வியல் கோட்பாடு.
உலகின் பல பழமையான மொழிகள் தங்கள் இலக்கியச் செல்வத்தைப் பெருமையாகப் பேசுகின்றன.
ஆனால், தமிழின் தனிச்சிறப்பு என்னவென்றால், தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கையையே இலக்கணமாக்கியவர்கள்!
இதற்குச் சிறந்த சான்று தொல்காப்பியம்.
தொல்காப்பியம் தமிழின் இலக்கணத்தை வெறும் எழுத்து, சொல் என்று மட்டும் பார்க்கவில்லை.
மனித வாழ்க்கையையும் அதன் உணர்வுகளையும் சமூக ஒழுக்கத்தையும் இயற்கையையும் இணைத்து அகம் – புறம் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக வகுத்துக் காட்டியது.
அகம் என்பது மனிதனின் உள்ளத்தையும், காதலையும், குடும்ப வாழ்வையும் பேசுகிறது.
புறம் என்பது மனிதனின் சமூக வாழ்வையும், வீரம், கொடை, புகழ், அரசியல், போர் போன்ற வெளிப்புறச் செயல்களையும் பேசுகிறது.
ஆனால், இந்த அகம் – புறம் இரண்டிற்கும் அடிப்படையாக இருந்தது அறம். தமிழர்களின் சிறப்பு இதில்தான் இருக்கிறது. அவர்கள் அறத்தை ஏட்டில் மட்டும் எழுதி வைத்தவர்கள் அல்லர்.
எழுத்தறிவிலும் ஏட்டறிவிலும் மட்டுமல்லாமல், வாழ்விலும் நடைமுறையிலும் அறத்தைப் பின்பற்றியவர்கள்.
“எப்படி வாழ வேண்டும்?” என்பதற்கான வழிகாட்டியாகவே அவர்களுடைய இலக்கியமும் இலக்கணமும் இருந்தன.
அதனால்தான் தமிழர்களிடம் கல்வி என்பது வெறும் தேர்வுக்காகப் படிப்பது அல்ல.
கற்ற கல்வி வாழ்க்கையைச் செம்மைப்படுத்த வேண்டும்;
வாழ்க்கை சமூகத்தைச் செம்மைப்படுத்த வேண்டும்;
சமூகம் அறத்தை நிலைநிறுத்த வேண்டும்.
இதுதான் தமிழர்களின் கல்விச் சிந்தனையின் அடிப்படை.
திணைக் கோட்பாட்டில் இன்னொரு மிகப்பெரிய சிறப்பு இருக்கிறது. அது மனிதனை மட்டும் மையமாகக் கொண்ட கோட்பாடு அல்ல.
மனிதனோடு மரங்களும், செடிகளும், கொடிகளும், விலங்குகளும், பறவைகளும், நீரும், மண்ணும், மலையும், கடலும் இணைந்த ஒரு முழுமையான வாழ்க்கையை அது காட்டுகிறது.
* குறிஞ்சி நிலத்துக்கு மலை, அருவி, வேங்கை, குறிஞ்சி மலர், யானை போன்றவை இயல்பான அடையாளங்களாகின்றன.
*முல்லை நிலத்தில் காடு, மாடு, மேய்ச்சல் வாழ்க்கை இடம்பெறுகிறது.
* மருத நிலத்தில் வயலும், நீரும், உழவுத் தொழிலும், எருதும் இடம்பெறுகின்றன.
*நெய்தல் நிலத்தில் கடலும், மீனும், மீன்பிடித் தொழிலும், கடற்கரை மக்களின் வாழ்க்கையும் இடம்பெறுகின்றன.
* பாலை நிலம் வறட்சியையும், கடினமான பயணத்தையும், அதனோடு தொடர்புடைய உயிரினங்களையும் வாழ்க்கைச் சூழலையும் காட்டுகிறது.
இதனால் ஒரு முக்கியமான உண்மை நமக்குத் தெரிகிறது.
தமிழர்களுக்கு இயற்கை என்பது வாழ்க்கைக்கு வெளியே இருந்த ஒன்று அல்ல; வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருந்தது.
இயற்கையை வென்று வாழ வேண்டும் என்று தமிழர்கள் நினைக்கவில்லை. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்று நினைத்தார்கள்.
