ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி ஏமாற்றிய திரைப்படங்கள் ஓராயிரம். அதனாலேயே, இப்போதெல்லாம் ‘எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தியேட்டருக்கு வந்தா இந்த படம் ஆச்சர்யப்படுத்தும்’ என்று சொல்கிற ‘ட்ரெண்ட்’ தொடங்கியிருக்கிறது. சில வேளைகளில் அது பலன் தந்திருப்பதைக் கடந்த காலத் திரை வரலாறு சொல்கிறது.
‘மகாராஜா’ எனும் பெரு வெற்றியைத் தந்த விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிற நேரத்தில் இதனைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
’ஏஸ்’ கதை!
மலேசியாவுக்கு வந்திறங்குகிறார் ஒரு நபர் (விஜய் சேதுபதி). துபாய் சிறையில் இருக்கும் ஒரு தமிழருக்கு போன் பேசுகிறார். அவரிடம், ‘எனது அடையாளத்தைத் துறந்துவிட்டு இங்கு ஒரு புது வாழ்க்கை வாழப் போகிறேன்’ என்கிறார். எதிர்முனையில் பேசுபவரோ, ‘எவருக்காவது உதவப் போகிறேன் என்று சென்று சிக்கலில் மாட்டி, மீண்டும் குற்றவாளி ஆகிவிடாதே’ என்று அவரை எச்சரிக்கிறார்.
இந்த ஒரு விஷயமே, கதையின் நாயகனான அந்த நபர் எப்படிப்பட்டவர் என்பதை விளக்கிவிடும்.
மலேசியாவில் நுழையும் அந்த நபரைக் காண்கிறார் அறிவுக்கரசன் (யோகிபாபு). ‘நீதானே போல்ட் கண்ணன்’ என்று கேட்கிறார். முதலில் அவர் கேட்டது புரியாமல் தடுமாறும் அந்த நபர், சில நொடிகளிலேயே ‘ஆமாங்க நான் தான் போல்ட் கண்ணன்’ என்கிறார். அடுத்த நொடியில் இருந்து போல்ட் கண்ணனாக வாழத் தொடங்குகிறார்.
தனது ‘கிரஷ்’ஷான கல்பனாவின் (திவ்யா பிள்ளை) ஹோட்டலில் போல்ட் கண்ணனை ‘செஃப்’ வேலையில் சேர்த்துவிடுகிறார் அறிவு. அப்போது, தாயின் மருத்துவச் செலவுக்காக வங்கியில் வாங்கிய கடனுக்காக அந்த ஹோட்டலை ‘ஜப்தி’ செய்யும் நிலையில் கல்பனா இருப்பதை அறிகிறார்.
ஒருநாள் பேருந்தில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார் போல்ட் கண்ணன். அந்த பேருந்தில் ஒரு நபர் பர்ஸ் காணாமல் போனதாகச் சொல்கிறார். உடனே அவரை அழைத்து, ‘அந்த நபரை சோதனை செய்யுங்கள்’ என்று கைகாட்டுகிறார். ‘தன்னைத்தான் திருடன் என்று சொன்னார்’ என அறிந்ததும் போல்ட் கண்ணன் டென்ஷன் ஆகிறார்.
அவரை வழிமறிக்கிறார். என்னைப் பற்றி இப்படிச் சொல்லக் காரணம் என்ன என்கிறார். ‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு ஆள்கிட்ட பர்ஸ் திருடினேல்ல’ என்கிறார் அந்தப் பெண். அதனைக் கேட்டதும் சிரிக்கிறார் போல்ட் கண்ணன்.
அந்த பெண்ணின் பெயர் ருக்மணி (ருக்மினி வசந்த்). தான் வசிக்கிற இடத்தின் அருகே அவரது வீடும் இருப்பதை அறிகிறார். அவர் ராஜதுரை (பப்லு பிருத்விராஜ்) எனும் போலீஸ் அதிகாரியின் மகள் என கல்பனா மூலமாக அறிகிறார்.
மோதலில் தொடங்கினாலும், ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்குப் பின்னர் இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. மெல்ல அந்த பழக்கம் இறுகுகிறது.
ஒருநாள் ’ராஜதுரை தனது தாயின் இரண்டாவது கணவர்’ என்றும், தாயின் மறைவுக்குப் பிறகு வீட்டு உரிமையில் தனக்கும் பங்கு உண்டு என்று ‘டார்ச்சர்’ செய்வதாகவும் கூறுகிறார் ருக்மணி. பத்து லட்சம் வெள்ளி கொடுத்தால் வீட்டை அவரது பெயருக்கு மாற்றித் தருகிறேன் எனக் கூறியதாகத் தெரிவிக்கிறார்.
இதற்கு நடுவே, ‘கடன் வாங்குகிறேன்’ என்று அந்த வட்டாரத்திலுள்ள ரவுடி தர்மாவை (அவினாஷ்) சந்திக்க அறிவுடன் செல்கிறார் போல்ட் கண்ணன். சென்ற இடத்தில் ‘போக்கர்’ விளையாட்டில் ஈடுபடுகிறார். அந்த இடத்தின் உரிமையாளரான தர்மா உடன் மோதுகிறார்.
