ஒன்றுபட்டால் நமக்கே வெற்றி!

நம் நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில், அண்டை நாடுகள் எதாவது பிரச்சனையை உருவாக்குமானால், அதை வலுவாக ஒன்றுதிரண்டு அதை வெற்றிக் கொண்ட அனுபவம் ஏற்கனவே நமக்கு உண்டு.

பாகிஸ்தான் ஏற்கனவே அந்த முன் அனுபவத்தை பெற்றிருந்தபோதும், சென்ற மாதம் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய வன்முறை சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையானது. 

அந்தக் கொடுமையான தாக்குதலுக்கு துணை நின்றவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என்றாலும், அதற்கு பாகிஸ்தானிய அரசின் ஒத்துழைப்பும் வலுவாகவே இருந்தது.

இதையெல்லாம் உணர்ந்துதான் இந்தியா எல்லையோரத்தை வலுப்படுத்தி, தக்கப் பதிலடி கொடுத்திருக்கிறது.

இந்திய எல்லையோரம் பாகிஸ்தானிய ட்ரோன்களும் வெவ்வேறு விதமான அத்துமீறல்களும் தொடர்ந்து நடந்த நிலையில், துவக்கத்தில் பொறுமை காட்டி வந்த இந்தியா,

நிலைமை எல்லைமீறி இந்தியாவைப் பற்றி பெரும் தவறான வதந்திகளைப் பரப்பும் அளவிற்கு வீரியம் பெற்ற சூழலில், ராணுவ வலிமையைப் பெருக்கி, பயங்கரவாத இலக்கை குறி வைத்து தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளை அழித்திருக்கிறது.

தற்போது, பாகிஸ்தானிய பயங்கரவாதிகள், ராணுவத்தினரையும் சேர்த்து 140 பேர் வரை பலியானதாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது.

இரு வாரத்திற்கு மேலாக நீடித்து வந்த போர்ப் பதற்றத்தைக் கட்டுக்கு கொண்டுவந்ததில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலையீடு முக்கியமானதாக உணரப்பட்டாலும்,

இந்திய அளவில் பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி உள்ளிட்ட ஒற்றுமைக்குத் துணை நின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல இந்தியக் குடிமக்கள் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் மேலாக, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தத் தாக்குதலுக்கு உறுதுணையாக நேரடிக் களத்தில் நின்ற முப்படைத் தளபதிகளுக்கும் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கும் இந்தியா நன்றிக்கடன் பட்டிருக்கிறது. 

எல்லையோரத்திலும் காஷ்மீரிலும் நமது ராணுவ வீரர்கள் எத்தகைய இன்னலுக்கு இடையே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய இளைஞனும் செல்போன்கள் மீதான பார்வையை சற்றே ஒதுக்கிவிட்டு, உண்மையான வீரத்தின் மதிப்பை தேசிய உணர்வுடன் உணர்ந்திருப்பார்கள் என்று நம்பலாம்.

தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சியினரும் பொதுமக்களும் ஒருங்கிணைந்து நடத்தியப் பேரணி நம்முடைய தேசிய உணர்வுக்கு நல்லதோர் அடையாளம்.

மலிவான அரசியல் நோக்கங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து, தேசிய உணர்வை மையமாக வைத்து நம் மக்களையும் நாட்டையும் ஒருங்கிணைக்கும் இத்தகைய ஒற்றுமை உணர்வு எப்போதும் ஓங்கட்டும்.

You might also like