தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கின்ற கருத்தை பொதுவெளியில் இதுவரை பல கட்சிகள், பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பி வந்தாலும், விக்கிரவாண்டியில் தவெக தலைவரான விஜய், கூட்டணி ஆட்சிப் பற்றியும், அதிகாரத்தில் பங்கு என்பது பற்றியும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது பல்வேறு விதமான சலசலப்புகளுக்கு இன்று வரை வித்திட்டிருக்கிறது.
விஜய்யின் கூட்டணி ஆட்சி என்ற அறிவிப்பு ஒருபுறம் இருந்தாலும், கூட்டணி ஆட்சிப் பற்றிய பேச்சை காங்கிரஸில் உள்ள பல்வேறு எம்.பி.களும் நிர்வாகிகளும் பேச ஆரம்பித்தார்கள்.
குறிப்பாக காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்ற பலர் கூட்டணி ஆட்சிப் பற்றியும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது பற்றியும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள்.
இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான செல்வப்பெருந்தகையே தலையிட்டு, இனிமேல் இப்படிப்பட்டக் கருத்துக்களை பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால், நிலைமை இதோடு முடிந்துவிடவில்லை. காங்கிரஸ் கட்சித் தலைமை தெளிவாக “கூட்டணி ஆட்சிப் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது” என்று கட்டுப்பாடு விதித்தபிறகும், ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர்களை அழைத்து டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் கூட்டணி ஆட்சிப் பற்றிய பேச்சுக்கள் இதுவரை குறைந்துவிடவில்லை.
அண்மையில் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது” என்கின்ற கருத்தைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தி இருந்தார்.
அதை, அவர் வெளியிட்ட சிறிது நேரத்துக்குள்ளேயே அதற்கு எதிர்வினையாற்றி இருந்தார், மாணிக்கம் தாகூர்.
அதோடு தமிழக முதல்வர், “திமுக-காங்கிரஸ் கூட்டணியைப் பிரிக்க சில சதி வேலைகள் நடக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேவிதமான புகாரை தமிழக காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகையும் சில சதிகள் நடப்பதாக கூறியிருந்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர் மறுபடியும், “மக்கள் பணியில் பங்குக் கேட்பது எப்படி சதியாகும்?” என்கின்ற கேள்வியைப் பொதுவெளியில் எழுப்பியிருக்கிறார்.
திமுக அமைச்சரான ராஜகண்ணப்பன், கூட்டணியில் காங்கிரஸ் இருந்தால் இருக்கட்டும், இல்லையென்றால் போகட்டும் என்கின்ற விதத்தில் மேடையில் பேசியிருப்பதும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
தொடர்ந்து திமுகவுக்கும் காங்கிரசுக்குமான கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை இன்னும் துவங்காத நிலையிலேயே காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியை திமுகவின் பொதுச்செயலாளரான கனிமொழி எம்.பி. சந்தித்துப் பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற மதிமுக பொதுச்செயலாளரான வைகோவும், ராகுல்காந்தியைச் சந்தித்து ஒரு புத்தகத்தை பரிசளித்துப் பேசியிருக்கிறார்.
இப்படியெல்லாம் பேசப்பட்டாலும், “பிப்ரவரி 22-ம் தேதிக்கு பிறகே கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தை துவங்கும்” என்று அறிவித்திருக்கிறது திமுக தலைமை.
இந்த நிலையில் பல்வேறுவிதமான விவாதங்கள் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் இதே கூட்டணி ஆட்சிப் பற்றிய விவாதங்களைக் கேட்க முடியும்.
இத்தகைய விவாதங்களில் வெளிப்படும் மையம் இதுதான்.
தேசிய அளவில் மத்தியக் கூட்டணி அரசில், மாநிலக் கட்சிகள் பங்கு வைத்திருக்கிற நிலையில், மாநிலத்தில் அமையும் அரசில் ஏன் தேசியக் கட்சிகள் பங்குபெற முடியாது?.
இதுதான் பல விவாதங்களில் மையப் பேசுபொருளாக இருந்து வரும் நிலையில், இந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தையும் ஜனநாயக உணர்வுள்ள யாரும் புறக்கணித்துவிட முடியாது.
1967-ல் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பிலிருந்து இறக்கப்பட்ட பிறகு 2006-ம் ஆண்டு திமுக அரசில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் கூடி வருவதாகச் சொல்லப்பட்ட நிலையில், அன்றைய நிலையில் காங்கிரஸ் தலைமைக் கூட்டணி ஆட்சி என்பதை வற்புறுத்தவில்லை.
ஆனால், இன்றைய நிலையில் கூட்டணி ஆட்சி என்பதை வலுவாக வற்புறுத்தும் குரல்கள் காங்கிரசுக்குள்ளையே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைமை இதுகுறித்த தெளிவான முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
ஒருவேளை தமிழகத்திற்கு ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது, அவர் இதற்கான பதிலை செய்தியாளர்களிடம் சொல்ல நேரிடலாம்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், கூட்டணி ஆட்சிப் பற்றி முடிவுவெடுக்க வேண்டியது திமுகவோ, காங்கிரஸோ அல்ல.
உண்மையிலேயே முடிவெடுக்க வேண்டியது தமிழகத்தில் வாக்களிக்க இருக்கும் வாக்காளப் பெருமக்கள் தான்.
அவர்கள் தான் அமையப்போவது தனிப்பெரும் ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா என்பதை முடிவு செய்வார்கள்.
அப்படியொரு முடிவை அவர்கள் தெரிவிக்கிருக்கிற வரை, கூட்டணி ஆட்சிப் பற்றிய பேச்சுக்கள் ஏதோ ஒரு விதத்தில் இங்கு தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.
– லியோ