இந்த இயற்கையோடு இணைந்த வாழ்வியல் தான் அவர்களின் அறிவையும் தொழிலையும் வளர்த்தது.
மலையும் காடும் அவர்களுக்கு வளங்களைத் தந்தன.
வயலும் ஆறும் வேளாண்மையை வளர்த்தன.
கடலும் காற்றும் அவர்களுக்கு கடல் பயண அறிவைத் தந்தன.
அதன் விளைவு.
தமிழர்கள் தங்கள் ஊரின் எல்லைக்குள் மட்டும் வாழவில்லை.
கடலைக் கடந்து சென்றார்கள்.
புதிய நிலங்களை அறிந்தார்கள்.
பல்வேறு நாடுகளுடன் வணிகம் செய்தார்கள்.
தமிழகத்தின் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள்.
வெளிநாடுகளின் பொருட்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தார்கள்.
அதாவது, திணை என்பது ஒரு நிலப்பரப்பை மட்டும் அடையாளப்படுத்திய கோட்பாடு அல்ல.
அந்த நிலம் கொடுத்த வளம், அந்த வளத்தைப் பயன்படுத்திய தொழில், அந்தத் தொழிலால் உருவான பொருளாதாரம், அதனால் ஏற்பட்ட வணிகம், அதனுடன் வளர்ந்த மனித உறவுகள் – இவை அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் அறிவியல் சிந்தனை!
இங்கேதான் தமிழர்களின் திணைக் கோட்பாட்டின் உயர்வு வெளிப்படுகிறது.
தமிழர் வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தனித்தனியாக இல்லை.
அறத்தோடு பொருளை ஈட்ட வேண்டும்.
பொருளோடு இன்பமாக வாழ வேண்டும்.
அந்த வாழ்க்கையும் அறத்தை விட்டு விலகக்கூடாது.
அதனால்தான் தமிழ் இலக்கியம் வாழ்க்கையை முழுமையாகப் பார்க்கிறது.
காதலும் வாழ்க்கைதான்;
கல்வியும் வாழ்க்கைதான்;
உழவும் வாழ்க்கைதான்;
வணிகமும் வாழ்க்கைதான்;
வீரமும் வாழ்க்கைதான்;
இயற்கையைப் பாதுகாப்பதும் வாழ்க்கைதான்.
இவற்றை எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைத்துப் பார்க்கும் பார்வையே திணைக் கோட்பாடு. எனவே, ‘திணை’ என்பது ஐந்து நிலங்களின் பட்டியல் அல்ல.
அது தமிழரின்,
மனிதனைப் புரிந்துகொள்ளும் அறிவு;
இயற்கையைப் புரிந்துகொள்ளும் அறிவு;
சமூகத்தைப் புரிந்துகொள்ளும் அறிவு;
வாழ்க்கையை அறத்தோடு நடத்தும் அறிவு.
இன்று உலகம் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றிப் பேசுகிறது. இயற்கையையும் மனிதனையும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தைப் பேசுகிறது. நிலையான வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறது.
ஆனால், இவற்றையெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தங்களுடைய வாழ்க்கையோடும் இலக்கியத்தோடும் இணைத்துப் பார்த்த ஒரு சமூகமாகத் தமிழர்கள் இருந்தார்கள் என்பதை நாம் பெருமையுடன் நினைவுகூர வேண்டும்.
தமிழர்களின் திணைக் கோட்பாடு எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்த கோட்பாடு அல்ல. அது பொருளுக்கும் இலக்கணம் வகுத்த உயரிய வாழ்வியல் கோட்பாடு.
அது,
அகம் – புறத்தை இணைக்கிறது;
அறம் – பொருள் – இன்பத்தை இணைக்கிறது;
மனிதன் – இயற்கை – சமூகம் ஆகியவற்றை இணைக்கிறது.
அதனால்தான் பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்:
தமிழின் திணை என்பது நிலத்தை மட்டும் வகுத்தது அல்ல;
தமிழனின் வாழ்க்கையையே வகுத்தது!
தமிழின் இலக்கணம் எழுத்தில் தொடங்கவில்லை;
வாழ்க்கையில் தொடங்கியது.
வாழ்க்கையில் முடிவடையவில்லை;
வாழ்வியல் அறமாகத் தொடர்ந்தது!
- மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்.
