மக்களாட்சியின் உச்சத்தை இன்னும் எட்டவில்லை!

இன்று ஒரு பக்குவம் இழந்த, தத்துவார்ந்த விவாதங்களை இழந்த கொடூர குரோத வசைபாடும் அரசியல் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்போடு நாம் நம் அரசியல் கருத்துக்களை வைக்கவும் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்ளவும் வேண்டும்.

கடந்த 30 ஆண்டு காலமாக அரசியலுக்கு அடிப்படையான கொள்கை விவாதங்கள் நிராகரிக்கப்பட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்று பொருளாதாரத்தை மட்டுமே மையப்படுத்தி விவாதித்து மானுடத்தின் மதிப்பு மிக்க வாழ்க்கை விழுமியங்களை இழந்து வாழ்கின்றோம் என்ற புரிதலையும் ஏற்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும்.

இதன் விளைவுதான் எந்தப் புரிதலும் இன்றி நம் சுதந்திரப் போராட்ட காலம் உருவாக்கித் தந்த எண்ணற்ற தியாகத் தலைவர்களை நுகர்வில் மயங்கிக் கிடக்கும் நம் அரசியல் விமர்சகர்கள் கொச்சை மொழியில் வசைபாடுவது கலாச்சாரமாக நம் முன் எழுந்து நிற்கிறது.

சித்தாந்த ரீதியில் அரசியலை பார்க்கும் அரசியல் விமர்சகர்களுக்கு இந்தச் சூழலை எதிர் கொள்வது மிகவும் சவாலான செயல் என்பதையும் புரிந்து கொண்டு நாம் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்.

இந்தச் சூழலில்தான் நாம் பண்டிட் ஜவகர்லால் நேரு பற்றியும், அவர் காட்டிய மக்களாட்சிப் பாதை பற்றியும் விவாதித்து முழுப் புரிதலுடன் நாம் களத்திற்குச் சென்று பணியாற்ற வேண்டும்.

அதுவும் நுகர்வுக் கலாச்சாரத்தில் தோய்ந்துள்ள நம் இளைஞர்கள் மத்தியில் என்பது மிகப்பெரிய சவால்கள் நிறைந்த பணி.

மக்களாட்சி என்ற கருத்தாடல் பற்றி ஒரு சிறு புரிதலை நமக்குள் ஏற்படுத்திக் கொண்டு விவாதத்தைத் தொடர்ந்தால் அது நமது களப்பணிக்கும் மிகவும் பயனள்ளதாக இருக்கும்.

மக்களாட்சி என்ற கருத்தாக்கம் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை முடிவான ஒரு விளக்கத்தை முற்றாக இன்றுவரை யாரும் அளித்திடவில்லை.

மக்களாட்சி என்ற சொல்லுக்கு ஒரு சில அடிப்படைக் கூறுகளை மட்டும் கோடிட்டுக் காட்டி, அதன் கூறுகள் தொடர்ந்து வியாபிப்பதும், சுருங்குவதுமாக மானுட சமூகத்தில் இருந்து கொண்டே வருகின்றன என்பதை நம் வரலாறு நமக்கு படம் பிடித்து காண்பிக்கிறது.

இதில் பாடம் படித்துக் கொண்டவர்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்கின்றனர். மற்றவர்கள் மக்களாட்சி என்ற பெயரில் மேய்ப்புக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்கின்றனர்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் தங்களை பாதுகாத்து, நெறிப்படுத்தி, முறையான மானுட வாழ்க்கையை மறியாதையுடன் வாழ உருவாக்கிக்கொண்ட ஓர் ஆளுகைக்கான அமைப்பு முறைதான் மக்களாட்சி.

