ஷின் சான்: அவர் டைனோசர் டயரி – தியேட்டர் ‘அலப்பறை’!

’ஷின் சான் தமிழ் டப்பிங் அலப்பறைகள்’ என்று தனியாகக் குறிப்பிடுகிற அளவுக்கு, அந்த ‘அனிமேஷன்’ பாத்திரம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நீ ஷின் சான் மாதிரி பேசறதை நிறுத்துறியா’ என்று குழந்தைகளை அத்தொடரில் வருவது போலவே பெற்றோர் கண்டிக்கிற அளவுக்கு அந்த பாதிப்பு இருந்து வருகிறது. ஆனால், அதையும் மீறி பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினரையும் ஈர்க்கிற வகையில் ‘ஷின் சான்’ அனிமேஷன் வீடியோக்கள் இருக்கும். அந்த ஈர்ப்பினைப் பயன்படுத்தி மாபெரும் அறுவடையை அடைய முயற்சித்திருக்கிறது ‘ஷின்சான்: அவர் டைனோசர் டயரி’ (Shin Chan: Our Dinosaur Diary) திரைப்படம். இதனை ஷினோபு சசாகி இயக்கியிருக்கிறார்.

ஜப்பானிய மொழியில் இதுவரை 31 திரைப்படங்கள் ‘ஷின் சான்’ பாத்திரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால், 32வதாக அமைந்த இது மட்டுமே இந்தியாவில் தமிழ் தெலுங்கு, இந்தியில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

நாம் தொலைக்காட்சிகளில் கேட்டு ரசித்த பெரும்பாலான குரல்களைத் தமிழ் ‘டப்பிங்’ பதிப்பில் எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த குரல்கள் நம்மை எவ்வளவு சிரிக்க வைக்கின்றன என்பதைப் பொறுத்து அமைகிறது இந்த ‘டப்பிங்’ பதிப்பின் வெற்றி?

மீண்டும் ‘டினோசர்’!

ஷின் சான் தனது தாய் மிஷே, தந்தை ஹிரோஷி, கைக்குழந்தையான தங்கை ஹிமாவாரி மற்றும் நாய் ஷிரோ உடன் வாழ்ந்து வருகிறார். வழக்கம்போல நொடிக்கொரு குறும்பு என்று இருந்து வருகிறார்.

இந்த நிலையில், டைனோசர்கள் இருக்கிற தீம் பார்க் ஒன்றை திறப்பதாக அறிவிக்கிறார் மேஜிக் நிபுணரான வாபில் ஓடரோகே. அங்கு தனது பணக்காரத் தோழி மற்றும் இதர நண்பர்கள் உடன் ‘விசிட்’ அடிக்கிறார் ஷின் சான்.

அதேநேரத்தில், அந்த டைனோசர் தீம் பார்க்கில் இருந்து ஒரு நபர் குட்டி டினோசர் ஒன்றை எடுத்துச் செல்கிறார். அப்போது பாதுகாவலர்கள் அவரைத் துரத்துகின்றனர். அந்த களேபரத்தில் அதனை அவர் தவறவிடுகிறார்.

அந்த நபர் தவறவிட்ட டைனோசரை காண்கிறது ஷிரோ. அதற்கு உணவு தந்து உதவுகிறது. அதனை ஷின் சானும் அவரது நண்பர்களும் பார்க்கின்றனர்.

அடுத்த நொடியே, அந்த டைனோசர் ஷின் சான் வீட்டிற்கு வந்துவிடுகிறது. ஷிரோ போல அதனையும் வளர்க்கத் தயாராகின்றனர் ஷின் சான் பெற்றோர்.

ஆனால், அந்த குட்டி டைனோசரைக் கடத்தச் சில முயற்சிகள் நடக்கின்றன. டைனோசர் காலத்தில் இருந்த, அதே போன்ற பல பிரமாண்ட விலங்குகள் அங்கு வருகின்றன.

அவற்றின் ‘அட்ராசிட்டி’யை மீறி அந்த டைனோசர் குட்டியைக் காக்க ஷின் சான் குடும்பத்தினரும் நண்பர்களும் முயற்சிக்கின்றனர்.

