‘நாடகச் சுடர்’ நிஜ நாடக இயக்க மு.ராமசாமி!

நாடகக் கலைஞர் பிரளயன்

பேராசிரியர் மு.ராமசாமி, தமிழில் நவீன நாடகச்செயல்பாடுகளை முன்னெடுத்த முன்னோடி நாடகச்செயற்பாட்டாளர்களில் ஒருவர்; தமிழின் மதிப்புமிக்க நாடக ஆளுமைகளில் ஒருவர்.

1978 ல் தொடங்கப்பட்ட நிஜ நாடக (Drama) இயக்கம் எனும் தனது நாடகக் குழுவினது செயற்பாடுகள் மூலம் தமிழ் நாடகப்பரப்பில் அறியப்பட்டவர்.

இராமசாமியின் ஊர் பாளையங்கோட்டை. பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டை அந்தோணியார் பள்ளியிலும், கல்லூரிப்படிப்பை முதுகலை வரை பாளையங்கோட்டைக் கல்லூரியிலும் படித்து முடித்தார்.

பேராசிரியர்கள் நா. வானமாமலை, லூர்து, தமிழவன் ஆகியோரது தொடர்பின் மூலம் நாட்டரிலக்கியம் நாட்டார் கலைகள் மீது ஆர்வம் ஏற்படுகிறது.

பின்னர் பேராசிரியர் முத்து சண்முகத்தினது வழி காட்டுதலின் கீழ் மதுரைப் பல்கலைக் கழகத்தில் தோற்பாவைக்கூத்து பற்றி கள ஆய்வு செய்து ஓர் ஆய்வுக்கட்டுரை வாசிக்கிறார்.

பின்னர் அதே பல்கலையில் நாட்டுப்புறவியல் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்கிறார். 1976 இல் பேரா. ராமானுஜத்தோடு தொடர்பு ஏற்படுகிறது.

1977 இல் ஜூன் மாதத்தில் காந்தி கிராமத்தில் 7 நாட்கள் நடந்த பயிற்சிப்பட்டறை பின்னர் அதே காந்தி கிராமத்தில் 1977 நவம்பர் முதல் 1978 ஜனவரி வரை பன்ஸிகவுல் தலைமையில் 70 நாட்கள் நடைபெற்ற தேசிய நாடகப்பள்ளி நடத்திய பயிற்சிப்பட்டறை இவற்றில் பங்கேற்கிறார்.

இதற்குப் பிறகு தனது நிஜ நாடக இயக்கம் எனும் குழுவின் மூலம் செயல்படத் தொடங்குகிறார்.

இவரது நிஜ நாடக இயக்கத்தின் செயல்பாடுகளை நான் கல்லூரி மாணவனாயிருக்கிறபோது சிறு பத்திரிகைகள் வாயிலாக அறிந்திருக்கிறேன்.

பெரும்பாலும் திறந்த வெளிகளே இவரது ஆடுகளங்கள்.

தனது நாடகம் (Drama) நடக்கிற தினத்தன்று, நாடகம் நடக்கும் இடம், நேரம், இவற்றை ஓர் அட்டையில் எழுதிக் கட்டிக்கொண்டு மு.ராமசாமி, ஒரு டவுன்பஸ்ஸில் ஏறிவிடுவாராம்.

இப்படி ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி தனது நாடகம் (Drama) பற்றியும் அது நிகழுமிடம், நேரம் பற்றியும் பரப்புரை செய்வாராம்.

இது போன்று மு. ராமசாமி பற்றிய செவி வழித்தகவல்களெல்லாம் அன்றைக்கு மாணவர்களாயிருந்த எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகமூட்டின.

நாடகக் கலையின் பால் எங்களை ஈர்த்தன என்றே சொல்லலாம். 1980 இல் சென்னை சோழ மண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் நடந்த பாதல் சர்க்கார் பட்டறையில் பங்கேற்கிறார்.

பின்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை தொடங்கப்பட்ட பிறகு அங்கு பணியில் சேர்கிறார்.

1984 இல் சங்கீத நாடக அகாதெமியில் இளம் இயக்குநர்கள் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டு ‘துர்க்கிர அவலம்’ எனும் மேடை நாடகத்தை தயார் செய்து மேடையேற்றி தேசிய அளவிலான விழாவில் பங்கேற்கிறார்.

