மனித வாழ்வில் அறிவியலின் பங்கு அளப்பரியது!

பிப்ரவரி – 28: தேசிய அறிவியல் தினம்

மனித வாழ்வில் அறிவியலின் பங்கு அளப்பரிய ஒன்றாகும். இயற்கையை உற்று நோக்கி, பரிசோதனை மற்றும் பகுப்பாய்வின் மூலம் அறிந்து கொள்ளும் துறையே அறிவியல்.

இது அறிவை வளர்த்து அன்றாட வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தினந்தோறும் நாம் பயன்படுத்தும் மின்சாரம், தகவல் தொடர்பு சாதனங்கள், மருத்துவ வசதிகள், போக்குவரத்து என அனைத்தும் அறிவியல் நமக்களித்த கொடைகளே.

இதன் ஒரு பிரிவான இயற்பியலில், விஞ்ஞானி சர்.சி.வி.ராமனால் ‘ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்ட நாளே தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒளியானது திரவம், திடப்பொருள் அல்லது வாயு போன்ற ஒரு பொருளின் மூலக்கூறுகள் மீது படும்போது, சிதறடிக்கப்படும் ஒளியின் பகுதி ஆற்றல் மாற்றத்தைச் சந்திக்கிறது.

இதனால் விழும் ஒளியின் நிறத்தில் இருந்து, சிதறிய ஒளியின் நிறம் மாறுபடுகிறது என்ற அறிவியல் உண்மையை சர்.சி.வி.ராமன் 1928-ல் கண்டறிந்தார்.

இவரின் புரட்சிகரமான கண்டுபிடிப்பிற்காக 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அறிவியல் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

ராமன் கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பம் இன்று வேதியியல், மருந்து தயாரிப்பு, கனிமவியல் பொருள் அறிவியலின் மூலக்கூறு அமைப்பு மற்றும் தன்மையை கண்டறிய உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் இவர் ஒளியியல், இசை கருவிகளின் அதிர்வுகள் மற்றும் ஒளிச் சிதறல் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

இவரை நினைவு கூறும் வகையில் தேசிய அறிவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தேசிய கவுன்சில் உதவியுடன் கொண்டாடப்படுகிறது.

வளர்ச்சி அடைந்த பாரதத்தில் அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பு என்ற கருப்பொருளுடன் இந்த வருட நிகழ்வுகள் அரங்கேற உள்ளன.

அறிவியல் கண்காட்சிகள், வினாடி வினா நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், தொழில்நுட்பப் பட்டறைகள், பிரச்சாரங்கள், விரிவுரைகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும், தொழில்நுட்பக் கல்வியைப் பரப்பவும், பல்வேறு போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

மேலும், அறிவியல் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதற்கும், நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துரைப்பதற்கும் இந்நாள் ஒரு முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

வளர்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கு, அறிவியலை முறையாகக் கையாள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இதனை மனித நல்வாழ்விற்காகவும் இயற்கையைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தும்போது எதிர்காலம் இன்னும் சிறப்பானதாக அமையும்.

– எஸ்.வாணி

You might also like