பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கும் ஆயுள் தண்டனை!

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.

அதன்பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ. கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள்கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், கூட்டுச் சதி, தடயங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களைப் பகிர்தல் உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைதான 9 பேரும் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இவர்கள் மீது 2019-ம் ஆண்டு மே 21-ம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் பிறகு வழக்கு விசாரணை தாமதமானது.

அதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர்தரப்பு இறுதிவாதம் முடிவடைந்தது.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று (13.05.2025) அறிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

இந்நிலையில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like