இன்று அந்த முறை வளர்ந்து மேம்பட்டு கூர்தீட்டப்பட்ட கத்தியாக மக்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

அது மட்டுமல்ல, இந்த ஆட்சிமுறை என்பது அறிவார்ந்த சமூகம் திறனுடன் இயக்கும் ஆற்றல் பெற்றிருந்தால் மட்டுமே அதன் முழுப் பயனையும் பெறமுடியும் என்ற நிலைக்கு உயர்ந்து நிற்கும்போது,

உலகமே மக்களாட்சி நோக்கி நகர ஆரம்பித்து அரை நூற்றாண்டில் உலகத்தில் 80% மக்களை இந்த அமைப்புக்கள் கொண்டு வந்துவிட்டது என்பதுதான் இந்த நூற்றாண்டில் நாம் பார்த்து வியந்த சமூக நிகழ்வு இந்த உலகில்.

அதே நேரத்தில் நாம் இன்னொன்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும். உலகில் எந்த நாடும் இன்னும் மக்களாட்சியின் உச்சத்தை எட்டவில்லை என்பதை நினைவில் வைத்து நாம் செயல்பட வேண்டும்.

மக்களாட்சி என்பது, சுதந்திரத்தில் ஆரம்பித்து, சமத்துவம் சகோதரத்துவம் நோக்கி நகர்ந்து, நீதி நியதி, நேர்மை, நியாயம், மற்றவர் கருத்தை மதித்தல், எதிர்கருத்தை மதித்து வாங்குதல், போன்ற அடிப்படைக் கூறுகளைக் கொண்டு இந்த ஆட்சி முறை நடைபெற வேண்டும்.

இந்த அடிப்படைக் கூறுகளைக் கொண்டு இயங்குவதற்கு மிக முக்கியத் தேவை உண்மையின் அடிப்படையிலான விவாதம்.

இந்த உண்மை என்பதும் விவாதம் என்பதும் மானுடத்தின் புரிதலுக்கு ஏற்ப மேம்பட்டுக்கொண்டே வரும் என்ற புரிதலுடனும் நம்பிக்கையுடனும் சமூகம் செயல்பட்டுக் கொண்டே வரவேண்டும். மக்களாட்சிக்கு முதல் விதை போட்ட கிரேக்கத்து நகர சபையில் விவாதம் பிரதானப்படுத்தப்பட்டது.

விவாதத்தின் அடிப்பiடில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முடிவு மக்களாட்சியின் மாண்பான எதிர்க்கருத்தை மதித்து வாங்க இயலாமல் எடுத்து சாக்ரடீஸ் என்ற அரசின் விமர்சகரை மட்டும் கொலை செய்யவில்லை, மக்களாட்சியின் அடிப்படைக் கூறு ஒன்றையும் கொலை செய்து விட்டனர்.

அதே நேரத்தில் அந்த மன்றம்தான் விவாத ஜனநாயகத்தை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியது. இன்றுகூட நம் நாட்டில் கிராமசபை என்ற விவாதக் களம் உருவாக்கப்பட்டு மக்களாட்சியை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும் முனைந்துள்ளது நம் மத்திய மாநில அரசுகள்.

இதன் பின்புலத்தையும், உள் அர்த்தத்தையும் புரிந்து கொண்டு செயல்படுகிறோமா என்று பார்த்தால் நமக்கு மிஞ்சுவது விரக்தி மட்டும்தான்.

இதேபோன்று தான் இன்றுவரை மக்களாட்சியில் உள்ள எல்லாக் கூறுகளையும் எந்த நாடும் பேணிப் பாதுகாத்தது கிடையாது. எனவே எல்லா நாட்டிலும் மக்களாட்சிக்காக போராடிக் கொண்டேதான் இருக்கின்றார்கள் பொது மக்கள்.

உலகில் மக்களாட்சி எப்படியெல்லாம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை ஆய்வு செய்து தொடர்ந்து நாடுகளை தரம் பிரித்து பட்டியலிட்டு, மக்களாட்சியை வலுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பட்டியலிட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் உதவி வருகின்றன.

