ஹீமோகுளோபினை அதிகரிக்கும் குடைமிளகாய்!

பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவு இட்லி, தோசை தான். இதற்கு (சைடிஸ்) தொட்டுக் கொள்ள வைப்பதில் தான் சிக்கலே இருக்கிறது.

பொதுவாக வீட்டில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நாம் சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி என்றுதான் வைப்போம். எப்போதாவது பீர்க்கங்காய் சட்னி வைப்பதுண்டு.

தினமும் இதே சட்னியா என வண்டு சிண்டெல்லாம் கேள்வி வேற கேட்கும். எல்லாத்தையும் சமாளிச்சு புதுசா ஒரு சட்னியை ட்ரை பண்ணிக் கொடுத்தா, அதுலயும் ஒரு குறையைக் கண்டுபிடிச்சு திட்ட வேற செய்றது.

இதுக்கு எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நமது வீட்டில் இருக்கும் குடைமிளகாய் வைத்து சூப்பரான ஒரு சட்னியை செய்யலாம். இப்படி செஞ்சுக் கொடுத்தா சபாஷ் போடுவாங்க.

பொதுவாக குடைமிளகாயில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து என பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

இந்த சத்துக்கள் எல்லாம் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று.

குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் இருக்கும் இரும்புச் சத்தானது இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல துணைபுரிகிறது.

சைனீஸ் வகை உணவுகளில் இந்த குடைமிளகாய் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் குடைமிளகாய் இங்கு கிடைக்கிறது.

பெரும்பாலும் இவை பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மஞ்சூரியன், சில்லி பிரைடு, பன்னீர் கிரேவி ஆகிய சமையலில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

ஓட்டல்களில் உணவை அழகுபடுத்தவும், பல வகை சாலட்டுகளில் குடைமிளகாய் பயன்படுத்தப்படுவதால் அதன் ஆதிக்கம் கிராமங்களை விடவும் நகர்புறங்களில் அதிகம்.

ஏனென்றால் தென்மாவட்டங்களில் இன்னமும் குடைமிளகாய் பெரும்பாலான மக்களுக்கு எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

இதில் இருக்கும் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாகும்.

கீமோதெரபி, ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

அவ்வாறு சிகிச்சை எடுக்கும்போது குடைமிளகாயை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும்.

ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட இந்த குடைமிளகாயை வைத்து சூப்பரான சுவையான சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் – 2,

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 3

காய்ந்த மிளகாய் – 3

பூண்டு – 3 பற்கள்,

தக்காளி – 1

உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்

புளி – சிறிது

பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை,

கறிவேப்பிலை – 2 கொத்து,

கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு

தேங்காய் துருவல் – ¼ கப்,

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – கால் டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதன் பிறகு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் புளி, பெருங்காயத்தூள், ஒரு கொத்து கறிவேப்பிலை, கொஞ்சம் கொத்தமல்லி ஆகியவை சேர்த்து வதக்கவும்.

கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற விட்டு இறக்கவும்.

குடைமிளகாயில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டினால் சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி.

– யாழினி சோமு

You might also like