நமது அண்டை மாநிலமான புதுச்சேரியை, அரசியல் ரீதியாக மே.வங்கத்துடன் ஒப்பிடலாம். 15 ஆண்டுகளுக்கு முன்பு மே.வங்கத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும்தான் இருந்தனர். இப்போது அந்த இரு கட்சிகளுமே அங்கு இல்லை.
கடந்த சட்டசபைத்தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் கண்டன. இரு கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது நம்ப முடியாத உண்மை.
அங்கே இப்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரசும், பாஜகவும் தான் பிரதான கட்சிகள். இரு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி.
இப்போது புதுச்சேரிக்கு வருவோம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்குவதற்கு முன்பாக அந்த மாநிலத்தில் காங்கிரசும், திமுகவும் தான் முக்கிய கட்சிகள். அதிமுக பிறந்த பின், காங்கிரசையும், திமுகவையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, அதிமுக முதன்மை கட்சியாக உருவெடுத்தது.
தமிழ்நாட்டில் அதிமுக 1977-ம் ஆண்டுதான் ஆட்சியைப் பிடித்தது, எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார். ஆனால் புதுச்சேரியில் 1974-ம் ஆண்டிலேயே அதிமுக அரியணை ஏறியது.
இப்போது அந்த மாநில நிலவரம் என்ன?
கடந்த சட்டசபைத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம். அங்கு மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள். கடந்த தேர்தலில் திமுக 6 இடங்களில் ஜெயித்தது. ‘புதுச்சேரி எங்கள் கோட்டை‘ என கர்ஜித்து வந்த காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டும் வென்றது.
அதிமுகவுக்கு அது கூட, கிடைக்கவில்லை. பூஜ்யம். புதுச்சேரி வரலாற்றில் அதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது, இதுதான் முதன்முறையாக இருக்கும்.
காங்கிரசில் இருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கிய ரங்கசாமி 10 இடங்களில் வெற்றிக்கொடி நாட்டினார். அதன் கூட்டணி கட்சியான பாஜக 6 இடங்களில் வென்றது. இரு கட்சிகளும் சேர்ந்து அங்கு கூட்டணி ஆட்சியை நிறுவியுள்ளன.
நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் இந்த அணியில் அதிமுகவும் இணைந்துள்ளது. அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இந்த அணியில் உள்ளனர்.
வழக்கம் போல் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. அந்த மாநிலத்தில் சில பாக்கெட்டுகளை வைத்துள்ள இடதுசாரிகளும், விசிகவும், இந்தக் கூட்டணியில் உள்ளன.
தமிழகத்தில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, புதுச்சேரியில் என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை. அதுபோல் விஜயின் தவெகவும், புதுச்சேரியில் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
ரங்கசாமியின் ஊசலாட்டம்..
தேஜ கூட்டணிக்கு புதுச்சேரியில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், முதல்வர் ரங்கசாமி ஊசலாட்டத்தில் இருக்கிறார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உள்ளது. இங்கே மத்திய அரசுதான் மறைமுகமாக ஆட்சி செய்கிறது. மாநில அரசுக்கு அதிகாரங்கள் இல்லை. ஆளுநர் வைத்ததுதான் சட்டம்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாகவே அங்குள்ள மக்களால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. முந்தைய, மத்திய காங்கிரஸ் அரசும் செவி சாய்க்கவில்லை. இப்போதைய பாஜக அரசும் கண்டு கொள்ளவில்லை.
இதனால் ரங்கசாமி, புதிய அஸ்திரம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். ‘புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்காவிட்டால், என்.ஆர்.காங்கிரஸ் சட்டசபைத் தேர்தலை புறக்கணிக்கும்’ என்பதே, அவரது ஆயுதம்.
அவரது கோரிக்கை ஏற்கப்படுமா? தனது முடிவில் ரங்கசாமி உறுதியாக இருப்பாரா?பாஜகவுடன் உறவை தொடர்வாரா? முறிப்பாரா? என்பதே புதுச்சேரியில் ‘டாக் ஆஃப் தி டவுன் ‘.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர், இந்த வினாக்களுக்கு விடை கிடைக்கலாம்.
– பாப்பாங்குளம் பாரதி.