நம் நாட்டில் இயக்கும் மக்களாட்சி முறையை ஒரு நிலையில் பாராட்டினாலும், அடுத்த நிலையில் இந்த மக்களாட்சி என்பது 73 ஆண்டைக் கடந்தபோதும் குறைந்தபட்ச மக்களாட்சியாகவே தான் இயங்கி வருகின்றது என்பதை ஆய்வு நிறுவனங்கள் பிரகடனப்படுத்தும்போது நமக்கு எங்கோ வலிக்கின்றது.

வலிக்கும்போது நமக்கு ஆறுதலாக பலர் நம்மை பாராட்டுவதுண்டு. அது என்னவென்றால் உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்டு மக்களாட்சியில் இயங்கும் நாடு இந்தியா.

அது மட்டுமல்ல மக்களாட்சி இயங்குவதற்கு எந்தச் சாத்தியக் கூறும் இந்திய சமூகத்தில் இல்லாத நிலையில் மக்களாட்சி முறை தொடர்ந்து (இரண்டு ஆண்டுகள் தவிர்த்து 1975 – 1977) இயங்குவது ஓர் ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வு என்று பாராட்டுவது உண்டு.

இந்திய மக்களாட்சி முறையில், தேர்தல் என்ற ஒற்றை கூறு நோக்கியே அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி செயல்பட்டு மற்ற கூறுகளை கிஞ்சித்தும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்களின் சிந்தனைப் போக்கையும், நடத்தையையும், செயல்பாடுகளையும் மாற்ற இயலாத அரசியலை நடத்தும் அரசியல் கட்சிகள் என்பது நம் நாட்டின் மக்களாட்சியில் நிகழ்ந்த ஒரு சோக வரலாறு.

இந்த இடத்தில்தான் ஒற்றைப்புள்ளி ஒரு விரல் புரட்சியை செய்ததுதான் நேரு மகான் இந்திய மக்களுக்கு அளித்த பெரும் கொடை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல 21 வயது நிரம்பிய அனைவருக்கும் (தற்போது 18 வயதாக ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது குறைக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது) வாக்குரிமை தந்தது உலகத்தில் பலருக்கு ஒரு அதிசய நிகழ்வு.

இந்தியா என்ற நாடே உணர்வு நிலையில் உருவாக சூழலில் இந்திய சமூகம் மக்களாட்சிக்கான எந்த அடிப்படைக் கூறுகளையும் கொண்டிராத சூழலில் மக்களாட்சிக்கான வித்தை இந்த அரசியலில் விதைத்து ஒரு அசாத்திய தைரியமான செயல் என்பதைத்தான் உலகம் வியந்து பார்த்தது.

அந்த ஒரு விரல் புரட்சி என்பது நேரு என்ற ஒற்றை மனிதரின் தலையில் தொங்குவதாகவே உலகச் சிந்தனையாளர்கள் நம்பினார்கள்.

அன்று பலருக்கு இந்தியா ஆபத்தான பாதையில் பயணிப்பதாக கருதி இந்திய மக்களாட்சி வரலாறு நேருவுடன் மறைந்து விடும் என ஆருடம் கூறினார்கள்.

ஆனால் நேரு அந்த உரிமையை மக்களுக்குத் தந்தது மட்டுமல்ல அதன் மகத்துவத்தையும் புரிய வைத்த காரணத்தால்தான் இன்று வரை தேர்தல் ஜனநாயகம் மக்களின் ஏகோபித்த நம்பிக்கையை பெற்று குறிப்பாக ஏழைகளின் நம்பிக்கையைப் பெற்று விளங்குகின்றது.

எந்தத் தளத்திலும் சமத்துவம் இன்றி இயங்கும் இந்திய சமூகம் அரசியல் தளத்தில் சமத்துவத்தை அனுபவிப்பதால்தான் இந்திய வாக்காளன் அரசியல்வாதிகளை தன் விரல் நுனியில் கட்டி தொங்கி விட்டிருக்கிறான்.