கல்விப்புல பேராசிரியர் என்பதோடு குழுவை நடத்துகிற நாடகச்செயற்பாட்டாளர், நெறியாளுனர், நாடக ஆசிரியர், நாடகப் பயிற்றுனர், நாடக நடிகர் எனப் பன்முகம் கொண்டவராக தன்னை வளர்த்துக்கொண்டவர்.

துர்க்கிர அவலம், ஸ்பார்ட்டகஸ், இருள் யுகம், கலிலியோ, கட்டுண்ட பிராமதியஸ், கலகக்காரர் தோழர் பெரியார், தோழர்கள், வலியறுப்பு போன்றவை இவரது தயாரிப்பில் நெறியாள்கையில் உருவான முக்கியமான படைப்புகள் எனலாம்.

மேலும் தமிழின் முக்கிய படைப்புகளான சே.ராமனுஜத்தின் ‘வெறியாட்டம்’ ராஜு இயக்கத்தில் உருவான இந்திரா பார்த்தசாரதியின் ‘நந்தன் கதை’, ‘இறுதியாட்டம்’, பிரவீன் இயக்கத்தில் உருவான மேஜிக் லேண்டர்னின் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களில் பங்கேற்றது இங்கே தனித்தும் விரித்தும் பேச வேண்டியது.

1996 இல் வெளியான ‘தென் பாண்டிச்சிங்கம்’ தொடர் மூலம் இவர் சின்னத்திரை மற்றும் திரை நடிகராகவும் உருவெடுத்தார்.

ஜோக்கர், கேடி என்கிற கருப்புத் துரை போன்ற திரைப்படங்கள், கலர்ஸ் டிவியில் வெளியான ‘தறி’ என்கிற தொலைக்காட்சித் தொடர் இவரது திரை நடிப்பை உரத்துப்பேசுகிற இன்னொரு பரிமாணங்கள்.

மு.ராமசாமி என்று அறியப்படுகிற முனைவர் முருகையா ராமசாமி, பேராசிரியர், துறைத்தலைவர், பல்கலைக்கழக பதிவாளர், தொல்காப்பியர் மையத்தின் இயக்குநர் எனக் கல்விப் புலத்தில் பல பொறுப்புகளை வகித்தவர்.

தோற்பாவை நிழற்கூத்து என்னும் கலையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மதுரைப் பல்கலைக் கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.

2003 மார்ச்சு 14 அன்று மு.இராமசாமி தனது துணைவியாரான செண்பகம் ராமசாமி அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரை யாதவர் கல்லூரியில் முதல் நிகழ்த்துதலாக இவர் எழுதி நடித்து நெறியாள்கை செய்த கலகக்காரர் தோழர் பெரியார் நாடகத்தினை அரங்கேற்றினார். இந்நாடகம் (Drama) தொடர்ந்து இரண்டாண்டுகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 35 முறை மேடையேறுகிறது.

இதில் 15 மேடையேற்றங்களை தமுஎகசவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் ஏற்பாடு செய்திருந்தன என்பதை இங்கே மகிழ்வோடு குறிப்பிடலாம்.

தமிழ்நாட்டில் பல நாடக ஆளுமைகள், விற்பன்னர்கள் உள்ளனர். அவர்களில் எல்லோரும் ஒரு குழுவினை வழி நடத்துபவர்களாகவோ அல்லது ஒரு குழுவினது செயல்பாடுகளை முன்னெடுப்பவர்களாகவோ இருந்துவிடுவதில்லை.

தொடர்ந்து இயங்குகிற நாடகக் குழுக்கள் என்பது தமிழ்நாட்டுச்சூழலுக்கு மிகப்பெரும் பண்பாட்டுத்தேவையாக இருக்கிறது. இந்த வகையில் மு.ராமசாமி அவர்கள் ஒரு போற்றுதலுக்குரிய முன்னோடி.

இவர் தொடங்கிய நிஜ நாடக இயக்கம் தற்போது 43வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தனது நாடகக் குழுவின் மூலம் மூன்று முறை மாநிலம் தழுவிய நாடக விழாக்களை நடத்தியவர்.

