காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவிஞர் கு.மா.பா!

பத்திரிகையாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், வசனகர்த்தா, இயல் இசை நாடக மன்ற செயலாளர், மேல் சபை உறுப்பிநர், சிலம்புசெல்வர் ம.பொ.சி அவர்களின் தமிழரசு கழக செயலாளர் என பல பரிமாணங்களில் இயங்கியவர் கவிஞர்  கு.மா. பாலசுப்பிரமணியம்.

காலத்தால் அழியாத பாடல்களை எழுதியதுடன், தமிழ் அறிந்த, இலக்கணம் அறிந்த, ஒவ்வொரு வரியிலும் யாப்பும் அணியும் காத்து நின்று, தங்கத் தமிழ் வரிகளை தரமாக தந்த கவிஞன்.

பட்டுகோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி வரிசையில் இவருக்கும் தமிழ்த் திரையுலகில் ஒரு தனி இடம் உண்டு!

குறிச்சி மாரிமுத்து பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடையவர் கு.மா.பாலசுப்பிரமணியம்.

“சாந்தா… ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்? உன் இசையென்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே… பாடு சாந்தா.. பாடு!’  புகழ்பெற்ற இந்த வசனம் கு.மா.பா.வின் வரிகளே!

காருகுறிச்சி அருணாசலத்தோடு சேர்ந்து எஸ்.ஜானகி இசைத்த… “சிங்காரவேலனே தேவா…” பாடலை எழுதியதும் இவர் தான்!

“அமுதை பொழியும் நிலவே..’ – தங்கமலை ரகசியம்

“இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ – வீரபாண்டிய கட்டபொம்மன்

“சித்திரம் பேசுதடி… எந்தன் சிந்தை மயங்குதடி’, “காணா இன்பம் கனிந்ததேனோ…’ – சபாஷ் மீனா

“ஏமாறச் சொன்னது நானோ.. என்மீது கோபம் தானோ’ – நானும் ஒரு பெண்

“கனவின் மாயா லோகத்திலே.. நாம் கலந்தே உல்லாசம்  காண்போமே’ – அன்னையின் ஆணை

“மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு நானிலம் கொண்டாடுதே…’ -அம்பிகாபதி

“மலரும்… வான் நிலவும்… சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே…’ – மகாகவி காளிதாஸ்

“மதனா எழில் ராஜா நீ வாராயோ’- செல்லப்பிள்ளை

“உன்னைக் கண்தேடுதே… உன் எழில்’ – கணவனே கண்கண்ட தெய்வம்

போன்ற ஏராளமான காலத்தால் அழியாத இனிய பாடல்கள். 

“நிலவுக் கவிஞர்’ என பேர் சொல்லும் அளவிற்கு நிலவினைக் கொண்டாடி…ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்! மெல்லிசைப் பாடல்கள் மட்டுமின்றி துள்ளலான நடையை உடைய பாடல்களையும் எழுதி… தனது முத்திரையை பதித்தவர்!

“யாரடி நீ மோகினி’ – உத்தம புத்திரன்

“குங்குமப் பூவே.. கொஞ்சும் புறாவே’- மரகதம் (சந்திரபாபுவின் ஹிட் பாடல்)

“ஆடவாங்க அண்ணாத்தே..’- சக்கரவர்த்தி திருமகள்

“அஞ்சாத சிங்கம் என் காளை…’ – வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற இனிய பாடல்களே அதற்கு சிறந்த உதாரணங்கள்! இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பாவின் ஆஸ்தான கவிஞராக இருந்திருக்கிறார்!

“வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சபாஷ் மீனா’ ஆகிய படங்களுக்கு எல்லா பாடல்களையும் எழுதியவர் இவர் தான்!

“மஹாகவிகாளிதாஸ்’, ‘கொஞ்சும் சலங்கை’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை  வசனமும் எழுதி இருந்தார்!

சினிமாவில் இலக்கிய லட்சணங்களோடு பாடல்களை எழுதியவர் கு.மா.பா… தமிழின் இலக்கண விதி மாறாது எழுதினார்!

யாப்பிலக்கணம் முதல் அணியிலக்கணம் வரை அவரிடம் விளையாடின. இவ்வளவுக்கும் அவர் படித்தது வெறும் 6-ம் வகுப்பு மட்டுமே!

ஒரு கால கட்டத்தில் இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பாவின் ஆஸ்தான கவிஞராக இருந்திருக்கிறார்!

யாப்பு பிழறாது அவர் எழுதிய…

மகாகவி காளிதாஸ் பட பாடல் இதோ!

இதோ யாப்பிலக்கணம் கொண்ட அழகிய தமிழ்பாடல்!
இது இன்னிசை வெண்பா!
சின்னையா என்றழைத்த செங்கனிவாய் மூடியதோ
உண்ணய்யா என்றெடுத்து ஊட்டியகை வாடியதோ
அன்னையாள் கொண்ட அவலமிதை காண்பதற்கோ
கண்ணையான் பெற்றுள்ளேன் காளி
இது  நேரிசை வெண்பா
பூவில் இடம்கொள்ளப் போதாமல் என்னுடைய
நாவில் இடம்கொண்ட நாயகியே – நோவில்
முடக்குற்ற தாயிவளும் முன்போல் எழுந்து
நடக்கத் தருவாய் நலம்!
இது தான் யாப்பிலக்கிய வெண்பா!

அப்படத்தில்  “கட்டளைக் கலித்துறையில்’   அழகாக பாடியிருப்பார் கவிஞர்.
(ஒவ்வொரு அடியிலும் 16 எழுத்துக்கள்! ஒற்றெழுத்துகளை கணக்கில் கொள்ளக் கூடாது)

கடைசி வரியின் இறுதிச் சீர் “ஏ”காரத்தில் முடிய வேண்டும்!)
தங்கமே தாமரை மொட்டுகளாகி தலையெடுக்க
குங்குமம் தோய்ந்த முகப்பினில் வண்டு கொலுவிருக்க
பங்கயன் விந்தைப் படைப்பாகி நிற்கும் பசுங்கொடிமேல்
பொங்கியேபூத்த முழுநிலா வண்ணம் புறப்பட்டதே…
இப்படி ஒரு கவிஞன் அவருக்கு பின் சாத்தியமில்லை!
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு  80 களின் தொடக்கத்தில் கு.மா.பா…
“தூரத்து இடிமுழக்கம்’ என்ற படத்தில் பாடல் எழுதினார்

இறுதியாக பாடல் எழுதியது கங்கை அமரனின் இசையில் ‘கனவுகள் கற்பனைகள்’  என்ற படத்துக்காக.

1994-ம் ஆண்டு கு.மா.பா மறைந்த போது அவருக்கு வயது 74.

காலத்தால் அழியாத பாடல்களை எழுதி தமிழ் சினிமாவின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக திகழ்கிறார் கு.மா.பா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

  • ஜி. அசோக்

– நன்றி : தினமணி

#கவிஞர்குமாபாலசுப்பிரமணியம் #kurunchimarimuthubalasubramaniam #குமாபா #KuMaBalasubramoniam #KuMaBa #PoetKuMaBalasubramoniam #குமாபா #WriterKuMaBalasubramoniam #Balasubramoniam #குமாபாலசுப்பிரமணியம் #பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் #கண்ணதாசன் #வாலி #pattukottai #kalyanasundaram #kannadhasan #vaali #மபொசி #maposi

You might also like