எந்தத் தலைவரையும், எந்தக் கட்சியையும் தூக்கி எரியும் வல்லமை தனக்கு உண்டு என்பதை தொடர்ந்து நிரூபித்து மக்களாட்சிக்கு பிராண வாயு செலுத்திக் கொண்டிருக்கிறான் இந்திய வாக்காளன்.

ந்தப் புரட்சிக்கு வித்திட்டது நேருதான் என்பதை எவரும் மறுக்க இயலாது. மக்களாட்சியின் குறைந்தபட்ச சமத்துவத்தை வழங்கி அதன் மூலம் சாதாரண மனிதனும் தனக்கு எப்படிப்பட்ட ஆட்சி தேவை என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தன்னிடம் இருப்பதாக உணர்ந்த காரணத்தால்தான் இன்று இந்த மக்களாட்சி முறை நீடித்த தன்மையை பெற்று விட்டது.

சமகாலத்தில் சுதந்திரம் அடைந்த பல நாடுகள் மக்களாட்சியை நிறுவிட எவ்வளவோ முயன்றும் வெற்றி பெற முடியவில்லை.

இந்தியா நிலைத்து விட்டது தேர்தல் ஜனநாயகத்தில் என்பதை எவரும் மறுக்க இயலாது. இந்த தேர்தல் ஜனநாயகத்தில் சாதாரண மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கை அபாரமானது. அதுதான் நம் மக்களாட்சியின் அச்சாணி.

ஆனால் இந்த மக்களாட்சியில் நடைபெறும் அரசியல் என்பது இன்று பிற்போக்குத் தனத்தின் மூலமாக உள்ளது.

மக்களின் அறிவார்ந்த ஜனநாயகச் செயல்பாடுகளுக்கு எதிரான சாதியமும், மதமும் மீண்டும் மீண்டும் உணர்வூட்ட கையாள்வது என்பது நம் அரசியல் கட்சிகளின் அடிப்படைகளுக்கு முரண்பாடான செயல்பாடுகள்.

இந்தச் செயல்பாடுகள்தான் நம் ஜனநாயகத்தை ஊனப்படுத்துகின்றன என்பது யாவரும் அறிந்த உண்மை.

மக்களாட்சியின் மாண்பினைக் குலைக்கும் செயல்களைச் செய்வது நம் அரசியல் கட்சிகள் என்பதை நம் மக்களாட்சியை ஆய்வு செய்யும் அனைவரும் கூறும் அடிப்படையான கருத்து.

இந்த மக்களாட்சியை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும், அகலப்படுத்தவும் நேருவால் உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்குப் பதில், அவைகளை நீத்துப்போகச் செய்த மாநில அரசுகளின் செயல்பாடுகள் மக்களாட்சியை நிறுவனத்திற்குள் உள்ளடக்கியதே தவிர மக்களை மக்களாட்சிக் கலாச்சாரத்திற்குள் கொண்டு செலுத்த முடியவில்லை.

இந்தச் சூழல் இந்தியாவில் நேரு காலம் தொட்டு இன்றுவரை நிகழும் ஓர் அரசியல் செயல்பாடாகும்.

மக்களாட்சி என்பது வாக்களிப்பதோடு நின்று விடுவது அல்ல. பொது மக்களின் நடத்தையில் மக்களாட்சிக் கூறுகளை வெளிப்பட வைக்க வேண்டும். பொதுமக்களின் நடத்தை மாற்றத்திற்கு செயல்பட வேண்டியது அரசியல் கட்சிகள்.

ஆதிக்கமற்ற செயல்பாட்டை மக்களிடம் கொண்டு வருவது நம் அரசியல் கட்சிகளின் அடிப்படை பணியாகும்.