ஆனாலும், அந்த ‘அட்ராசிட்டி’ நின்றபாடில்லை. அதன் பின்னே இருப்பவர் வாபில் ஓடரோகே. அதேநேரத்தில், அவரது மகனும் மகளும் அந்த குட்டி டைனோசரைக் காக்க விரும்புகின்றனர்.

அந்த குட்டி டைனோசரை கடத்த ஓடரோகே முயற்சிப்பது ஏன்? அங்கு என்ன தான் நடக்கிறது? அனைத்துக்கும் பதில்களை அறிந்ததோடு, அந்த குட்டி டைனோசரை காப்பாற்றினாரா ஷின் சான் என்று பதிலளிக்கிறது இப்படத்தின் மீதி.

சிரிப்பு வருகிறதா?

‘ஷின் சான்’ பாத்திரத்தைப் பதின்ம வயதில் இருப்பவர்களும், அதற்கு மேற்பட்டவர்களும் ரசிப்பதற்குக் காரணம், அதன் நகைச்சுவையான குணாதிசயம். எதைப் பற்றியும் கவலைப்படாமல், சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டு செய்துகொண்டும் திரிகிற ஒரு பாத்திரத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறு ரசிப்பதுதானே இயலாமைக்கான அழகு. அதுவே ஷின் சான் வீடியோவை நாம் ரசிக்கக் காரணமாக இருக்கிறது. அதுவே இப்படத்தை வெற்றி பெறச் செய்யப் போதுமானதாக இருக்கிறது.

இதுவரை நாம் பார்த்த ‘ஷின் சான்’ தமிழ் ‘டப்’ பதிப்புகளில் எத்தகைய குரல்களைக் கேட்டோமோ, அதுவே இப்படத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. ஆங்காங்கே ‘மிமிக்ரி’, சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி சிரிக்க வைத்திருக்கிறது வசனம். அதுவே இப்படத்தின் பலம்.

ஒரே மாதிரியான விஷயங்கள் திரும்பத் திரும்பத் திரையில் வந்துபோவது சலிப்பூட்டுகிற விஷயம். டைனோசர்கள் மாறி மாறி வந்து ஷின் சான் அண்ட் கோவிடம் அடி வாங்கிவிட்டு செல்கிற பின்பாதி அத்தகையதே.

அதையும் தாண்டி இப்படத்தை ரசிக்கிற வகையில் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஷினோபு சசாகி. மோரல் இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.

டோஷியுகி அரகவா ஹயாடோ மட்சுவோ, அகிஃபியூமி தடா ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.

பிரமாண்டத்தை வெளிக்காட்டுகிற வகையில் இதன் பிரேம்கள் அமைந்திருக்கின்றன. அவை ‘இது ஒரு ஷின் சான் படம்’ என்றுணர்த்துகின்றன.

இப்படம் சுமார் 106 நிமிடங்கள் திரையில் ஓடுகின்றன. சில இடங்களை வெட்டிக் கடாசியிருந்தால் 90 நிமிடங்களே ஓடக்கூடியதாக இருந்திருக்கும். அத்தனை நிமிடங்களும் சிரித்து, அதிர்ச்சியாகி, பின்னர் சிரித்து, குதூகலிக்கிற வகையில் திரையனுபவத்தைத் தந்திருக்கும். இப்போது அது மிஸ் ஆகியிருக்கிறது.

ஆனாலும், இந்த ‘ஷின் சான்: அவர் டைனோசர் ஸ்டோரி’ குழந்தைகளோடு அழைத்துச் சென்று குதூகலமாகக் காண்கிற ‘படமாக’ இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வழக்கமாக, ‘ஷின் சான் வீடியோ’ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்துவிட்டு வீட்டில் ‘அலப்பறை’ செய்வார்கள் குழந்தைகள். இந்த முறை அதனை தியேட்டரில் நிகழ்த்தச் செய்திருக்கிறது இந்தப் படம்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்

You might also like