நண்பர் மோகனை என்னால் மறக்கவே முடியாது!

இயக்குநர் மனோபாலா நெகிழ்ச்சி

அருமை நிழல்:

முதல் படம் சரியாக போகாத நிலையில், இரண்டு வருடங்களாக வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலா கையில் வெறும் 50 ரூபாயுடன் தவித்தபோது, நடிகர் மோகன் அவருக்கு இயக்குனராக வாய்ப்புக் கொடுத்தார். அப்போது புகழ்பெற்ற நடிகராக இருந்த மோகன், மனோபாலாவை வைத்து இயக்கினால் கால்ஷீட் தருவதாகக் கூறி வாய்ப்பு பெற்றுக் கொடுத்தார்.

நடிகர் மோகன் குறித்து ஒருமுறை நெகிழ்ச்சியுடன் பேசியிருந்த மனோபாலா, “என்னுடைய முதல் படம் ‘ஆகாய கங்கை’ படத்தில் கார்த்திக்கும் சுஹாசினியும் நடித்திருந்தார்கள். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இந்தப் படத்துக்குப் பிறகு எனக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. சான்ஸ் தேடிக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் படமே இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன்.

மோகன் கால்ஷீட் கிடைக்கறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அவ்வளவு சுலபமா கிடைச்சிடாது. காத்திருக்கணும். ஆனா, உடனே கால்ஷீட் தரேன்னு சொன்னார். பகலெல்லாம் நடிக்க ஏற்கெனவே கால்ஷீட் கொடுத்துட்டேன். அதனால தினமும் நைட்டு நடிச்சுக் கொடுக்கிறேன் என்று கூறினார். முழுக்க நைட்டுங்கிறதால, அதுக்குத் தகுந்த மாதிரி கதையை ரெடி பண்ணினார் கலைமணி சார். கிட்டத்தட்ட ஒரு இங்கிலீஷ் படம் மாதிரி பண்ணியிருந்தோம். மிகப்பெரிய ஹிட்டாச்சு. அந்தப் படம்… ‘பிள்ளைநிலா’. இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய உயரத்தை கொடுத்துச்சு.

சரியான சமயத்துல, மோகன் கொடுத்த வாய்ப்பு அது. அதுக்குப் பிறகு, எனக்கு வரிசையாக படங்கள் இயக்கும் வாய்ப்புகள் வந்தன. நானும் பிஸியான இயக்குநரானேன். வெற்றிப்பட இயக்குநர் என்று ஒரு ரவுண்டு வந்தேன். அப்புறம் ஸ்டில்ஸ் ரவி தயாரிச்ச படத்தையும் மோகனை வைத்து இயக்கினேன். நண்பர் மோகனை என்னால் மறக்கவே முடியாது” என்று கூறியிருந்தார்.

பட இடைவேளையின் போது தனது நண்பரும் நடிகருமான மோகனுக்கு இயக்குநர் மனோபாலா நெகிழ்ச்சியுடன் உணவு ஊட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

– நன்றி: முகநூல்பதிவு

#directormanobala #mohan #நடிகர்மோகன் #மனோபாலா #இயக்குனர்மனோபாலா #ஆகாயகங்கை #கார்த்திக் #சுஹாசினி #karthik #suhasini #manobala #மோகன்

You might also like