விளையாட்டில் தர்மா மோசடி செய்து வெற்றி பெறுகிறார். ‘ஒரு வாரத்திற்குள் பத்து லட்சம் வெள்ளி திருப்பித் தராவிட்டால் உயிரை எடுத்துவிடுவேன்’ என்று அவர் துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார். அங்கிருந்து வெளியேற வேண்டுமானால், கடன் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்கிறார். இருவரும் அதனைச் செய்கின்றனர்.
கல்பனா, ருக்மணியின் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்று யோசித்த நேரத்தில், தானாகச் சென்று இப்படியொரு இக்கட்டில் மாட்டிக் கொண்டோமே என யோசிக்கிறார் போல்ட் கண்ணன். முடிவில், அங்கிருக்கும் வங்கிக்குப் பணம் எடுத்துவரும் வேனை மடக்கி, அதிலிருக்கும் பணத்தைக் கொள்ளையடிப்பது என முடிவு செய்கிறார்.
பட்டப்பகலில் கொள்ளையடித்துவிட்டு, எவர் கண்ணிலும் மாட்டாமல் தப்பித்துவிட முடியுமா? இந்த கேள்வி அறிவுக்கரசனை வாட்டுகிறது. ஆனால், போல்ட் கண்ணன் தைரியமாக கொள்ளையடிக்கச் செல்கிறார்.
அவர் வங்கிப்பணத்தைக் கொள்ளையடித்தாரா, இல்லையா? அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘ஏஸ்’ இரண்டாம் பாதி.
முழுக்கக் காதில் பூ சுற்றுகிற கதை. ஆனால், இயக்குனர் ஆறுமுக குமார் இதற்குத் திரைக்கதை அமைத்திருக்கும் விதம் ஒரு ‘பூ மார்க்கெட்’டையே நம் காதில் சொருகி வைக்கிறது. அவ்வளவு லாஜிக் மீறல்கள்.
அனைத்தையும் தாண்டி ரசிக்க வைக்கிறதா ‘ஏஸ்’? இந்த கேள்விக்கு ‘ஆமாங்க’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்குக் காட்சிகள், அடுப்பில் வைக்கப்பட்ட வாணலியில் இடப்பட்ட வெண்ணெய் போலச் சட்டென்று நழுவிச் செல்கின்றன.
யோகிபாபு – விஜய் சேதுபதி கூட்டணி!
ரொம்பவே ‘கனமான’ பாத்திரங்களில் விஜய் சேதுபதியை வில்லனாகவும் நாயகனாகவும் பார்த்த ரசிகர்களுக்கு மீண்டுமொரு முறை அவரை ‘கலகல’ நாயகனாக பார்க்கிற வாய்ப்பு. அதனை ‘அசால்டாக’ எதிர்கொண்டிருக்கிறார் மனிதர்.
’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட ‘சூது கவ்வும்’, ‘கருப்பன்’, ‘சேதுபதி’ மாதிரியான ‘ஜாலி நாயகனாக’ இதில் தோன்றியிருக்கிறார்.
விஜய் சேதுபதியின் இருப்பு என்னதான் ‘டைபிக்கலாக’ இருந்தாலும், அது போரடித்துவிடாதவாறு நம்மைக் காப்பாற்றுவது யோகிபாபு. நீண்ட நாட்களுக்குப் பிறகு விழுந்து விழுந்து சிரிக்கும்படியாக இருக்கின்றன அவர் உதிர்க்கிற ‘ஒன்லைனர்கள்’.
அதனை எழுதிய குழுவினருக்கு ‘பொக்கே’ கொடுக்க வேண்டும்.
படத்தைக் காப்பாற்றுவது யோகிபாபு – விஜய் சேதுபதி கூட்டணிதான் என்று சொல்லும் அளவுக்குப் படம் முழுக்க இருவரும் நிறைந்திருக்கின்றனர்.
’சப்த சாகரதாச்சே எல்லோ’ எனும் ‘ஏழு கடல் தாண்டி சைடு ஏ’ மற்றும் ‘சைடு பி’ வழியே நம் கவனம் ஈர்த்த ருக்மினி வசந்த் இப்படத்தின் நாயகி.
நல்ல உயரம், அதற்கேற்ற உடல்வாகு, பக்குவம் வெளிப்படுகிற முகம் என்றிருந்தாலும், காட்சிகளில் ஏ ப்ளஸ் சைஸில் இருக்கிற ஒரு குழந்தையாகவே தெரிகிறார் ருக்கு. இந்த படம் அவருக்கு நல்லதொரு அறிமுகம்.
இது போக ’தி வில்லேஜ்’ சீரிஸில் ஆர்யாவின் ஜோடியாக நடித்த திவ்யா பிள்ளை, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார மற்றும் மலேசிய கலைஞர்களான முத்துகுமார், டெனிஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ஜாஸ்பர் சுபயாஹ் உட்படப் பலர் இதிலுண்டு.
