சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விலகி ஒரு வாரம்கூட ஆகியிருக்காத நிலையில் விராட் கோலியின் இந்த முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
விராட் கோலியைப் பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே இந்த முடிவை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், ரோஹித் சர்மா விலகிய சூழலில் கோலியின் ஓய்வு முடிவை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் இருந்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.
இந்தச் சூழலில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (12.05.2025) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் விராட் கோலி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் இந்திய ஜெர்ஸியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன.
அந்தப் பயணம் இந்த அளவுக்கு என்னை அழைத்துச் செல்லும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
இந்தப் பயணம் நான் வாழ்நாள் முழுவதும் சுமந்து செல்லும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.
நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 30 சதம், 31 அரை சதம் உட்பட 9,230 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்து சாதனை படைப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் ஓய்வை அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி, இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்த 2 வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி விளையாடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், விராட் கோலியின் மறுபக்கத்தைப் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக ஆர்வம் செலுத்தும் விராட் கோலி, இதையே பிசினஸாகவும் செய்து வருகிறார்.
‘சிசெல்’ என்ற பெயரில் நாட்டில் பல்வேறு இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அவர் நடத்தி வருகிறார்.
மிக விரைவில் நாடு முழுவதும் 75 இடங்களில் இந்த உடற்பயிற்சி கூடங்களை விரிவுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் ‘ராங்’ (Wrogn) என்ற பெயரில் ஃபேஷன் துறையிலும் அவர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
விளையாட்டுத் துறை சார்ந்த தொழில்களிலும் ஆர்வம் செலுத்திவரும் விராட் கோலி, சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கில் ‘யுஏஇ ராயல்ஸ்’ அணியையும், புரோ ரெஸ்ட்லிங் லீகில் ‘பெங்களூரு யோதாஸ்’ அணியையும் வாங்கி நடத்தி வருகிறார்.
இத்தனை நிறுவனங்களை நடத்தினாலும் வீட்டில் வேலையாட்களை வைத்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் விராட் கோலி.
வீட்டு வேலைகளை மனைவி அனுஷ்காவுடன் பகிர்ந்துகொள்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளாராம். அத்துடன் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை, கணவன் – மனைவி இருவரும் இணைந்து கவனித்து வருகின்றனர்.
‘கோல்டன் டிராகன்’, ‘சாமுராய் வீரன்’ உள்ளிட்ட 4 உருவங்களை தன் உடலில் பச்சை குத்தி வைத்துள்ளார் விராட் கோலி. இவை தனக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தரும் என்பது அவரது நம்பிக்கை.
உணவு விஷயத்தில் சைவம்தான் கோலியின் தெரிவாக இருக்கிறது.
இதுபற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள அவர், “ஒரு காலத்தில் நான் அசைவத்தை விரும்பிச் சாப்பிடுவேன். ஆனால், இப்போது சைவ உணவுக்கு மாறிவிட்டேன்.
2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தின்போது என் கழுத்து எலும்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் பக்கவிளைவாகக் கை சுண்டுவிரலில் மரப்புத்தன்மை ஏற்பட்டு பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது.
இதுதொடர்பாக மருத்துவர்களை அணுகியபோது, அவர்கள் எனக்குச் சிகிச்சை அளித்ததுடன், அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட்டால், மேற்கொண்டு இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம் என்றும் பரிந்துரைத்தனர்.
அதனால் அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்க்கிறேன். எப்போதாவது மட்டும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
– பிரணதி.