ஆனால் ஆதிக்க மனோபாவத்தை வளப்பதே நம் அரசியல் கட்சிகள் என்பதையும் யாரும் மறுக்க இயலாது. நம் அரசியல் கட்சிகளே இன்றும் தங்களை ஜனநாயகப்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் அடுத்த பின்னடைவு நம் மக்களாட்சி வரலாற்றில்.

மக்களாட்சியை மாண்புரச் செய்யும் மக்களாட்சி அமைப்புக்களான பாராளுமன்றம், சட்டமன்றங்கள், ஊராட்சி மன்றங்கள், கிராம சபைகள், நகர சபைகள் அனைத்தும் சடங்காக மாற்றப்பட்டு வெற்றுப் பேச்சு மன்றமாகவும், ஏச்சு மன்றமாகவும் நடத்தப்படுவது மக்களாட்சியில் ஒரு கேலிக் கூத்து.

இதற்கு மக்களின் வரிப்பணத்தில் பெருவாரியாக செலவழிக்கப்படுவதை என்னென்று விளக்குவது.

இன்றைய சந்தைக் காலத்தில் அரசின் மூலம் சந்தையை நெறிப்படுத்தி சமூக மேம்பாட்டிற்குச் செயல்பட வேண்டிய மக்களால் உருவாக்கப்பட்ட அரசு, சந்தைக்காக செயல்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கின்றது.

அது மட்டுமல்ல சந்தையின் ஆதிக்கத்தில் அரசு செயல்படும் அளவுக்கு சந்தை தன்னை வளர்த்துக் கொண்டுவிட்டது. அதன் விளைவாக சந்தைப் பணத்தில் சமூகத்தை வாங்க முனைகின்றன அரசியல் கட்சிகள்.

அரசியல் கட்சிகள் சந்தையின் பிடியில் ஆட்கொண்டிருப்பதால் தேர்தல் அரசியல் என்பது பெரும் பண செலவுடன் நிகழ்த்தப்படும் நிகழ்வாக மாற்றப்பட்டு விட்டது.

தேர்தலைத் தாண்டி, கட்சி அரசியலைத் தாண்டி மக்களாட்சியில் அரசியல் இருப்பதாக யாருக்கும் தெறியவில்லை. அந்த அரசியல் மக்களை முன்னிருத்தி எப்படி நடத்துவது என்பதும் யாருக்கும் தெறியவில்லை.

தேர்தலுக்குச் செல்லாமல் மக்கள் அரசியல் நடத்தி நம் மக்களாட்சியை வலுப்படுத்த முடியும். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் ஆட்சியில் தேர்தலைச் சந்திக்காமலே, அரசை சிறப்பாக வேலை வாங்கி மக்களுக்குத் தொண்டாற்றி ஒரு புது அரசியலை முன்னெடுக்க முடியும்.

அதற்குத் தேவையான பார்வையை அரசியல் கட்சிகள் உருவாக்கவில்லை. இன்று கேரளத்தில் சந்தை அரசியலுக்குள் கால் பதித்து விட்டது. முதலில் ஒரு கம்பெனி மின்னம்பலம் என்ற உள்ளாட்சியைப் பிடித்தது இன்று சட்டமன்றத்திற்கும் போட்டியிட வந்துவிட்டது சந்தை.

மக்கள் அரசியல் கட்சிகளைவிட கம்பெனிகளை நம்ப ஆரம்பிக்கின்றனர். அதுவும் கேரளத்தில் நிகழ ஆரம்பித்துள்ளது. எனவே நம் மக்களாட்சியில் நமக்குத் தேவை புது விவாதம், புதிய அரசியலை நோக்கி மக்களை இட்டுச் செல்ல.

கட்டுரை ஆசிரியர்: டாக்டர் க.பழனித்துரை
(தொடர்புக்கு: gpalanithurai@gmail.com)
காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர்.
சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.
126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர்.
ஊடகங்களில் சுமார் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர், எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.
ஜெர்மெனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர்.
பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.

You might also like