ஒவ்வொரு ஆண்டும் தனது துணைவியார் நினைவு நாளில் நிஜநாடக இயக்கம் குழுவினது சார்பில் ஒரு நாடகத்தை மேடையேற்றுவதையும் ஒரு நூலையும் வெளியிடுவதையும் இவர் வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

மு.ராமசாமியின் சமீபத்திய நாடகம் (Drama) ‘ஏகன் – அநேகன்’ கணையாழி நவம்பர் – 2020 இதழில் வெளிவந்துள்ளது. இன்னும் இது மேடையேற்றம் காணவில்லை.

“வைதீகக் கலாச்சார அரசியலின் ஒரு பால பாடம்” என்ற பிரகடனத்துடன் எழுதப்பட்டுள்ள இக்குறு நாடகம் (Drama) சமகால மதவெறி அரசியலையும், சித்தாந்த மோதலையும் வெளிப்படையாகப் பேசுகிறது.

தொல் குடி வேதக்குடி எனும் எதிர்வுகளால் மட்டுமல்ல, “மகேசனின் ஏகத்திற்கு எதிரானது அநேகத்தின் அதிகாரம்! பிரம்மத்தின் புனிதத்திற்கு எதிரானது அபுனிதத்தின் அதிகாரம்! வேதத்தின் ஒற்றைக்கு எதிரானது பன்முகத்தின் அதிகாரம்!” என்று முழங்குகிறது இந்நாடகம் (Drama).

உண்மையில் இன்றைய கலாச்சார அரசியலின் முரண்பாட்டை, மோதலை மு.ரா நாடக வடிவமாக்கித் தந்துள்ளார். நூல் வடிவம் கண்ட இவரது படைப்புகளில் முக்கியமானவைகளாக இவற்றைச் சொல்லலாம்.

1.ரௌத்திரம் பழகு (நாடகங்கள்)
2. நடிப்பு-கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம்
3.நாடகம் (Drama) – திரை… இன்னுமே பேசலாம்!
4.இலக்கணமும் மொழியியலும்
5.1954 ராதா நாடகத் தடையும் நாடக சட்டமும்
6.பாதல் சர்க்கார்- முன்றாம் அரங்கு -நான்
7.நாடகம் (Drama) – பேச இன்னுமே இருக்கிறது
8.கலகக் காரர் தோழர் பெரியார்
9. வலி அறுப்பு
10.தோழர்கள்
11.தமிழ்ச் சமுகத்தில் கூத்து – நாடகம் (Drama)
12.நாடக அழகியல்
13.சாபம்!… விமோசனம்?
14. தமிழ் நாடகம் (Drama) – நேற்று இன்று நாளை போன்றவை முக்கியமானவை.

பேராசிரியர் மு.ராமசாமி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பணிகளிலும் தீவிரமான ஆர்வம் காட்டுபவர். இவர், ஆகாயத்தாமரைகளும் ஆகாத ஊருக்கு வழிகாட்டும் திசைகாட்டிகளும் என்ற நூலை வெளியிட்டார்.

பேராசிரியர் மு.ராமசாமி எழுதியிருக்கும் இந்நூல், அவர் துறை சார்ந்தது அல்ல. தற்போது உயர் நீதிமன்றத்தில் வழக்காக நடந்து வருகிற காமராசர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தேர்வில் நடந்த மோசடிகளை அம்பலப்படுத்துகிறது.

உண்மையில் இந்நூல் பல்கலைக்கழக வட்டாரங்களில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

களச்செயற்பாட்டாளர், அரசியல் அரங்கச்செயற்பாட்டாளர், வீதி நாடகம் (Drama) என்கிற மக்கள் கலையினை முன்னெடுத்த முன்னோடி, நிஜ நாடக இயக்கம் என்கிற நாடகக்குழுவை 45 ஆண்டுகளாக தளராது நடத்திவரும் ஒரு நாடக ஆளுமை இத்தகைய பல் திறன் கொண்ட பேராசிரியர் மு.ராமசாமி அவர்களுக்கு ‘நாடகச்சுடர்’ விருதினை அளிப்பதில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறது.

(தமுஎகச நடத்திய விருதுவிழாவில் பேரா. மு. ராமசாமி அவர்களுக்கு சிறந்த நாடக ஆளுமைக்கான முனைவர்.த.பரசுராமன் நினைவு ‘நாடகச்சுடர்’ விருது அளிக்கப்பட்டபோது வாசிக்கப்பட்ட உரை)

You might also like