இதில் வில்லன்களாக பப்லு பிருத்விராஜ், கேஜிஎஃப் அவினாஷ் இதில் நடித்திருக்கின்றனர்.
படத்தை எழுதி இயக்கித் தயாரித்திருக்கிறார் ஆறுமுககுமார். எத்தனை லாஜிக்மீறல்கள் இருந்தாலும், ஒவ்வொரு காட்சியும் பிடித்துப் போகிற வகையில் வடிவமைத்து ரசிகர்களை இருக்கையில் இருந்து எழுந்துவிடாமல் செய்வேன் என்று தன்னம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறார். பெருமளவில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கதை என்று பெரிதாக இல்லாத ஒரு திரைப்படத்தில் விஷுவல்கள் ரசிகர்களை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். ’அதற்கேற்றதை நான் செய்வேன்’ என்று களமிறங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கரண் பி ராவத். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஏ.கே.முத்து இதில் கலை இயக்குனராகப் பணியாற்றியிருக்கிறார்.
விஎஃப்எக்ஸ், எஸ்எஃப்எக்ஸ், ஸ்டண்ட், காஸ்ட்யூம் டிசைன் என்று பல நுட்பங்கள் இதில் நம் கவனத்தைக் கவர்கிற வகையில் இருக்கின்றன.
இந்த ஆண்டின் ஹிட் என்று சொல்கிற அளவுக்கு உள்ளது இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்காகத் தந்துள்ள ‘உருகுது உருகுது’ பாடல்.
இது போக ‘மனி ஸ்பீக்ஸ்’, ’ஏஸ் ஆந்தம்’ ஆகியவற்றை தந்திருக்கிறார். அவர் தந்த இன்னொரு பாடலான ‘மாமா தாமா’ படத்தில் இடம்பெறவில்லை.
ஹே விசிறியே, போக்க ராப் பாடல்களைத் தந்திருக்கிறார் இன்னொரு இசையமைப்பாளரான சாம் சிஎஸ். இப்படத்திற்கு இவரே பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
கொஞ்சம் பிசகினாலும் ‘மொக்கை’ என்று சொல்லிவிடச் சாத்தியமுள்ள திரைக்கதையைக் கொண்டது ‘ஏஸ்’. அவ்வாறு சொல்லிவிடாமல் காப்பாற்றியிருப்பது இரண்டு விஷயங்கள் தான்.
அதில் முதலாவது சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசை. அது மட்டும் இல்லாவிட்டால், இப்படம் ‘மொக்க’ ரகத்தில் சேர்ந்திருக்கும். அது நிகழாமல் காப்பாற்றியிருக்கிறது அவரது பங்களிப்பு.
இரண்டாவதாக அமைந்திருப்பது இதன் படத்தொகுப்பு. அதனைக் கையாண்டிருப்பவர் பென்னி ஆலிவர்.
’இதுக்கு மேல என்ன இருக்குது’ என்று கேட்கிற இடைவேளை ‘ப்ளாக்’கில் இரண்டாம் பாதியின் சுவாரஸ்யங்களை அடுக்கி வைத்ததாகட்டும். விஜய் சேதுபதி போக்கர் விளையாடுகிற காட்சி, கிளைமேக்ஸ் துரத்தல் காட்சிகள் ஆகியவற்றில் பளிச்சிடுகிறது அவரது பணி.
ஸ்பாய்லர் என்றாலும் இதனைச் சொல்லத்தான் வேண்டும். இப்படத்தில் வருகிற வங்கிக் கொள்ளையைப் பார்க்கிற குழந்தை கூட, ‘ச்சீ.. இப்படியா ஒரு கொள்ளை நடக்கும்’ என்று கேட்கவே வாய்ப்பு அதிகம். ஆனால், அந்த கேள்வியை எழுப்பவிடாமல் தடுப்பது அக்காட்சி தொகுக்கப்பட்டிருக்கும் விதம் தான்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ‘ஆவரேஜுக்கு கொஞ்சம் மேல’ என்கிற சொல்லத்தக்க ஒரு படம் தான் ‘ஏஸ்’. ஆனால், ‘படத்துல ஒண்ணுமேயில்லைங்க; ஆனா நல்லாயிருக்குங்க’ என்று ரசிகர்களைச் சொல்ல வைத்திருக்கிறது ‘ஏஸ்’ தரும் திரையனுபவம்.
மிக முக்கியமான விஷயம், ‘விஜய் சேதுபதி படம்னா சூப்பரா இருக்கும்’ என்ற எதிர்பார்ப்புகள் இல்லாமல் தியேட்டருக்குள் நுழைந்தால் நிச்சயம் ‘ஸ்வீட் சர்ப்ரைஸ்’ அளிக்கும் இப்படம். மாறாக, ‘இதுல ஒரு லாஜிக்கும் இல்லைங்க’ என்று குறை சொல்பவர்களுக்கு ஏற்ற படமல்ல இந்த ‘ஏஸ்’!
- உதயசங்கரன் பாடகலிங்கம்