உண்மை வெற்றி பெற்றிருக்கிறது!

விடுதலையான கெஜ்ரிவால் கண்ணீர் பேட்டி

டெல்லியில் மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 23 பேர் மீது சிபிஐ (CBI) வழக்கு தொடர்ந்திருந்தது.

தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக, ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, பல நாட்கள் சிறையில் இருந்து பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியே வந்தார்.

அவர் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக தரப்பினரால் பெரிதாக முன்னிறுத்தப்பட்டதால், தேர்தலில் கெஜ்ரிவால் வெற்றி பெற முடியவில்லை.

தற்போது, இந்த வழக்கில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்ற அடிப்படையில் கெஜ்ரிவாலும் அவருடன் ஏற்கனவே கைதானவர்களும் விடுவிக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு வெளியானதும் உயர்நீதிமன்ற வாசலிலேயே உணர்வுவயப்பட்டு அழுதிருக்கிறார் கெஜ்ரிவால்.

“பிரதமர் மோடியும் அமித்ஷாவும் சதி செய்து தன்னை இதில் சிக்க வைத்துவிட்டார்கள். தற்போது உண்மை நீதிமன்றத்தின் மூலம் வெளிவந்துவிட்டது. கடவுள் நம்மோடு இருக்கிறார்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

அவர் தொலைக்காட்சிகளுக்கு முன் கண் கலங்கியபடி அவர் பேசிய பேச்சு பல்வேறு அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியபடி இன்று பலரிடம் பகிரப்பட்டு வருகிறது.

இந்தத் தீர்ப்பு மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.

இதுபோன்று முறையான முகாந்திரம் இல்லாத ஒரு வழக்கை உருவாக்கி, அன்றைக்கு டெல்லியில் அதிகாரமிக்க ஒரு முதல்வரைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில்எப்படி கைது செய்து சிறையில் அடைக்கமுடிந்தது?

பிறகு அவர்மீது அதே குற்றச்சாட்டை வலுப்படுத்தி பிரச்சாரமும் நடத்தப்பட்டு எப்படி அவர் தேர்தலில்  தோற்கடிக்கப்பட்டார்.

தற்போது அவர்மீது செலுத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அவர்கள் விடுதலை அடைந்தாலும் கூட ஆம் ஆத்மி என்ற கட்சியும் அதன் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலும் சந்தித்த பல்வேறு இழப்புகளுக்கும், தண்டனைகளுக்கும் மன உளைச்சலுக்கும் யார் பொறுப்பேற்பது?

– அகில் அரவிந்தன்

You might also like